ஆறுதல் கிடைக்குமா? வெள்ளி முதல் மே.இ. தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்!

சாம்பியன்ஸ் டிராபியை அடுத்து இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது... 
ஆறுதல் கிடைக்குமா? வெள்ளி முதல் மே.இ. தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்!

சாம்பியன்ஸ் டிராபியை அடுத்து இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. இதற்காக இந்திய அணியினர் இன்று பார்படோஸ் செல்லவுள்ளார்கள். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஒரேயொரு டி20 ஆட்டத்தில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்குப் பதிலாக இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 

ரோஹித் சர்மா காயத்திலிருந்து மீண்ட பிறகு ஐபிஎல் போட்டி, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் தொடர்ச்சியாக விளையாடிவிட்டார். அவருக்கு மீண்டும் காயம் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையிலேயே மேற்கிந்தியத் தீவுகள் தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. பூம்ராவும் தொடர்ந்து விளையாடி வருவதால், அவருடைய பணிச்சுமையை குறைக்கும் வகையில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. பூம்ரா இடம்பெறாததால், முகமது சமிக்கு இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாகும். 

இந்தியா - மே.இ. தீவுகள் ஒருநாள் தொடர் வரும் 23-ஆம் தேதி டிரினிடாட் அன்ட் டொபாக்கோவில் தொடங்குகிறது. இதையடுத்து லண்டனில் இருந்து இந்திய அணியினர் இன்று பார்படோஸ் செல்லவுள்ளார்கள். சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள்-ஆப்கானிஸ்தான் இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனால் இந்தத் தொடர் இந்திய அணிக்கு எளிதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. 

சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். லண்டன் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. ஆனால் பிறகு ஆடிய இந்திய அணியோ 30.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு சுருண்டது இந்தியா. ஃபகார் ஸமான் ஆட்டநாயகனாகவும், ஹசன் அலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய அணியின் தோல்வியினால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளார்கள். இதனால் மே.இ. தீவுகளுக்கு எதிரான தொடர்களை இந்திய அணி வெல்லும்பட்சத்தில் அது ஆறுதலாக அமையும்.  

மே.இ. தீவுகளுக்கு எதிரான தொடர்களுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரிஷப் பந்த், அஜிங்க்ய ரஹானே, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), யுவராஜ் சிங், கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ்.

இந்தியா - மே.இ தீவுகள் ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள்: ஜூன் 23, டிரினிடாட் அன்ட் டொபாக்கோ

2-வது ஒருநாள்: ஜூன் 25, டிரினிடாட் அன்ட் டொபாக்கோ

3-வது ஒருநாள்: ஜூன் 30, ஆண்டிகுவா

4-வது ஒருநாள்: ஜூலை 2, ஆண்டிகுவா

5-வது ஒருநாள்: ஜூலை 6, ஜமைக்கா

இந்தியா - மே.இ தீவுகள் டி20 தொடர்

டி20: ஜூலை 9, ஜமைக்கா 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com