பயிற்சியாளர் பதவியை துறந்தது ஏன்? கும்ப்ளே விளக்கம்

கேப்டன் விராட் கோலிக்கும், எனக்கும் இடையிலான பிரச்னையை தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே பதவியை ராஜிநாமா செய்தேன் என்று இந்திய கிரிக்கெட்
பயிற்சியாளர் பதவியை துறந்தது ஏன்? கும்ப்ளே விளக்கம்

கேப்டன் விராட் கோலிக்கும், எனக்கும் இடையிலான பிரச்னையை தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே பதவியை ராஜிநாமா செய்தேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு என் மீது நம்பிக்கை வைத்து என்னை தலைமைப் பயிற்சியாளராக தொடருமாறு கேட்டுக்கொண்டதை கெளரவமாகக் கருதுகிறேன்.
கடந்த ஓர் ஆண்டில் இந்திய அணி நிறைய சாதனைகளை செய்தது. அதற்கான பெருமை கேப்டன், பயிற்சியாளர், உதவி அலுவலர்கள் என அனைவரையும் சேரும்.
எனது பயிற்சியளிக்கும் பாணியில் கேப்டன் கோலிக்கு மாற்று கருத்து இருப்பதாகவும், நான் தலைமைப் பயிற்சியாளராக தொடர்வதை அவர் விரும்பவில்லை என்றும் பிசிசிஐ சார்பில் திங்கள்கிழமை என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் நான் எப்போதுமே பயிற்சியாளருக்கும், கேப்டனுக்கும் இடையே இருக்கும் வரையறைக்கு மதிப்பளிக்கக்கூடிய நபர்.
எங்கள் இருவரிடையிலான பிரச்னையை தீர்க்க பிசிசிஐ முயற்சித்தது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இனிமேல் நானும், கோலியும் இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை என்பது தெரிந்த பிறகு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதே நல்லது என நம்பினேன்.
தொழில்முறை, கட்டுக்கோப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை, வீரர்களின் செயலை பாராட்டும் திறன், ஒரு விஷயத்தை பல கோணங்களில் அணுகுவது போன்ற விஷயங்களை கடைப்பிடிக்கக்கூடிய நபர் நான். இருவர் இணைந்து செயல்பட வேண்டுமானால் மேற்கண்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். பயிற்சியாளர் பதவியை ஒரு பிம்பத்தை எதிரொலிக்கும் கண்ணாடியாகவே பார்க்கிறேன். அதன்மூலம்தான் அணியை மேம்படுத்த முடியும்.
நான் பயிற்சியாளராக தொடர்வதில் மாற்றுக் கருத்துகள் நிலவுகிறது என்பது தெரியவந்தபோது, அந்தப் பதவியை பொருத்தமான நபரிடம் கொடுக்க, அதிலிருந்து நான் விலகுவதே சரி என முடிவு செய்தேன். கடந்த ஓர் ஆண்டாக இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றியது எனக்கு கிடைத்த கெளரவமாகும். அதற்காக கிரிக்கெட் ஆலோசனைக் குழு, பிசிசிஐ, நிர்வாகக் குழு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து ஆதரவளித்து வரும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிகப்பெரிய கிரிக்கெட் பாரம்பரியத்தைக் கொண்ட இந்திய கிரிக்கெட்டின் நலம் விரும்பியாக எப்போதும் இருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக கோலிக்கும், கும்ப்ளேவுக்கும் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியது.
இதனிடையே அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் கடந்த 18-ஆம் தேதியோடு முடிவடைந்தது. எனினும் அவர் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் பயிற்சியாளராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோலியுடனான பிரச்னையை தீர்க்க முடியாது என உணர்ந்ததால் பயிற்சியாளர் பதவியை அதிரடியாக துறந்துள்ளார்.

