ஆஸ்திரேலிய ஓபன்: ஸ்ரீகாந்த் சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். இது, ஸ்ரீகாந்த் வென்ற 4-ஆவது சூப்பர் சீரிஸ் பட்டமாகும்.
ஆஸ்திரேலிய ஓபன்: ஸ்ரீகாந்த் சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். இது, ஸ்ரீகாந்த் வென்ற 4-ஆவது சூப்பர் சீரிஸ் பட்டமாகும்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஸ்ரீகாந்த் 22-20, 21-16 என்ற நேர் செட்களில் நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்கை தோற்கடித்தார்.
45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கடும் போராட்டத்துக்குப் பிறகு 22-20 என்ற கணக்கில் கைப்பற்றிய ஸ்ரீகாந்த், அடுத்த செட்டை
21-16 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார். சென் லாங்கை முதல்முறையாக வீழ்த்தியிருக்கிறார் ஸ்ரீகாந்த். முன்னதாக அவருடன் 5 ஆட்டங்களில் மோதியிருந்த ஸ்ரீகாந்த், அவையனைத்திலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் ஆனதன் மூலம் தொடர்ச்சியாக 2 சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஸ்ரீகாந்த். கடந்த வாரம் நடைபெற்ற இந்தோனேசிய ஓபனிலும் ஸ்ரீகாந்த் பட்டம் வென்றிருந்தார்.
வெற்றி குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், "சிட்னிக்கு வந்தது முதலே இரைப்பை அழற்சி காரணமாக அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதனால் எனது உடல்நிலை நன்றாக இல்லை. எனினும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பிறகு அதில், முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாட வேண்டும் என விரும்பினேன். காயம் காரணமாக கடந்த ஆண்டு பெரிய அளவில் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதனால் இந்த ஆண்டு அதிக அளவில் போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறேன்.
சுதிர்மான் கோப்பை போட்டிக்குப் பிறகு நான் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறேன். இந்தோனேசிய ஓபன், ஆஸ்திரேலிய ஓபனில் முழு உடற்தகுதியோடு விளையாடுவதற்கு எனக்கு உதவிய முடநீக்கியல் நிபுணருக்கு நன்றி. இறுதி ஆட்டத்தின் முதல் செட்டில் நீண்ட "ரேலி'களை விளையாடினோம். ஆனால் முதல் செட்டை கைப்பற்றிய பிறகு எனக்குள் நம்பிக்கை ஏற்பட்டது என்றார்.

ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு: "பாய்' அறிவிப்பு

ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஸ்ரீகாந்துக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுவதாக இந்திய பாட்மிண்டன் சங்கம் (பாய்)
அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய பாட்மிண்டன் சங்க தலைவர் ஹிமந்தா விஸ்வா சர்மா
வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்ரீகாந்தின்
சாதனைகளை நினைத்து பெருமை கொள்கிறோம்.
ஸ்ரீகாந்தின் இந்த வெற்றி
சிறப்புமிக்கதாகும். ஸ்ரீகாந்த் தனது வெற்றியால் மீண்டுமொரு முறை நாட்டு மக்களை பெருமைப்பட வைத்திருப்பதோடு மட்டுமின்றி, தலைசிறந்த வீரர்களில் தானும் ஒருவர் என்பதை இந்த உலகிற்கு காட்டியிருக்கிறார். அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை' என குறிப்பிட்டுள்ளார்.


காரை பரிசளிக்கிறது மஹிந்திரா

அடுத்தடுத்து சூப்பர் சீரிஸ் போட்டிகளில் பட்டம் வென்றிருக்கும் ஸ்ரீகாந்துக்கு "மஹிந்திரா டியூவி300' கார் பரிசளிக்கப்படும் என்று மஹிந்திரா குழுமங்களின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஸ்ரீகாந்த் தனது கடுமையான போராட்டக் குணத்தால் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்று நம்மை பெருமையடையச் செய்துள்ளார். தனது அபார ஆட்டத்தால் எதிராளியை வீழ்த்தும் ஆற்றல் பெற்ற ஸ்ரீகாந்த் இந்த வெற்றிக்கு தகுதியானவர். அவருக்கு நான் தனிப்பட்ட முறையில் "மஹிந்திரா டியூவி300' காரை வழங்கவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்தின் வெற்றி குறித்து சுட்டுரையில் பதிவு செய்திருந்த ஒருவர், "இந்திய பாட்மிண்டன் சங்கம் சார்பில் ஸ்ரீகாந்துக்கு ரூ.5 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. கிரிக்கெட்டோடு ஒப்பிடுகையில், இந்தத் தொகை ஒன்றுமே கிடையாது. அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளை ஏற்றே ஸ்ரீகாந்துக்கு கார் பரிசளிக்கப்படும் என ஆனந்த் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி, சச்சின் உள்ளிட்டோர் வாழ்த்து

சூப்பர் சீரிஸ் போட்டியில் 4-ஆவது பட்டம் வென்று வரலாறு படைத்திருக்கும் ஸ்ரீகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி

ஆஸ்திரேலிய ஓபனில் ஸ்ரீகாந்த் பெற்றிருக்கும் வெற்றியால் நாங்கள் மிகுந்த பெருமையடைகிறோம். அற்புதமான வெற்றியைப் பெற்றிருக்கும் ஸ்ரீகாந்துக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

சச்சின்

சூப்பர் சீரிஸ் போட்டியில் தொடர்ந்து 2-ஆவது முறையாக பட்டம் வென்றிருக்கும் ஸ்ரீகாந்துக்கு வாழ்த்துகள். உங்களால் நாங்கள் பெருமை கொள்கிறோம் சாம்பியன்.

சேவாக்

நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான சென் லாங்கை வீழ்த்தி 4-ஆவது சூப்பர் சீரிஸ் பட்டம் வென்றிருக்கும் ஸ்ரீகாந்துக்கு வாழ்த்துகள். உங்களின் சாதனைக்கு தலை வணங்குகிறேன் ஸ்ரீகாந்த்.

எச்.எஸ்.பிரணாய் (இந்திய பாட்மிண்டன் வீரர்)

இந்திய வீரர்கள்  ஃபார்மில் இருக்கும்போது மற்ற வீரர்கள் பட்டம் வெல்வது கடினம் என தோன்றுகிறது. வாழ்த்துகள் ஸ்ரீகாந்த்.

விஜய் கோயல் (மத்திய விளையாட்டு அமைச்சர்)

சூப்பர் சீரிஸ் போட்டியில் தொடர்ந்து 2-ஆவது பட்டத்தை வென்றிருக்கும் ஸ்ரீகாந்துக்கு வாழ்த்துகள். உங்களால் பெருமை கொள்கிறோம்.

சானியா மிர்ஸா

ஸ்ரீகாந்த் அபாரமாக ஆடி வருகிறார். அதுபோன்ற ஆட்டத்தையே நானும் விரும்புகிறேன். உங்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துகள். தொடர்ந்து இதேபோன்று விளையாடுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com