டி20: இங்கிலாந்துக்கு தென் ஆப்பிரிக்கா பதிலடி

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா.
இங்கிலாந்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் தென் ஆப்பிரிக்க வீரர்கள்.
இங்கிலாந்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் தென் ஆப்பிரிக்க வீரர்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா.

இங்கிலாந்தின் டான்டன் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டிவில்லியர்ஸ் 20 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 46, ஸ்மட்ஸ் 35 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 45, பெஹார்டியன் 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் அறிமுக வீரர் கரன் 3 விக்கெட்டுகளையும், பிளங்கெட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து தோல்வி: பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் சாம் பில்லிங்ஸ் 3 ரன்களில் வெளியேற, ஜேசன் ராயுடன் இணைந்தார் ஜானி பேர்ஸ்டோவ். இந்த ஜோடி அசத்தலாக ஆட, 10.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இங்கிலாந்து.
அந்த அணி 13.4 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்திருந்தபோது பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து லிவிங்ஸ்டோன் களமிறங்க, அதிரடியாக ஆடிய ஜேசன் ராய், பீல்டிங்கிற்கு இடையூறு செய்ததாகக் கூறி அவுட் கொடுத்தார் நடுவர். அவர் 45 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்தார். டி20 ஆட்டத்தில் பீல்டிங்கிற்கு இடையூறு செய்ததாக ஒருவர் ஆட்டமிழந்தது இதுவே முதல்முறையாகும்.
இதன்பிறகு இங்கிலாந்து அணி சரிவுக்குள்ளானது. ஜோஸ் பட்லர் 10, கேப்டன் இயான் மோர்கன் 6 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற, கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
பெலுக்வாயோ வீசிய கடைசி ஓவரின் முதல் 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது இங்கிலாந்து. 4-ஆவது பந்தில் லிவிங்ஸ்டோன் 16 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
5-ஆவது பந்தில் டாசன் பவுண்டரியை விளாச, கடைசிப் பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பெலுக்வாயோ துல்லியமாக பந்துவீச, அந்த பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால் இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தென் ஆப்பிரிக்கா 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் கிறிஸ் மோரீஸ் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com