டாஸ் வென்றால் பேட்டிங் செய்ய வேண்டும்: ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை!

பேட்டிங்கை தேர்வு செய்து, பெரிய அளவிலான ஸ்கோரை குவித்து எதிரணிக்கு நெருக்கடி...
டாஸ் வென்றால் பேட்டிங் செய்ய வேண்டும்: ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும்.

லண்டன் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. காயத்திலிருந்து குணமடைந்த முகமது ஆமிர் அணிக்குத் திரும்பியதைத் தொடர்ந்து ருமான் ரயீஸ் நீக்கப்பட்டார். டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. ஆனால் பிறகு ஆடிய இந்திய அணியோ 30.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு சுருண்டது இந்தியா. 

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர், ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஃபகார் ஸமான் ஆட்டநாயகனாகவும், ஹசன் அலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடி தொடக்க வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் டாஸில் எடுக்கப்படும் முடிவு குறித்து கூறியதாவது: 

சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் நானோ அல்லது ஆஸ்திரேலிய அணியோ டாஸ் வென்றால், அதில் பேட்டிங்கை தேர்வு செய்து, பெரிய அளவிலான ஸ்கோரை குவித்து எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிப்போம். இந்த ஒரு போட்டியை வைத்து கோலியின் தலைமைப் பண்பை முடிவு செய்யக்கூடாது. இந்திய அணி சிறப்பாகவே விளையாடியது. ஆனால் ஒன்று, முக்கியமான போட்டியில் ஜெயிக்கமுடியாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.

அதேபோல, சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பு பாகிஸ்தான் முன்னாள் வீரர் இம்ரான் கான் கூறியதாவது: 

குரூப் சுற்றில் இந்தியாவிடம் கண்ட தோல்விக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க இந்த இறுதி ஆட்டம் பொன்னான வாய்ப்பாகும். குரூப் சுற்றில் இந்தியாவிடம் தோற்றது நமக்கு மிகப்பெரிய அவமானத்தைத் தந்தது. எனவே நமது பெருமையை மீட்க இந்த ஆட்டம் நல்ல வாய்ப்பாகும். கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது டாஸ் வென்றால், இந்தியாவை பேட் செய்ய அழைக்கக் கூடாது. இந்திய அணியில் வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்கள் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை குவித்துவிட்டால், அதனால் நமக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் என்றார்.

ஆனால் விராட் கோலியின் முடிவு வேறாக இருந்துள்ளது. முடிவும் சாதகமாக அமையவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com