யாரை வெளியேற்றுவார்? முதல் ஒருநாள் போட்டியிலேயே முத்திரை பதித்த குல்தீப் யாதவ்!

குல்தீப் யாதவ் தொடர்ந்து இந்திய ஒருநாள் அணியில் இடம்பெறுவாரா? கோலியின் பதில்:
யாரை வெளியேற்றுவார்? முதல் ஒருநாள் போட்டியிலேயே முத்திரை பதித்த குல்தீப் யாதவ்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான அஜிங்க்ய ரஹானே 104 ரன்களும், ஷிகர் தவன் 63 ரன்களும், கேப்டன் கோலி 87 ரன்களும் குவித்தனர். இதன்பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தப் போட்டியில் அபாரமாகப் பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் 22 வயது குல்தீப் யாதவ். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் அதிக ரன்கள் குவிக்கமுடியாமல் போனது. இதேபோல தன் முதல் டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். 

குல்தீப் யாதவ், கோலியை மிகவும் கவர்ந்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் குல்தீப்பைப் பாராட்டி கோலி பேசியதாவது:

குல்தீப் யாதவ் வீசும் கிராஸ் சீம் டெலிவரி இருவிதங்களிலும் சுழல்கிறது. இதனால் அதில் ரன் குவிப்பது மிகவும் கடினம். மணிக்கட்டிலிருந்து அவர் எந்த மாதிரி பந்துவீசுவார் என்று கணிப்பது கடினம். யாராவது அவர் பந்தை அடிக்க முயலும்போது உடனே மெதுவாகப் பந்தை வீசி பேட்ஸ்மேனை வீழ்த்துகிறார். குல்தீப்பின் பந்தை ஐபிஎல்-லில் நான் எதிர்கொண்டுள்ளேன். அவர் பந்தில் ரன்கள் குவிப்பது சுலபமல்ல. ஆடுகளம் மிகவும் வறண்ட நிலையில் இருக்கும்போது குல்தீபின் பந்தை எதிர்கொள்வது மேலும் கடினம். முதல் ஒருநாள் போட்டியிலேயே அபாரமாகப் பந்துவீசி தன் திறமையை நிரூபித்துள்ளார் என்று புகழ்கிறார். 

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருமே சுமாராகப் பந்துவீசியதால் அதற்கு மாற்றாகத் தற்போது குல்தீப் யாதவ் களமிறக்கப்பட்டுள்ளார். ராகுல் டிராவிடும் இந்திய அணி, குல்தீப் யாதவ் போன்ற சுழற்பந்துவீச்சாளர்களை இந்திய அணி முயற்சி செய்யவேண்டும் என்று ஆலோசனை கூறியிருந்தார். 

குல்தீப் யாதவ் தொடர்ந்து இந்திய ஒருநாள் அணியில் இடம்பெறுவாரா? கோலியின் பதில்: மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் எப்போதும் அணிக்குப் பலமாக இருப்பார்கள். இதை நாங்கள் இந்தத் தொடரில் கண்டறிந்துள்ளோம். எனவே எல்லாவிதமான வாய்ப்புகளையும் கொண்டு வீரர்களைத் தேர்வு செய்வோம். இங்கு 15 வீரர்கள் உள்ளார்கள். இந்தியாவில் மேலும் 10, 12 வீரர்கள் உள்ளார்கள். இவர்களை அடுத்த இரண்டு வருடங்களில் சோதனை செய்து அவர்களுடைய திறமை அழுத்தமான கட்டங்களில் எப்படி வெளிப்படுகிறது என்பதைக் கண்டறிவோம். முக்கியமாகப் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் நடுப்பகுதியில் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதைக் கொண்டு 2019 உலகக்கோப்பை அணியைத் தேர்வு செய்வோம் என்று கூறியுள்ளார்.

இந்தத் தொடரில் அஸ்வினுக்கு இதுவரை வாய்ப்பளித்துள்ளார் கோலி. இனிவரும் ஒருநாள் தொடர்களில் குல்தீப் யாதவுக்கு மேலும் பல வாய்ப்புகளை கோலி அளிக்க உள்ளார். இதனால் சில ஆட்டங்களில் அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜா விளையாட வாய்ப்புண்டு. ஆனால் ஒன்று, சாம்பியன்ஸ் டிராபியில் ஏற்பட்ட அனுபவத்தால் பல்வேறுவிதமான மாற்று ஏற்பாடுகளை யோசித்து வருகிறது இந்திய அணி. அவற்றில் குல்தீப் யாதவ் முதல் இடத்தில் உள்ளார்.

ஜடேஜாவின் ஃபீல்டிங்கை மனத்தில் கொண்டு அவருக்கு இடமளிக்கப்படலாம். வருங்காலத்தில் குல்தீப் யாதவ் அஸ்வினுக்கு நெருக்கடி தரலாம். அல்லது இதே யாதவ் ஜடேஜாவுக்கும் மாற்றாகவும் இருக்கலாம். ஏதோஒருவிதத்தில் இருவருக்கும் பெரிய ஆபத்தாக இருக்கப் போகிறார் குல்தீப் யாதவ். 

இதுவரை அஸ்வின், ஜடேஜாவுக்குப் பெரிய போட்டியில்லை. இதனால்தான் அவர்களால் பெரிய போட்டிகளில் அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக நீடிக்கமுடிந்தது. இனி அப்படி இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com