6 மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்த மோதல்

விராட் கோலி-அனில் கும்ப்ளே இடையே கடந்த 6 மாதங்களாகவே மோதல் நீடித்து வந்ததாகவும், 6 மாதங்களுக்கு முன்பே அவர்கள் இருவரும் பேசுவதை நிறுத்திக் கொண்டனர் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
கோலி-கும்ப்ளே இடையிலான மோதலை தீர்ப்பதற்காக லண்டனில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்ற பிசிசிஐ மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: விராட் கோலி-அனில் கும்ப்ளே இடையிலான மோதல் விவகாரம் முழுமையாக தீர்க்கப்பட்டால் மட்டுமே, கும்ப்ளேவுக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என கிரிக்கெட் ஆலோசனை குழு பரிந்துரை செய்தது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டி முடிந்த பிறகு லண்டனில் 3 கட்டமாக கூட்டம் நடந்தது. அதில் முதலில் அனில் கும்ப்ளேவுடன் ஆலோசனை நடத்தியது கிரிக்கெட் ஆலோசனைக் குழு. அதைத் தொடர்ந்து கோலியிடம் பேசியது. அதன்பிறகு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கோலி, கும்ப்ளே ஆகிய இருவரையும் ஒன்றாக அமரவைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அவர்கள் இருவரும் கடந்த டிசம்பரில் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு பேசுவதையே நிறுத்திவிட்டனர். அவர்களிடையே கடந்த 6 மாதங்களாக பேச்சுவார்த்தையே இல்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது.
கும்ப்ளேவை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியபோது என்னதான் பிரச்னை என்று கேட்டோம். ஆனால் அவரோ, "கோலியுடன் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை' என்றார். அப்போது உங்களுடைய பயிற்சியளிக்கும் பாணியில் மாற்று கருத்து இருப்பதாக கோலி புகார் தெரிவித்துள்ளாரே என கும்ப்ளேவிடம் கேட்டோம். ஆனால் அவரோ, "அது ஒரு பிரச்னையே இல்லை' என்றார்.
கோலி, ஒரு விஷயத்தை பிரச்னை என்கிறார். ஆனால் கும்ப்ளேவோ, அது ஒரு பிரச்னையே இல்லை என்கிறார். அப்படியானால் அவர்கள் இருவரும்தான் பேசித் தீர்க்க வேண்டும். அதற்காகத்தான் அவர்கள் இருவரையும் ஒன்றாக அமர வைத்துப் பேசினோம். ஆனால் அவர்கள் தங்களுடைய விவகாரம் சரி செய்ய முடியாத அளவுக்கு சென்றுவிட்டதாக கருதியதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என்றார்.


இந்திய கிரிக்கெட்டுக்கு சோகமான நாள்

கும்ப்ளேவின் ராஜிநாமா இந்திய கிரிக்கெட்டுக்கு சோகமான நாள் என்று முன்னாள் கேப்டனான சுநீல் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: கோலிக்கும், கும்ப்ளேவுக்கும் இடையிலான மோதல் குறித்து எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால் இது இந்திய கிரிக்கெட்டுக்கு சோகமான நாளாகும்.
கும்ப்ளே பயிற்சியாளரான பிறகு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்திருக்கிறது. கடந்த ஓர் ஆண்டில் கும்ப்ளே பெரிதாக தவறு செய்ததாக தெரியவில்லை. கருத்து வேறுபாடு என்பது எல்லா அணிகளிலும் ஏற்படுவதுதான். ஆனால் அதன் காரணமாக இந்திய கிரிக்கெட்டில் ஏற்பட்டிருக்கும் விளைவு முற்றிலும் மோசமானது.
அனில் கும்ப்ளே, இந்திய அணிக்காக விளையாடிய காலத்தில் மிகப்பெரிய போர்க்குணம் கொண்டவராக இருந்தார். தனது தாடை முறிந்து ரத்தம் பீறிட்டபோதிலும், அதைப் பற்றி கவலைப்படாமல் சிறப்பாக பந்துவீசி வெற்றி தேடித்தந்தவர். அப்படிப்பட்டவர், இந்த முறை எதிர்த்து நின்று போராடாமல் ஏன் ராஜிநாமா செய்தார் என தெரியவில்லை. அவர் விரைவில் இந்த பிரச்னையிலிருந்து மீண்டு வலுமிக்க நபராக வருவார் என நம்புகிறேன். கும்ப்ளே போன்ற போராட்டக் குணம் கொண்டவர்கள் ஒதுங்கி செல்வது இதுவே முதல்முறையாகும்.
அனில் கும்ப்ளேவின் அனுபவத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிரிக்கெட் ஆலோசனைக் குழு, பயிற்சியாளரை தேர்வு செய்வதோடு மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக நிறைய பாடுபட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com