சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதியில் இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா.
அரையிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.
அரையிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா.

இதன்மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.
லண்டன் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் உமேஷ் யாதவுக்குப் பதிலாக அஸ்வின் இடம்பெற்றார். தென் ஆப்பிரிக்க அணியில் வேயன் பர்னெலுக்குப் பதிலாக பெலுக்வாயோ சேர்க்கப்பட்டார்.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, தென் ஆப்பிரிக்காவின் இன்னிங்ûஸ குயின்டன் டி காக்கும், ஹஷிம் ஆம்லாவும் தொடங்கினர். இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீச, தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஜோடி ரன் சேர்க்க திணறியது. இதனால் 13-ஆவது ஓவரில்தான் அந்த அணி 50 ரன்களை எட்டியது.
பாண்டியா வீசிய 15-ஆவது ஓவரில் ஆம்லா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்ட, ஆட்டம் சூடுபிடித்தது. தொடர்ந்து வேகமாக ரன் சேர்க்க முயன்ற ஆம்லா, அஸ்வின் வீசிய 18-ஆவது ஓவரில் பவுண்டரியை விளாசிய கையோடு தோனியிடம் கேட்ச் ஆனார். அவர் 54 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 17.3 ஓவர்களில் 76 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து டி காக்குடன் இணைந்தார் டூபிளெஸ்ஸிஸ். இந்த ஜோடி சிறப்பாக ஆட, 22-ஆவது ஓவரில் 100 ரன்களை எட்டியது தென் ஆப்பிரிக்கா. இதன்பிறகு டி காக் 68 பந்துகளில் அரை சதம் கண்டார். அந்த அணி 24.2 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜடேஜா பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார் டிகாக். அவர் 72 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார்.
ரன் அவுட் திருப்புமுனை: இதையடுத்து களம்புகுந்த கேப்டன் டிவில்லியர்ஸ் 12 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்த நிலையிலும், டேவிட் மில்லர் 1 ரன்னிலும் ரன் அவுட்டாக, பின்னர் தென் ஆப்பிரிக்காவின் சரிவு தவிர்க்க முடியாததானது.
டூபிளெஸ்ஸிஸ் 50 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 36 ரன்கள் சேர்த்த நிலையில் பாண்டியா பந்துவீச்சில் போல்டானார். இதன்பிறகு ஒருபுறம் டுமினி போராட, மறுமுனையில் கிறிஸ் மோரீஸ் 4, பெலுக்வாயோ 4, ரபாடா 5, மோர்கல் 0, இம்ரான் தாஹிர் 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா 44.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு சுருண்டது. டுமினி 41 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் 3 பேர் ரன் அவுட்டாயினர். குறிப்பாக டிவில்லியர்ஸ், மில்லர் ஆகியோரின் ரன் அவுட் தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவாக அமைந்தது.
இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஷிகர் தவன் 78: பின்னர் ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 12 ரன்களில் நடையைக் கட்ட, ஷிகர் தவனுடன் இணைந்தார் கேப்டன் விராட் கோலி. ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி, பின்னர் வேகமாக ரன் சேர்க்க ஆரம்பித்தது. ஷிகர் தவன் அவ்வப்போது பவுண்டரிகளை பறக்கவிட, மறுமுனையில் கோலியும் தன் பங்குக்கு பவுண்டரிகளை விளாசினார். இதனால் 21 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இந்தியா.
இதன்பிறகு கிறிஸ் மோரீஸ் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி, 61 பந்துகளில் அரை சதம் கண்டார் தவன். அவரைத் தொடர்ந்து கோலி 71 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய தவன், இந்தியா 30.1 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவர் 83 பந்துகளில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 128 ரன்கள் குவித்தது.
இந்தியா வெற்றி: இதையடுத்து கோலியுடன் இணைந்தார் யுவராஜ் சிங். இந்த ஜோடி அசத்தலாக ஆட, இந்தியாவின் வெற்றி எளிதானது. டுமினி பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி, ஆட்டத்தை முடித்தார் யுவராஜ் சிங். இதனால் இந்தியா 38 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. கோலி 101 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 76, யுவராஜ் சிங் 25 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்கத் தரப்பில் மோர்ன் மோர்கல், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பூம்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அரையிறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்

வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள 2-ஆவது அரையிறுதியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன.
"பி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் ரன் ரேட் +1.370 ஆகும். திங்கள்கிழமை நடைபெறும் இலங்கை-பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் எந்த அணி வென்றாலும், இந்தியாவின் ரன் ரேட்டை எட்ட முடியாது.
எனவே "பி' பிரிவில் இந்தியாவின் முதலிடம் உறுதியாகியுள்ளது. அதனால் "ஏ' பிரிவில் 2-ஆவது இடத்தைப் பிடித்த வங்கதேசத்துடன் அரையிறுதியில் மோதுகிறது இந்தியா. இலங்கை-பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணி, "ஏ' பிரிவில் முதலிடத்தைப் பிடித்த இங்கிலாந்து அணியை முதல் அரையிறுதியில் சந்திக்கும். இந்த ஆட்டம் வரும் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.


51/8 இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 51 ரன்களுக்கு கடைசி 8 விக்கெட்டுகளை இழந்தது.


சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை தென் ஆப்பிரிக்காவுடன் 4 ஆட்டங்களில் மோதியுள்ள இந்திய அணி, அவையனைத்திலும் வெற்றி கண்டுள்ளது.


இந்தத் தொடரில் இந்திய அணி இதுவரை மொத்தம் 6 பேட்ஸ்மேன்களை ரன் அவுட் மூலம் வீழ்த்தியுள்ளது. இதுதான் இந்தத் தொடரில் ஓர் அணியால் செய்யப்பட்ட அதிகபட்ச ரன் அவுட்.
இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் டி காக்கின் சராசரி 74.11.

ஸ்கோர் போர்டு

தென் ஆப்பிரிக்கா
குயின்டன் டி காக் (பி) ஜடேஜா 53 (72)
ஹஷிம் ஆம்லா (சி) தோனி (பி) அஸ்வின் 35 (54)
டூபிளெஸ்ஸிஸ் (பி) பாண்டியா 36 (50)
டிவில்லியர்ஸ் ரன் அவுட் (பாண்டியா/தோனி) 16 (12)
டேவிட் மில்லர் ரன் அவுட் (பூம்ரா/கோலி) 1 (3)
ஜே.பி.டுமினி நாட் அவுட் 20 (41)
கிறிஸ் மோரீஸ் (சி) குமார் (பி) பூம்ரா 4 (8)
பெலுக்வாயோ எல்பிடபிள்யூ (பி) பூம்ரா 4 (11)
காகிசோ ரபாடா (சி) தோனி (பி) குமார் 5 (8)
மோர்ன் மோர்கல் (சி) கோலி (பி) குமார் 0 (1)
இம்ரான் தாஹிர் ரன் அவுட் (கோலி/தோனி) 1 (7)
உதிரிகள் 16
மொத்தம் (44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 191

விக்கெட் வீழ்ச்சி: 1-76 (ஆம்லா), 2-116 (டி காக்),
3-140 (டிவில்லியர்ஸ்), 4-142 (மில்லர்), 5-157 (டூபிளெஸ்ஸிஸ்),
6-167 (மோரீஸ்), 7-178 (பெலுக்வாயோ), 8-184 (ரபாடா),
9-184 (மோர்கல்), 10-191 (தாஹிர்).


பந்து வீச்சு

புவனேஸ்வர் குமார் 7.3-0-23-2
ஜஸ்பிரித் பூம்ரா 8-0-28-2
அஸ்வின் 9-0-43-1
ஹார்திக் பாண்டியா 10-0-52-1
ரவீந்திர ஜடேஜா 10-0-39-1


இந்தியா

ரோஹித் சர்மா (சி) டி காக் (பி) மோர்கல் 12 (20)
ஷிகர் தவன் (சி) டூபிளெஸ்ஸிஸ் (பி) தாஹிர் 78 (83)
விராட் கோலி நாட் அவுட் 76 (101)
யுவராஜ் சிங் நாட் அவுட் 23 (25)
உதிரிகள் 4
மொத்தம் (38 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு) 193
விக்கெட் வீழ்ச்சி: 1-23 (ரோஹித்), 2-151 (தவன்).


பந்து வீச்சு

காகிசோ ரபாடா 9-2-34-0
மோர்ன் மோர்கல் 7-1-38-1
பெலுக்வாயோ 5-0-25-0
கிறிஸ் மோரீஸ் 8-0-40-0
இம்ரான் தாஹிர் 6-0-37-1
ஜே.பி.டுமினி 3-0-17-0.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com