இனி வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு வரும்: சர்ஃப்ராஸ் நம்பிக்கை

இனி அனைத்து வெளிநாட்டு அணிகளும் எங்களுடன் கிரிக்கெட் விளையாட பாகிஸ்தானுக்கு வரும் என நம்புகிறோம் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது தெரிவித்தார்.
இனி வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு வரும்: சர்ஃப்ராஸ் நம்பிக்கை

இனி அனைத்து வெளிநாட்டு அணிகளும் எங்களுடன் கிரிக்கெட் விளையாட பாகிஸ்தானுக்கு வரும் என நம்புகிறோம் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது தெரிவித்தார்.
லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சர்ஃப்ராஸ் கூறியதாவது: எங்கள் வீரர்கள் மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார்கள். இந்த வெற்றிக்கான அனைத்து பாராட்டுகளும் எங்கள் வீரர்களையே சேரும். எங்களுடைய இந்த சாதனை இன்றோ, நாளையோ மட்டுமல்ல, நீண்ட காலத்துக்கு அனைவராலும் நினைவுகூரப்படும்.
இந்த வெற்றியால் எங்கள் வீரர்கள் மிகுந்த உத்வேகம் பெற்றிருக்கிறார்கள். உலகின் 8-ஆம் நிலை அணியாக இந்தப் போட்டியில் களமிறங்கி சாம்பியன் ஆகியிருக்கிறோம். இனி அனைத்து வெளிநாட்டு அணிகளும் எங்களுடன் கிரிக்கெட் விளையாட பாகிஸ்தானுக்கு வரும் என நம்புகிறேன்.
இந்த வெற்றியால் இந்தத் தருணத்தில் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. இந்த வெற்றியை பாகிஸ்தான் மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து இளம் வீரர்களும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியால் பயனடைந்திருக்கிறார்கள்.
குறிப்பாக ஹசன் அலி, ஃபகார் ஸமான் ஆகியோர் தாங்கள் விளையாடிய முதல் தொடரிலேயே தங்களின் திறமையை நிரூபித்திருக்கிறார்கள். மூத்த வீரர்களான முகமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் ஆகியோரும் இந்த வெற்றியில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்கள்.
இப்போது பாகிஸ்தான் சார்பில் நடத்தப்படும் அனைத்து சர்வதேசப் போட்டிகளும் துபையில்தான் நடைபெறுகின்றன. சொந்த மண்ணில் விளையாட முடியாததால், மற்ற அணிகளைப் போன்று எங்களுக்கு உள்ளூர் மைதானத்தின் சாதக அம்சங்கள் கிடைப்பதில்லை. ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் இப்போது பெற்றிருக்கும் வெற்றியின் மூலம் எங்கள் நாட்டுக்கு கிரிக்கெட் விளையாட வாருங்கள் என மற்ற அணிகளிடம் முறையிட விரும்புகிறேன் என்றார்.
2009-இல் இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது, இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குல் நடத்தினர். அதில் இலங்கை வீரர்கள் காயத்தோடு தப்பினர். அதன்பிறகு அங்கு பெரிய அளவில் சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை. வெளிநாட்டு அணிகள் அங்கு சென்று விளையாட மறுத்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிம்பாப்வே அணி மட்டும் அங்கு சென்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாளைக்குப் பிறகு பெரிய போட்டி ஒன்றில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் ஆனது அந்நாட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றி பாகிஸ்தான் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபியில் பெற்ற வெற்றி பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய ஊக்கம் அளிப்பதாக அமையும். சொந்த மண்ணில் முன்னணி அணிகளுக்கு எதிராக சர்வதேசப் போட்டியில் விளையாடாத ஓர் அணியின் ஹீரோக்களை அடையாளம் காண இதுபோன்ற வெற்றி அவசியமானது.
- மிக்கி ஆர்தர்,
பாகிஸ்தான் பயிற்சியாளர்.

நாங்கள் விளையாடிய காலத்தில் பாகிஸ்தான் அணி உலக கிரிக்கெட்டின் சூப்பர் பவராக திகழ்ந்தது. இப்போதைய அணி சூப்பர் பவரைவிட சிறந்த அணியாகும். ஆனால் பாகிஸ்தானில் திறமையான இளம் வீரர்களை பட்டை தீட்டுவதற்கான கட்டமைப்பு இல்லை.
- இம்ரான் கான்,
முன்னாள் பாக். கேப்டன்.

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் பெற்றிருக்கும் வெற்றி நீண்ட நாள்களுக்கு நினைவுகூரப்படும். யாருமே எதிர்பாராத நிலையில் திடீரென அபாரமாக ஆடி பாகிஸ்தான் சாம்பியன் ஆகியிருப்பது அனைவரையும் ஈர்த்துள்ளது.
-ஷாஹித் அப்ரிதி,
முன்னாள் பாக்.கேப்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com