கோலி vs கும்ப்ளே: 6 மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்த மோதல்!

கோலி - கும்ப்ளே இடையே கடந்த 6 மாதங்களாகவே மோதல் நீடித்து வந்ததாகவும், 6 மாதங்களுக்கு முன்பே...
கோலி vs கும்ப்ளே: 6 மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்த மோதல்!

கோலி - கும்ப்ளே இடையே கடந்த 6 மாதங்களாகவே மோதல் நீடித்து வந்ததாகவும், 6 மாதங்களுக்கு முன்பே அவர்கள் இருவரும் பேசுவதை நிறுத்திக் கொண்டனர் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த சில மாதங்களாக கோலிக்கும், கும்ப்ளேவுக்கும் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியது. இதனிடையே அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் கடந்த 18-ஆம் தேதியோடு முடிவடைந்தது. எனினும் அவர் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் பயிற்சியாளராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோலியுடனான பிரச்னையை தீர்க்க முடியாது என உணர்ந்ததால் பயிற்சியாளர் பதவியை அதிரடியாக துறந்துள்ளார்.

கோலி-கும்ப்ளே இடையிலான மோதலை தீர்ப்பதற்காக லண்டனில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்ற பிசிசிஐ மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: விராட் கோலி-அனில் கும்ப்ளே இடையிலான மோதல் விவகாரம் முழுமையாக தீர்க்கப்பட்டால் மட்டுமே, கும்ப்ளேவுக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என கிரிக்கெட் ஆலோசனை குழு பரிந்துரை செய்தது. சாம்பியன்ஸ் டிராபி போட்டி முடிந்த பிறகு லண்டனில் 3 கட்டமாக கூட்டம் நடந்தது. அதில் முதலில் அனில் கும்ப்ளேவுடன் ஆலோசனை நடத்தியது கிரிக்கெட் ஆலோசனைக் குழு. அதைத் தொடர்ந்து கோலியிடம் பேசியது. 

அதன்பிறகு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கோலி, கும்ப்ளே ஆகிய இருவரையும் ஒன்றாக அமரவைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அவர்கள் இருவரும் கடந்த டிசம்பரில் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு பேசுவதையே நிறுத்திவிட்டனர். அவர்களிடையே கடந்த 6 மாதங்களாக பேச்சுவார்த்தையே இல்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. கும்ப்ளேவை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியபோது என்னதான் பிரச்னை என்று கேட்டோம். ஆனால் அவரோ, "கோலியுடன் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை' என்றார். அப்போது உங்களுடைய பயிற்சியளிக்கும் பாணியில் மாற்று கருத்து இருப்பதாக கோலி புகார் தெரிவித்துள்ளாரே என கும்ப்ளேவிடம் கேட்டோம். ஆனால் அவரோ, "அது ஒரு பிரச்னையே இல்லை' என்றார்.

கோலி, ஒரு விஷயத்தை பிரச்னை என்கிறார். ஆனால் கும்ப்ளேவோ, அது ஒரு பிரச்னையே இல்லை என்கிறார். அப்படியானால் அவர்கள் இருவரும்தான் பேசித் தீர்க்க வேண்டும். அதற்காகத்தான் அவர்கள் இருவரையும் ஒன்றாக அமர வைத்துப் பேசினோம். ஆனால் அவர்கள் தங்களுடைய விவகாரம் சரி செய்ய முடியாத அளவுக்கு சென்றுவிட்டதாக கருதியதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com