எந்த அணி தப்பித்தது? இந்தியா - மே.இ. ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது!

இந்திய அணி இந்த ஒருநாள் போட்டியில் வலுவான நிலையில் இருந்தது. இதனால்... 
எந்த அணி தப்பித்தது? இந்தியா - மே.இ. ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது!

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 ஒரு நாள் ஆட்டம் மற்றும் ஒரு டி20 ஆட்டத்தில் அந்நாட்டு அணியுடன் மோதுகிறது. இதில் முதல் ஒரு நாள் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்றது.

இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இந்தியாவின் இன்னிங்ஸை அஜிங்க்ய ரஹானேவும், ஷிகர் தவனும் தொடங்கினர். இந்த ஜோடி அதிரடியாக ஆடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் மிகுந்த எச்சரிக்கையோடு விளையாட, முதல் 10 ஓவர்களில் 47 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா.

ரஹானே அரை சதம்: இதன்பிறகு ரஹானேவும், தவனும் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்ட, இந்தியாவின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. இதனால் 21-ஆவது ஓவரில் 100 ரன்களை எட்டியது இந்தியா. அதே ஓவரில் பவுண்டரியை விளாசி, 67 பந்துகளில் அரை சதம் கண்டார் ரஹானே. அவரைத் தொடர்ந்து ஷிகர் தவனும் அரை சதத்தை எட்டினார். அவர், ஜோசப் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி 63 பந்துகளில் அரை சதம் கண்டார். இந்த ஜோடியை வீழ்த்த நீண்ட நேரம் போராடிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஜோசப் வீசிய 25-ஆவது ஓவரில் பலன் கிடைத்தது. ரஹானே 78 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் சேர்த்த நிலையில் ஹோல்டரிடம் கேட்ச் ஆனார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 25 ஓவர்களில் 132 ரன்கள் குவித்தது.

ஷிகர் தவன் 87: இதையடுத்து கேப்டன் விராட் கோலி களமிறங்க, மறுமுனையில் ஷிகர் தவன் சிக்ஸரையும், பவுண்டரியையும் விளாசினார். இதனால் 28-ஆவரில் 150 ரன்களைக் கடந்தது இந்தியா. தொடர்ந்து அசத்தலாக ஆடிய தவன் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 13 ரன்களில் அதை நழுவவிட்டார். அவர் 92 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் சேர்த்த நிலையில் பிஷூ பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம்புகுந்த யுவராஜ் சிங் 10 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில், ஹோல்டர் பந்துவீச்சில் லீவிஸிடம் கேட்ச் ஆனார். இதையடுத்து கேப்டன் கோலியுடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி. இந்தியா 39.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது கோலி 32, தோனி 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்திய அணி இந்த ஒருநாள் போட்டியில் வலுவான நிலையில் இருந்தது. இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் சுலபமாக 300 ரன்களைக் கடந்திருக்கும். இளம் வீரர்கள் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அது கடினமான இலக்காக இருந்திருக்கும். இதனால் நேற்றைய போட்டியில் மழை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குக் கைகொடுத்தது என்றே கூறமுடியும். 

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com