சாம்பியன்ஸ் டிராபியை வென்றது பாகிஸ்தான்: 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.
சாம்பியன்ஸ் டிராபியை வென்றது பாகிஸ்தான்: 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும்.

லண்டன் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. காயத்திலிருந்து குணமடைந்த முகமது ஆமிர் அணிக்குத் திரும்பியதைத் தொடர்ந்து ருமான் ரயீஸ் நீக்கப்பட்டார்.

ஸமானை காப்பாற்றிய நோ-பால்: இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தானின் இன்னிங்ஸை அசார் அலியும்,

ஃபகார் ஸமானும் தொடங்கினர். புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரை அசார் அலி மெய்டனாக்க, அடுத்த ஓவரை வீசிய பூம்ரா 2 ரன்களைக் கொடுத்தார்.

இதன்பிறகு பூம்ரா வீசிய 4-ஆவது ஓவரில் ஃபகார் ஸமான் (3 ரன்களில் இருந்தபோது) தோனியிடம் கேட்ச் ஆனார். ஆனால் அது நோ-பாலாகவே, பெவிலியனை நோக்கி பாதி தூரம் சென்ற ஃபகார் ஸமான், மீண்டும் களத்துக்கு திரும்பினார். அதே ஓவரில் அவர் ஒரு பவுண்டரியை விளாச, ஆட்டம் சூடுபிடித்தது. அவருக்கு பக்கபலமாக அசார் அலி ஆட, 18 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது பாகிஸ்தான்.

இதன்பிறகு அசார் அலி 61 பந்துகளில் அரை சதத்தை எட்ட, ஜடேஜா வீசிய 20-ஆவது ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசி 60 பந்துகளில் அரை சதம் கண்டார் ஃபகார் ஸமான். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த ஜோடி, பாகிஸ்தான் 23 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. அசார் அலி 71 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார்.

ஸமான் சதம்: இதையடுத்து பாபர் ஆஸம் களமிறங்க, ஜடேஜா வீசிய 26-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரையும், இரு பவுண்டரிகளையும் பறக்கவிட்டார் ஸமான். அஸ்வின் வீசிய அடுத்த ஓவரையும் விட்டுவைக்காத ஸமான், அதில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்டினார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஸமான், அஸ்வின் வீசிய 31-ஆவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியை விரட்டி, 92 பந்துகளில் சதம் கண்டார். இது அவருடைய முதல் சதமாகும். பாகிஸ்தான் 33.1 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்திருந்தபோது ஸமானின் விக்கெட்டை இழந்தது. அவர் 106 பந்துகளில் 3 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் குவித்து பாண்டியா பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 63 பந்துகளில் 72 ரன்கள் குவித்தது.
 

ஹபீஸ் அதிரடி: இதன்பிறகு களம்புகுந்த ஷோயிப் மாலிக் 12 ரன்களில் வெளியேற,முகமது ஹபீஸ் களம்புகுந்தார். அவர், வந்தவேகத்தில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை விளாசி, அதிரடியில் இறங்கினார். இதனிடையே அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆஸம், 52 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாதவிடம் கேட்ச் ஆனார்.

இதையடுத்து ஹபீஸுடன் இணைந்தார் இமாத் வாசிம். இந்த ஜோடி வெளுத்து வாங்க, 46-ஆவது ஓவரில் 300 ரன்களைக் கடந்தது பாகிஸ்தான். தொடர்ந்து அதிரடி காட்டிய ஹபீஸ் 34 பந்துகளில் அரை சதம் கண்டார். இறுதியில் பாகிஸ்தான் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது.

ஹபீஸ் 37 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 57, இமாத் வாசிம் 21 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார், ஹார்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
 

அதிர்ச்சித் தொடக்கம்: பின்னர் ஆடிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. இந்திய அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இழந்தது. முகமது ஆமிர் வீசிய முதல் ஓவரின் 3-ஆவது பந்தில் ரோஹித் வெளியேற, பின்னர் வந்த கேப்டன் கோலி 5 ரன்கள் சேர்த்த நிலையில் ஆமிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போதே இந்தியாவின் தோல்வி உறுதியாகிவிட்டது.

இதையடுத்து ஷிகர் தவனுடன் இணைந்தார் யுவராஜ் சிங். இந்த ஜோடி 25 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஷிகர் தவன் 22 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் ஆமிர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸிடம் கேட்ச் ஆக, தோனி களம்புகுந்தார்.
 

பாண்டியா சிக்ஸர் மழை: இந்தியா 54 ரன்களை எட்டியபோது யுவராஜ் சிங் 22 ரன்களில் ஆட்டமிழக்க, தோனி 4 ரன்களில் நடையைக் கட்டினார். இதையடுத்து ஹார்திக் பாண்டியா களமிறங்க, மறுமுனையில் நின்ற கேதார் ஜாதவ் 9 ரன்களில் நடையைக் கட்டினார்.

இதையடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்க, மறுமுனையில் பாண்டியா வெளுத்து வாங்கினார். ஷதாப் கான் வீசிய 23-ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய பாண்டியா, 32 பந்துகளில் அரை சதம் கண்டார்.

தொடர்ந்து வேகம் காட்டிய அவர், ஃபகார் ஸமான் பந்துவீச்சில் 2 சிக்ஸர்களை விளாச, 26 ஓவர்களில் 152 ரன்களை எட்டியது இந்தியா. ஆனால் ஹசன் அலி வீசிய அடுத்த ஓவரில் பாண்டியாவை தேவையில்லாமல் ரன் அவுட்டாக்கினார் ஜடேஜா. இதனால் 43 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் குவித்த பாண்டியா ஏமாற்றத்தோடு வெளியேறினார்.

இதன்பிறகு ஜடேஜா 15 ரன்களில் வெளியேற, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 30.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு சுருண்டது இந்தியா.

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர், ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஃபகார் ஸமான் ஆட்டநாயகனாகவும், ஹசன் அலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
 

ரூ.14 கோடி பரிசு
கோப்பையை வென்ற பாகிஸ்தானுக்கு ரூ.14 கோடியும், இறுதிச் சுற்றில் தோற்ற இந்தியாவுக்கு ரூ.7 கோடியும் பரிசாக வழங்கப்பட்டன.
 

13 வைடு, 3 நோ-பால்...
இந்த ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் 25 ரன்களை உதிரிகளாக வழங்கினர். இதில் 13 வைடுகள், 3 நோ-பால்களும் அடங்கும். குறிப்பாக பூம்ரா அதிக அளவில் வைடுகளை வீசினார். இதுதவிர இந்தியாவின் பீல்டிங்கும் மோசமாக அமைந்தது. ஆரம்பத்தில் இந்திய அணி 3 ரன் அவுட் வாய்ப்புகளை கோட்டைவிட்டது பின்னடைவாக அமைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com