இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் தேர்வாகிறார் அனில் கும்ப்ளே?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் தேர்வாகிறார் அனில் கும்ப்ளே?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்து நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடருக்கும் கும்ப்ளே பயிற்சியாளராக நீடிப்பார் என்றும் அறியப்படுகிறது. 

இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளரான அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் வரும் 18-ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இதையடுத்து புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் இறங்கியுள்ளது பிசிசிஐ. தற்போது பயிற்சியாளராக உள்ள கும்ப்ளேவுக்குப் பொறுப்பு நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், பிசிசிஐ இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து கோலி - கும்ப்ளே இடையே மோதல் நிலவுவதாகச் செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. 

அனில் கும்ப்ளே பயிற்சியின் கீழ் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி, இந்த சீசனில் உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 13 ஆட்டங்களில் 10 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. 2 ஆட்டங்கள் சமன் ஆகின. அதேபோல், மேற்கிந்தியத் தீவுகளிலும் ஒரு டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது. 

இதுபோல கடந்த ஒருவருடத்தில் இந்திய அணி பல வெற்றிகளை அடைந்தபிறகும் அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்காததாலும் கோலி தொடர்புடைய சர்ச்சைகளாலும் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடந்துவருவதால் தற்சமயம் அமைதி காக்கும் கும்ப்ளே, போட்டி முடிவடைந்த பிறகு தனது மெளனத்தைக் கலைப்பார் என்றும் கூறப்பட்டது. 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளே விண்ணப்பித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான வீரேந்திர சேவாக்கும் விண்ணப்பம் செய்துள்ளார். சேவாக் தவிர, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி, முன்னாள் இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் பிபஸ், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தோடா கணேஷ், இந்திய 'ஏ' அணியின் முன்னாள் பயிற்சியாளரான லால்சந்த் ராஜ்புட் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுடன் அனில் கும்ப்ளேவும் போட்டியில் இருக்கிறார். இருந்தும் கும்ப்ளே மற்றவர்கள் போல பிசிசிஐக்குத் தனது விண்ணப்பத்தை அளித்துள்ளார். கடைசி நாளான மே 31-க்குப் பிறகு ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிரேக் மெக்டர்மாட்டும் விண்ணப்பித்துள்ளார்.

விண்ணப்பித்த நபர்களில் தகுதியானவர்களிடம் சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, விவிஎஸ்.லக்ஷ்மண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) நேர்க்காணல் நடத்தும். 

தற்போதைய நிலையில் அனில் கும்ப்ளே மீது பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்பட்டது. அதனால் சேவாக், டாம் மூடி இடையேதான் போட்டி இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. சேவாக்குக்குப் பயிற்சியளித்த அனுபவம் கிடையாது என்றாலும், அவருக்கு பிசிசிஐ நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால் அவர் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கும்ப்ளே மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, சாம்பியன்ஸ் டிராபியை அடுத்து நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடருக்கும் கும்ப்ளே பயிற்சியாளராக நீடிப்பார் என்று அறியப்படுகிறது. 

சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்தவுடன் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்காக 20-ம் தேதி மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணம் செய்கிறது இந்திய கிரிகெட் அணி. முதல் போட்டி ஜூன் 23 அன்று தொடங்குகிறது. எனவே புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய குறுகிய காலமே உள்ளதால் மேற்கிந்தியத் தொடருக்கும் பயிற்சியாளராக கும்ப்ளே நீடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, விவிஎஸ்.லக்ஷ்மண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவும் பிசிசிஐ அதிகாரிகளும் கும்ப்ளேவே இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. இதனால் இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே மீண்டும் தேர்வு பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com