யுவ்ராஜ் சிங் 300: புத்துயிர் பெற்ற நாயகன்!

களத்திலேயே ரத்த வாந்தி எடுத்தார். மூச்சுவிட சிரமப்பட்டார். இந்தப் போராட்டத்துக்கு நடுவே உலகக்கோப்பையில் 'மேன் ஆஃப் தி சீரீஸ்' பட்டமும் பெற்றார்...
யுவ்ராஜ் சிங் 300: புத்துயிர் பெற்ற நாயகன்!

புற்றுநோயிலிருந்து மீண்டுவந்து வழக்கம்போல தன் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடரும் 35 வயது யுவ்ராஜ் சிங் இன்று தனது 300-வது ஒருநாள் போட்டியை விளையாடியுள்ளார்.  

எக்பாஸ்டனில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன. வங்கதேசத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் களமிறங்கியுள்ள யுவ்ராஜ், 300 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 5- ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர் (463 போட்டி), ராகுல் திராவிட் (340), முகமது அசாருதீன் (334), செளரவ் கங்குலி (308) ஆகியோர் மற்ற இந்தியர்கள் ஆவர். அதேநேரத்தில் சர்வதேச அளவில் மேற்கண்ட மைல்கல்லை எட்டும் 19-ஆவது வீரர் என்ற பெருமையைப் பெருகிறார் யுவ்ராஜ் சிங். இதுவரையில் அவர் 14 சதம், 52 அரை சதங்களுடன் 8,622 ரன்கள் குவித்துள்ளார்.

'நான் ஒரு அத்லெட். தினமும் ஆறு மணி நேரத்துக்கும் அதிகமாகப் பயிற்சி எடுக்கிறேன். காலை முதல் மாலை வரை தொடர்ந்து கிரிக்கெட் ஆடுகிறேன். ஒருநாளில் இவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குகிற என்னை எப்படி ஒரு நோய் தாக்கும்? என்று ஆரம்பத்தில் தமக்கு ஏற்பட்ட பிரச்னைகளை சட்டை செய்யாமல் இருந்த யுவ்ராஜ் சிங், பெரிய பாதிப்பிலிருந்து தப்பித்துவந்தது பெரிய அதிர்ஷ்டம். இந்திய கிரிக்கெட் செய்த புண்ணியம் என்று சொல்லாம்.

2011 உலகக்கோப்பையின்போது யுவ்ராஜ் படாதபாடு பட்டது யாருக்கும் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. சென்னையில் நடந்த மேற்கு இந்தியத் தீவுக்கு எதிரான மேட்சில் சதமடித்தபோது, களத்திலேயே ரத்த வாந்தி எடுத்தார் யுவ்ராஜ்.  மூச்சுவிட சிரமப்பட்டார். ஆனால் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அட்டகாசமாக விளையாடி இந்தியா உலகக்கோப்பையைக் கைப்பற்ற முதல் காரணமாக இருந்தார். அந்த உலகக்கோப்பைப் போட்டியில் 'மேன் ஆஃப் தி சீரீஸ்' பட்டம் பெற்றார். அந்தச் சமயத்தில் தோனிகூட, ‘யுவ்ராஜ் நிறைய வாந்தி எடுத்தார்' என்று பேட்டியளித்தார். யாருக்கும் அடுத்து நடக்கப்போவதை யூகிக்கமுடியவில்லை. 

உலகக்கோப்பை முடிந்த அடுத்த ஐந்தாவது நாள் ஐபிஎல் தொடங்கியது. வழக்கம்போல உடல் உபாதைகளை உதாசீனப்படுத்திவிட்டு ஐபிஎல்-லிலும் கலந்துகொண்டார் யுவ்ராஜ் சிங். அந்த வருடம் புணே அணிக்காக அதிக ரன்களை அடித்தவர், யுவ்ராஜ்தான். பிறகுதான் தன் உடல்நிலைமை மோசமாவதை உணர்ந்தார்.  

அடுத்த ஒருமாதம் முழுக்க பரிசோதனையிலேயே கழிந்தது. ஆனால், யாராலும் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. இந்தவேளையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் கலந்துகொண்டார். நல்லநேரம். இரண்டாவது டெஸ்டில் கையில் காயம் ஏற்பட்டதால் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்திலிருந்து பாதியில் விலகி, ஒழுங்காக மருத்துவமனைக்குச் செல்ல ஆரம்பித்தார் யுவ்ராஜ் சிங். 

