டிஎன்பிஎல் போட்டியில் ரெய்னா, யூசுப் பதான் பங்கேற்க பிசிசிஐ அனுமதி மறுப்பு!

வெளிமாநில வீரர்கள் இந்த வருட தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாட பிசிசிஐ அனுமதி மறுத்துள்ளது...
டிஎன்பிஎல் போட்டியில் ரெய்னா, யூசுப் பதான் பங்கேற்க பிசிசிஐ அனுமதி மறுப்பு!

சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் உள்ளிட்ட வெளிமாநில வீரர்கள் இந்த வருட தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாட பிசிசிஐ அனுமதி மறுத்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர்ஜயன்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 

இந்த வருட டிஎன்பிஎல் போட்டியில் பிரபல வீரர்கள் பலர் இடம்பெறவுள்ளார். கெளதம் கம்பீர் ஏதாவதொரு டிஎன்பிஎல் அணியின் ஆலோசகராகப் பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் போன்ற பிரபல வீரர்களும் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான ரெய்னா மற்றும் இந்திய அணியில் விளையாடியுள்ள யூசுப் பதான் ஆகிய பிரபல வீரர்கள் டிஎன்பிஎல்-லிலும் விளையாடுவது தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டு டிவிஷன் லீக் அணியான கிராண்ட் ஸ்லாமில் ரெய்னா இணைந்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் டிஎன்பிஎல் போட்டியில் விளையாடத் தகுதி பெறுகிறார்.

ரெய்னா மட்டுமல்லாமல் பிரபல ஐபிஎல் வீரர்கள் பலரும் இந்த வருட டிஎன்பிஎல்-லில் இணைந்துள்ளதால் இந்த வருட டிஎன்பில் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சுரெய் ரெய்னா, யூசுப் பதான், மனோஜ் திவாரி, உன்முக்த் சந்த், சஞ்சு சாம்சன், மனன் வோஹ்ரா, அசோக் டிண்டா, சந்தீப் சர்மா, சஹால், பியூஷ் சாவ்லா, பவன் நெகி, பசில் தம்பி, ராகுல் திருப்பதி என முக்கியமான ஐபிஎல் வீரர்கள் இந்த வருட டிஎன்பிஎல் ஏலத்தில் பங்குபெற உள்ளார்கள். மொத்தமாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த 88 வீரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளார்கள். இவர்களில் இருந்து 24 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்படுவார்கள். 

டிஎன்பிஎல் விதிமுறைகளின்படி ஒவ்வொரு அணியும் 3 வெளிமாநில வீரர்களைச் சேர்த்துக்கொள்ளலாம். அதில் இருவர் போட்டியில் விளையாடும் அணியில் இடம்பெறலாம்.

ஜுன் 23 அன்று ஏலம் நடைபெறுகிறது. டிஎன்பிஎல் போட்டி ஜுலை 22 அன்று தொடங்குகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிர கிரிக்கெட் வீரரும் சமீபத்தில் ஐபிஎல் போட்டியில் கவனம் பெற்றவருமான ராகுல் திரிபாதி டிஎன்பிஎல் போட்டியில் விளையாடுவது குறித்து பிசிசிஐக்குக் கடிதம் எழுதியது மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம். மேலும் ராகுல் திரிபாதி டிஎன்பில்-லில் விளையாட அனுமதியும் தரவில்லை.

இதையடுத்து வெளிமாநில வீரர்கள் டிஎன்பில் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது. இந்த விதிமுறை எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். மாநில சங்கங்கள் மற்ற மாநில வீரர்களைத் தங்களுடைய டி20 போட்டியில் அனுமதிக்கக்கூடாது என்றும் தனது கடிதத்தில் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது. 

இந்த உத்தரவை எதிர்த்து பிசிசிஐயிடம் மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. பியூஷ் சாவ்லா உள்ளிட்ட பல வெளிமாநில கிரிக்கெட் வீரர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு லீக் போட்டிகளிலும் அவர்கள் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். அவர்களை ஒரேடியாக வெளிமாநில கிரிக்கெட் வீரர்கள் என்று ஒதுக்கிவிடமுடியாது. எல்லா வீரர்களும் இந்தியாவுக்குள்தான் விளையாடுகிறார்கள். இதை ஏன் பிசிசிஐ தடுக்கவேண்டும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தரப்பு கூறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com