இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது யார்? இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்

எக்பாஸ்டனில் வியாழக்கிழமை நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன.
இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது யார்? இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்

எக்பாஸ்டனில் வியாழக்கிழமை நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் வங்கதேச அணி கடினமான பிரிவில் இடம்பெற்றிருந்தபோதிலும், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதுதவிர பலம் வாய்ந்த நியூஸிலாந்து அணியையும் தோற்கடித்துள்ளது. கணிக்க முடியாத வகையில் விளையாடி வரும் அந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. வங்கதேசம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுமானால், அது அந்த அணிக்கு மிகப்பெரிய வரலாறாக அமையும்.
வங்கதேசத்தோடு ஒப்பிடுகையில் இந்திய அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாகவே உள்ளது. பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ரோஹித் சர்மா}ஷிகர் தவன் ஜோடி இந்த ஆட்டத்திலும் வலுவான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்பலாம். மிடில் ஆர்டரில் கேப்டன் விராட் கோலி, யுவராஜ் சிங், தோனி, கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள். இவர்களில் கேதார் ஜாதவ் தவிர, எஞ்சிய அனைவருமே நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.
வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, ஹார்திக் பாண்டியா கூட்டணி பலம் சேர்க்கிறது. தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை மிரட்டிய புவனேஸ்வர் குமார், பூம்ரா கூட்டணி, வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என நம்பலாம். சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா கூட்டணி பலம் சேர்க்கிறது. ஒருவேளை கூடுதல் வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்குவது என கோலி முடிவெடுத்தால், அஸ்வின் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
வங்கதேச அணி தமிம் இக்பால், செளம்ய சர்க்கார், சபீர் ரஹ்மான், முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்ஹசன், மகமதுல்லா என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இந்தத் தொடரில் தமிம் இக்பாலின் சராசரி 70 ஆகும். அவர் எப்போதுமே இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடியவர் என்பது கூடுதல் பலமாகும். நியூஸிலாந்துக்கு எதிராக சதமடித்த ஷகிப் அல்ஹசன், மகமதுல்லா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் மோர்ட்டஸா, முஸ்தாபிஜுர் ரஹ்மான், தஸ்கின் அஹமது, ரூபெல் ஹுசைன் கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் ஷகிப் அல்ஹசன், மொஸாதீக் ஹுசைன் கூட்டணியும் பலம் சேர்க்கிறது.
இந்தியா (உத்தேச லெவன்): ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), யுவராஜ் சிங், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின்/ உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா.
வங்கதேசம் (உத்தேச லெவன்): தமிம் இக்பால், செளம்ய சர்க்கார், சபீர் ரஹ்மான், முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), ஷகிப் அல்ஹசன், மகமதுல்லா, மொஸாதீக் ஹுசைன், தஸ்கின் அஹமது, மஷ்ரபே மோர்ட்டஸா (கேப்டன்), ரூபெல் ஹுசைன், முஸ்தாபிஜுர் ரஹ்மான்.
யுவராஜ் சிங் 300
வங்கதேசத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் களமிறங்குவதன் மூலம் 300 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 5- ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெறுகிறார் யுவராஜ் சிங். சச்சின் டெண்டுல்கர் (463 போட்டி), ராகுல் திராவிட் (340), முகமது அசாருதீன் (334), செளரவ் கங்குலி (308) ஆகியோர் மற்ற இந்தியர்கள் ஆவர்.
அதேநேரத்தில் சர்வதேச அளவில் மேற்கண்ட மைல்கல்லை எட்டும் 19-ஆவது வீரர் என்ற பெருமையைப் பெருகிறார் யுவராஜ் சிங். இதுவரையில் அவர் 14 சதம், 52 அரை சதங்களுடன் 8,622 ரன்கள் குவித்துள்ளார்.

போ‌ட்டி நேர‌ம்: பி‌ற்​ப​க‌ல் 3  

 நேரடி ஒளி​ப​ர‌ப்பு:  ‌ஸ்டா‌ர்  ஸ்போர்‌ட்‌ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com