அப்போது, மருத்துவர்களுக்கே யுவ்ராஜின் உடல்நிலை குறித்து நிறைய குழப்பங்கள் ஏற்பட்டன. என்னவிதமான நோய் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆறு மாதங்கள் பரிசோதனையிலேயே கழிந்தன.
இறுதியில் லண்டன் மருத்துவரான டாக்டர் ஹார்பர், யுவ்ராஜின் நுரையீரலில் mediastinal seminoma என்கிற அரிதான புற்றுநோய்க் கட்டி பரவியிருப்பதாகக் கண்டுபிடித்தார். 'ஆரம்பத்தில் நான் நம்பவில்லை. எனக்கெல்லாம் புற்றுநோய் வர வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் இதுதான் நோய் என்று முடிவானபிறகு உடனே அமெரிக்காவுக்குப் பறந்தேன்.' என்கிற யுவ்ராஜூக்கு நுரையீரலில் உள்ள புற்றுநோய்க் கட்டி ஆரம்ப நிலையில் இருந்ததால், அதை கீமோதெரபி மூலம் குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறி நம்பிக்கை அளித்துள்ளார்கள்.  

அமெரிக்காவின் இண்டியானாபொலிஸிலுள்ள IU Simon Cancer Centre என்கிற மருத்துவமனையில் யுவ்ராஜ் சிகிச்சை எடுத்துக்கொண்டார். 'கீமோதெரபி சிகிச்சையில் உட்கொண்ட மருந்துகளால் என் உடல் மிகவும் பலவீனமடைந்தது. முடியை இழந்தேன். நாளுக்கு நாள் நிறைய இழப்புகளையும் வேதனைகளையும் சந்தித்தேன். அழுது அழுதுதான் என் துயரத்தைப் போக்கினேன்' என்கிறார் யுவ்ராஜ். 

முதலிரண்டு கீமோதெரபி சிகிச்சையை வீட்டில் இருந்து மேற்கொண்ட யுவ்ராஜ், மூன்றாவது கீமோதெரபிக்கு மருத்துவமனைக்குச் செல்லவேண்டியிருந்தது. சிகிச்சைக் காலத்தில் ஒருநாளைக்கு ஒருமுறைதான் உணவு உட்கொண்டார். 1996ல் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்கிற சைக்கிள் வீரருக்கு டெஸ்டிகுலர் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டும், சிகிச்சையினால் குணமாகி, பிறகு, தொடர்ந்து 7முறை ஐரோப்பிய அளவிலான சைக்கிள் பந்தயங்களில் வெற்றி பெற்றார். இவருடைய புத்தகமும் ஆறுதல் வார்த்தைகளும் யுவ்ராஜூக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தன. ஆம்ஸ்ட்ராங்குக்கு மருத்துவம் பார்த்த நிபுணர்குழுதான் யுவ்ராஜூக்குச் சிகிச்சை அளித்தது. அமெரிக்காவில் கும்பிளேவும் லண்டனில் சச்சினும் யுவ்ராஜை நேரில் சந்தித்து உற்சாகமூட்டினார்கள். சக வீரர்கள் நண்பர்களாக இருந்து யுவ்ராஜைத் தேற்றிய தருணம் அது. 

அடுத்த வருட ஏப்ரலில் இந்தியாவுக்குத் திரும்பினார் யுவ்ராஜ். இனிமேல் வழக்கம்போல கிரிக்கெட் ஆடலாம் என்று மருத்துவர்கள் சொன்ன விநாடிமுதல் சுறுசுறுப்பு அடைந்தார். ஜூன் மாதம் முதல் பெங்களூரில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் கடுமையாகப் பயிற்சி எடுத்தார். செப்டெம்பரில் இலங்கையில் நடைபெறுகிற டி20 உலகக்கோப்பைப் போட்டியில் கலந்துகொள்ளவேண்டும் என்று இலக்கு வைத்துக்கொண்டு திட்டங்களை உருவாக்கினார். யுவ்ராஜ் நலம் பெறவேண்டும் என்று வேண்டாத ரசிகர்கள் இல்லை. மத்திய அரசும் தம் பங்குக்கு, அர்ஜூனா விருது அளித்து யுவ்ராஜை மேலும் குஷிப்படுத்தியது.

2011 நவம்பர் முதல் எந்த ஒரு கிரிக்கெட் மேட்ச்சிலும் பங்குபெறாமல் இருந்தார் யுவ்ராஜ் சிங். விடாமுயற்சிகளுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் வாழ்க்கைக்குத் திரும்பினார். ஒருநாள், டி20 என அவர் மீண்டும் ஆடியது சென்னையில்தான்.

