உலக ஹாக்கி லீக் அரையிறுதி: இந்தியா-நெதர்லாந்து இன்று மோதல்

லண்டனில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும், நெதர்லாந்தும் மோதுகின்றன.
உலக ஹாக்கி லீக் அரையிறுதி: இந்தியா-நெதர்லாந்து இன்று மோதல்

லண்டனில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும், நெதர்லாந்தும் மோதுகின்றன.
இந்தத் தொடரில் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி, அவையனைத்திலும் வெற்றி கண்டதன் மூலம் காலிறுதியை உறுதி செய்துவிட்டது.
எனினும் உலகின் 4-ஆம் நிலை அணியான நெதர்லாந்துடனான இந்த ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். ஏனெனில் நெதர்லாந்து போன்ற அணியோடு மோதுகிறபோதுதான், இந்திய அணி தனது பலத்தை சோதிக்க முடியும். நெதர்லாந்து அணியும் தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது.
இந்திய அணி தனது முந்தைய ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியிருப்பதால் இந்த ஆட்டத்தில் மிகுந்த நம்பிக்கையோடு நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. அதேநேரத்தில் நெதர்லாந்து அணி தான் விளையாடிய முந்தைய இரு ஆட்டங்களில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானையும், 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தையும் வீழ்த்தியுள்ளது.
இந்திய அணியின் முன்களத்தைப் பொறுத்தவரையில் ரமன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், தல்விந்தர் சிங் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். மிட்பீல்டில் சர்தார் சிங், கேப்டன் மன்பிரீத் சிங் உள்ளிட்டோரும் பலம் சேர்க்கின்றனர். இந்திய அணியின் முன்னணி கோல் கீப்பரான ஸ்ரீஜேஷ் இல்லாத நிலையில், இளம் கோல் கீப்பர்களான விகாஸ் தாகியாவும், ஆகாஷ் சிக்டாவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 3 ஆட்டங்களில் இரண்டில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. 2014 சாம்பியன்ஸ் டிராபி, 2015-இல் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் பைனல் ஆகியவற்றில் இந்திய அணி, நெதர்லாந்தை வீழ்த்தியிருக்கிறது. எனினும் கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் நெதர்லாந்து அணி, இந்தியாவை வீழ்த்தியுள்ளது.
மன்பிரீத் சிங்: நெதர்லாந்துடனான ஆட்டம் குறித்து இந்திய கேப்டன் மன்பிரீத் சிங் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றியைப் பெற்றிருக்கிறோம். அதேபோன்றதொரு ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்த விரும்புகிறோம். இதுவரை இந்திய அணி விளையாடியிருக்கும் விதம் மகிழ்ச்சியளிக்கிறது. நெதர்லாந்து அணியும் இந்தத் தொடரை சிறப்பாக தொடங்கியிருக்கிறது. அவர்களுக்கு எதிராக ஆடுகிறபோது நாங்கள் வகுத்திருக்கும் திட்டங்களை சரியாக செயல்படுத்துவது அவசியமாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com