இறுதிச் சுற்றில் பாகிஸ்தான்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி யில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர்கள் முகமது ஹபீஸ், பாபர் ஆஸம்.
இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர்கள் முகமது ஹபீஸ், பாபர் ஆஸம்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி யில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் பாகிஸ்தான் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.
கார்டிஃப்பில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியில் ஃபார்மில் இல்லாத ஜேசன் ராய்க்கு பதிலாக ஜானி பேர்ஸ்டோவ் இடம்பெற்றார். பாகிஸ்தான் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிருக்குப் பதிலாக அறிமுக வீரர் ருமான் ரயீஸும், ஃபாஹீம் அஷ்ரஃப்புக்குப் பதிலாக ஷதாப் கானும் சேர்க்கப்பட்டனர்.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ்}அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவர்களில் 34 ரன்கள் சேர்த்தது. அலெக்ஸ் ஹேல்ஸ் 13 ரன்கள் சேர்த்த நிலையில் ருமான் ரயீஸ் பந்துவீச்சில் பாபர் ஆஸமிடம் கேட்ச் ஆனார்.
இதையடுத்து ஜானி பேர்ஸ்டோவுடன் இணைந்தார் ஜோ ரூட். நிதானமாக ஆடிய இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தானின் மோசமான பீல்டிங்கால் இரண்டு முறை ஆட்டமிழப்பதிலிருந்து தப்பிய பேர்ஸ்டோவ் 57 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சேர்த்து ஹசன் அலி பந்துவீச்சில் ஹபீஸிடம் கேட்ச் ஆனார்.
இதையடுத்து கேப்டன் இயான் மோர்கன் களமிறங்க, மறுமுனையில் போராடிய ஜோ ரூட் 56 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் களமிறங்க, மறுமுனையில் மோர்கன் 33 (53 பந்துகளில்), ஜோஸ் பட்லர் 4, மொயீன் அலி 11, ஆதில் ரஷித் 7 என அடுத்தடுத்து வெளியேற, இங்கிலாந்து அணி ஆட்டம் கண்டது.
ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் தனிநபராகப் போராடிய பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்திருந்தபோது 8-ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அவர் 64 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அதில் பவுண்டரி எதுவும் அடிக்கவில்லை. இதன்பிறகு பிளங்கெட் 9, மார்க் உட் 3 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 211 ரன்களுக்கு சுருண்டது.
பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும், ஜுனைத் கான், ருமான் ரயீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அசார் அலி 76: பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸை அசார் அலி-ஃபகார் ஜமான் ஜோடி அசத்தலாக தொடங்கியது. முதல் ஓவரிலேயே சிக்ஸரை விளாசி அதிரடியில் இறங்கினார் ஜமான். ஒருபுறம் அசார் அலி நிதானம் காட்ட, மறுமுனையில் ஜமான் தனக்கே உரிய பாணியில் அதிரடியாக ரன் சேர்க்க, அப்போதே இங்கிலாந்தின் தோல்வி உறுதியாகிவிட்டது.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜமான் 49 பந்துகளில் அரை சதமடிக்க, 18-ஆவது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது பாகிஸ்தான். அவரைத் தொடர்ந்து அசார் அலி 68 பந்துகளில் அரை சதம் கண்டார். அந்த அணி 21.1 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்திருந்தபோது ஜமான் விக்கெட்டை இழந்தது. அவர் 58 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து அசார் அலியுடன் இணைந்தார் பாபர் ஆஸம். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்தது. அசார் அலி 100 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் குவித்து ஜேக் பால் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
பாகிஸ்தான் வெற்றி: இதையடுத்து பாபர் ஆஸமுடன் இணைந்தார் முகமது ஹபீஸ். இந்த ஜோடி அதிரடியாக ஆட, பாகிஸ்தானின் வெற்றி எளிதானது. குறிப்பாக சிக்ஸரையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்ட ஹபீஸ், ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி ஆட்டத்தை முடித்தார். இதனால் பாகிஸ்தான் 37.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. பாபர் ஆஸம் 45 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 38, முகமது ஹபீஸ் 21 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஜேக் பால், ஆதில் ரஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஹசன் அலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com