2012 செப்டம்பர் மாதம் நியூஸிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டி20 போட்டியில் இடம்பிடித்தார் யுவ்ராஜ் சிங். அதன்பின் செப்டம்பரில் இலங்கையில் நடைபெற்ற டி20 போட்டிக்குத் தேர்வானார். இதனால் எல்லாம் யுவ்ராஜின் பிரச்னைகள் ஓயவில்லை. ரன்கள் எடுக்கத் தடுமாறுகிறார் மற்றும் சரியான உடற்தகுதியில்லை இல்லை போன்ற காரணங்களினால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போதும் யுவ்ராஜ் ஓயவில்லை. பிரான்சுக்குச் சென்று உடற்தகுதியை வலுப்படுத்தினார். மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 35 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து தன் திறமையை மீண்டும் வெளிப்படுத்தினார். ஒருநாள் அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து இந்திய டி20 அணியில் யுவ்ராஜுக்கு இடம் கிடைத்தது.

2012 டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இடம்பிடித்தார். அடுத்த ஒருவருடம் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் மீண்டும் ஒருநாள் அணியில் அவர் இடம்பெறவில்லை. கடந்த வருட ரஞ்சிப் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குத் தேர்வானார் யுவ்ராஜ் சிங். கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிராக 150 ரன்கள் எடுத்து தனது விஸ்வரூபத்தை நிரூபித்தார். இன்று 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடி சாதனை புரிந்துள்ளார்.

யுவ்ராஜ் சிங்கின் கேப்டன்கள்

100வது ஒருநாள்: கங்குலி
200-வது ஒருநாள்: தோனி
300-வது ஒருநாள்: கோலி

அதிக ஐசிசி அரையிறுதிப் போட்டிகளில் பங்கேற்பு

7 - தோனி / யுவ்ராஜ் சிங் 
6 - சச்சின், கோலி, ரோஹித் சர்மா

இதற்கிடையே யுவ்ராஜின் அருமையை ஒவ்வொருமுறையும் உணர்த்தியதில் ஐபிஎல் ஏலத்துக்குப் பங்குண்டு. 2014 ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணியால் ரூ. 14 கோடிக்கு வாங்கப்பட்டார். 2015-ல் டெல்லி அணி யுவ்ராஜை ரூ. 16 கோடிக்குத் தேர்வு செய்தது. 2016-ல் ரூ. 7 கோடிக்கு வாங்கியது சன் ரைசர்ஸ்.

நோயிலிருந்து மீண்டது யுவ்ராஜூக்கு மிகப்பெரிய மனமாற்றத்தைத் தந்திருக்கிறது. யூவிகேன் என்கிற ஒரு புற்றுநோயாளிகளுக்கான சேவை அமைப்பை உருவாக்கியுள்ளார். 'இந்தியாவுக்காக 12 வருடங்கள் ஆடிய காலத்தில் ஒவ்வொருநாளும் நான் எப்படி விளையாடுவேன், மற்றவர்கள் என்னை என்ன நினைப்பார்கள் என்கிற சிந்தனையிலேயே இருந்துவிட்டேன். பத்திரிகைகளும் விமரிசகர்களும் என்னைப் பற்றி நினைப்பதை மாற்றவேண்டும், அவர்களுக்கு என் திறமையை நிரூபிக்கவேண்டும் என்றே எண்ணியிருந்தேன். ஆனால், இப்போது அப்படிப்பட்ட துர்சிந்தனைகளே என்னிடம் இல்லை. இனிமேல் எந்த ஓர் அழுத்தமும் இல்லாமல், கிரிக்கெட்டை ரசித்து ரசித்து ஆடப்போகிறேன்.' என்கிறார்.

300-வது ஒருநாள் போட்டி குறித்த யுவ்ராஜ் சிங்கின் கருத்து: 300 ஒருநாள் போட்டி என்பது பெரிய சாதனை. இந்தியாவுக்காகத் தேர்வானபோது ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடிவிடவேண்டும் என்றுதான் எண்ணினேன். நடுவில் இன்னொருமுறை இந்தியாவுக்காக விளையாடமுடியுமா என எண்ணினேன். ஆனால், இன்று இந்த உயரத்தைத் தொடுவது மிகுந்த மகிழ்ச்சி
அளிக்கிறது. புற்றுநோயிலிருந்து மீண்டிருப்பது நான் ஒரு போராட்டக்காரன் என்பதை நிரூபித்துள்ளது. இன்னும் சில வருடங்கள் இந்தியாவுக்காக விளையாட ஆசைப்படுகிறேன் என்கிறார். 

யுவ்ராஜால் எதையும் செய்துகாட்டமுடியும். அப்படிப்பட்ட போராட்டக்காரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com