ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை : பாகிஸ்தான் 6-ஆவது இடத்துக்கு முன்னேற்றம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் வாகை சூடியதைத் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி ஏற்றம் கண்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் வாகை சூடியதைத் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி ஏற்றம் கண்டுள்ளது.
முன்னதாக 8-ஆவது இடத்தில் இருந்த பாகிஸ்தான், இப்போது இரு இடங்கள் முன்னேறி 6-ஆவது இடத்தைப் (95 ரேட்டிங் புள்ளிகள்) பிடித்துள்ளது. இதன்மூலம் 2019 உலகக் கோப்பை போட்டிக்கு நேரடித் தகுதி பெறும் வாய்ப்பை நெருங்கியுள்ளது பாகிஸ்தான்.
2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் நேரடித் தகுதி பெறும். அதில் போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே தகுதி பெற்றது. எஞ்சிய 7 அணிகள் தரவரிசை அடிப்படையில் நேரடித் தகுதி பெறும். அதாவது செப்டம்பர் 30-ஆம் தேதி தரவரிசையில் முன்னணியில் இருக்கும் 7 அணிகள் உலகக் கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெறும்.
வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு இடத்தை இழந்து முறையே 7 மற்றும் 8-ஆவது இடங்களில் உள்ளன. மற்றபடி அணிகள் தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன. இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக ஆடியபோதும் தலா ஒரு ரேட்டிங் புள்ளியை இழந்துள்ளன.
10-ஆவது இடத்தில் ரோஹித்: பேட்ஸ்மேன்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்திய கேப்டன் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் ஆகியோர் முறையே 2 மற்றும் 3-ஆவது இடங்களில் உள்ளனர்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மாவும், ஷிகர் தவனும் 10-ஆவது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். ரோஹித் சர்மா 3 இடங்கள் முன்னேறியுள்ளார். தோனி 15-ஆவது இடத்தில் உள்ளார். இந்தியர்கள் வேறு யாரும் முதல் இருபது இடங்களில் இல்லை.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 114 ரன்கள் குவித்த பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகார் ஸமான் 58 இடங்கள் முன்னேறி 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர், தான் விளையாடிய முதல் தொடரிலேயே (4 ஆட்டங்களில்) தரவரிசையில் டாப்-100-க்குள் வந்துள்ளார். பாகிஸ்தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பாபர் ஆஸம் 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதுதான் அவருடைய அதிகபட்ச தரவரிசை.
புவனேஸ்வர் குமார் முன்னேற்றம்: பந்துவீச்சாளர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேஸில்வுட், தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.
இந்திய வீரர்கள் அக்ஷர் படேல் 16-ஆவது இடத்திலும், அமித் மிஸ்ரா 18-ஆவது இடத்திலும் உள்ளனர். சாம்பியன்ஸ் டிராபியில் அசத்தலாக பந்துவீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 4 இடங்கள் முன்னேறி 19-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ஜஸ்பிரித் பூம்ரா 19 இடங்கள் முன்னேறி 24-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்ற பாகிஸ்தானின் ஹசன் அலி 12 இடங்கள் முன்னேறி 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஆமிர் 21-ஆவது இடத்துக்கும், ஜுனைத் கான் 47-ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com