அதிவேக 8000 ரன்கள் பட்டியலில் தோனி! இது எப்படிச் சாத்தியம்?

அதிவேக 8000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் தோனி 6-ம் இடத்தில் உள்ளார். பெரும்பாலும் 30 ஓவர்களுக்குப் பிறகு களமிறங்கும்...
அதிவேக 8000 ரன்கள் பட்டியலில் தோனி! இது எப்படிச் சாத்தியம்?

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி 4-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் கோலி 96 ரன்கள் எடுத்ததுடன் ஒருநாள் போட்டியில் 8000 ரன்களையும் கடந்தார். ஒருநாள் போட்டியில் குறைந்த இன்னிங்ஸ்களில் (175 இன்னிங்ஸ்) 8000 ரன்களைக் கடந்தவர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் கோலி. 

அதிவேக 8000 ரன்கள்

கோலி: 175 இன்னிங்ஸ்
டிவில்லியர்ஸ்: 182 இன்னிங்ஸ்
கங்குலி: 200 இன்னிங்ஸ்
டெண்டுல்கர்: 210 இன்னிங்ஸ்
லாரா: 211 இன்னிங்ஸ்
தோனி: 214 இன்னிங்ஸ்

இந்தப் பட்டியலில் ஆச்சர்யமான அம்சம், தோனி 6-ம் இடத்தில் இருப்பது. பெரும்பாலும் 5-வது, 6-வது வீரராக, 30-வது ஓவருக்குப் பிறகு களமிறங்கும் தோனி எப்படி இந்தப் பட்டியலில் சேர்ந்தார்? அதிலும் கங்குலி, சச்சின், லாரா ஆகியோருக்கு மிக நெருக்கத்தில்!

இன்னும் சொல்லப் போனால்...சயித் அன்வர், ஹெயின்ஸ், பாண்டிங், கெய்ல், மார்க் வாக், காலிஸ், ராகுல் டிராவிட், கில்கிறிஸ்ட், சேவாக், அரவிந்த் டி சில்வா, சங்கக்காரா, அசாரூதின், ஜெயசூர்யா போன்ற தொடக்க மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு 8000 ரன்களைத் தொட தோனியை விடவும் அதிக இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டிருக்கின்றன.  

சராசரி ரன்கள் என்றால்கூட புரிந்துகொள்ளலாம். காரணம், பல போட்டிகளில் தோனி ஆட்டமிழக்காமல் இருப்பார். ஆனால் அதிகவேக 8000 ரன்கள் பட்டியலில் தோனிக்கு 6-வது இடம் என்பது உண்மையிலேயே ஆச்சர்யமாக உள்ளது. 

இது தோனியின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள இச்சாதனை இன்னொரு காரணமாக அமைகிறது. பெரும்பாலும் 30 ஓவர்களுக்குப் பிறகு ஆடவந்தாலும் சொதப்பாமல் ஆடியிருக்கிறார். கிடைத்த வாய்ப்புகளில் அதிக ரன்கள் குவித்துள்ளார். அவுட் ஆஃப் பார்ம் என்பது குறைவாக நிகழ்ந்துள்ளது. 

35 வயது தோனி இதுவரை 290 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 9338 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி ரன்கள் 51.02. ஸ்டிரைக் ரேட் 89.14. 10 சதங்கள் 62 அரை சதங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com