பயிற்சியாளர் பதவி: ரவி சாஸ்திரி விண்ணப்பிக்க முடிவு!

என்னைப் பயிற்சியாளராகத் தேர்வு செய்ய இருந்தால்தான் விண்ணப்பிப்பேன் என்று நான் ஒருபோதும் கூறியதில்லை...
பயிற்சியாளர் பதவி: ரவி சாஸ்திரி விண்ணப்பிக்க முடிவு!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்தார். இதையடுத்து அந்தப் பதவிக்கு ரவி சாஸ்திரி விண்ணபிக்க உள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க அனில் கும்ப்ளேவுக்கு பிசிசிஐ அனுமதி அளித்தபோதும், அதை ஏற்க மறுத்து கும்ப்ளே ராஜிநாமா செய்தார். கோலியுடனான கருத்துவேறுபாடுகளால் இந்த முடிவை எடுத்ததாக கும்ப்ளே கூறினார்.

இந்திய அணிக்கான அடுத்தத் தலைமைப் பயிற்சியாளரை நியமிக்கும் விவகாரத்தில் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து பிசிசிஐ செயல்படவுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் பங்கேற்கச் சென்றுள்ள இந்திய அணியின் கண்காணிப்பாளராக கிரிக்கெட் நடவடிக்கைகள் மேலாளர் எம்.வி.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.  

முன்னதாக, சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பாகவே இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாட்டை நீக்கும் முயற்சியாக, கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்களான சச்சின், விவிஎஸ் லஷ்மண், கங்குலி ஆகியோர் கும்ப்ளே மற்றும் கோலியுடன் பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது, கும்ப்ளேவுடன் இனியும் இணைந்து பணிபுரியத் தயாராக இல்லை என்று கோலி திட்டவட்டமாக தெரிவித்ததாகத் தெரிகிறது. கும்ப்ளேவின் ஓராண்டு பதவிக்காலம் சாம்பியன்ஸ் டிராபியுடன் முடிவுக்கு வந்தபோதிலும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் இந்திய அணியுடன் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்லவில்லை. கேப்டன் விராட் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக ராஜிநாமா செய்துள்ளார் கும்ப்ளே. அவருடைய பயிற்சியின் கீழ் கடந்த 12 மாதங்களாக மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களை இந்தியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றது. நடப்புப் பயிற்சியாளர் என்கிற முறையில் பயிற்சியாளர் தேர்வுக்கு கும்ப்ளே நேரடியாகத் தகுதி பெற்ற நிலையில், அந்தப் பதவிக்கு டாம் மூடி, ரிச்சர்டு பைபஸ், லால்சந்த் ராஜ்புத், சேவாக் உள்ளிட்டோரும் விண்ணப்பித்துள்ளனர்.

தற்போது கும்ப்ளேவின் விலகலையடுத்து மேலும் பல விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றுள்ளது. முன்பு போட்டியில் கும்ப்ளே இருந்ததால் பலரும் விண்ணப்பத்தை அனுப்பத் தயங்கியிருப்பார்கள். இப்போது கும்ப்ளே போட்டியிலிருந்து விலகியதையடுத்து மேலும் சிலர் விண்ணப்பிக்க விரும்புவார்கள். எனவே, அவர்களுக்கும் வாய்ப்பளிக்க பிசிசிஐ முடிவு செய்து நேற்று புதிய விளம்பரத்தை வெளியிட்டது.

இதையடுத்து பயிற்சியாளருக்கான போட்டியில் ரவி சாஸ்திரியும் குதித்துள்ளார். இதுகுறித்து நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு லண்டனிலிருந்து அவர் அளித்த பேட்டியில், ஆமாம்.. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இம்முறையும் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளேன். என்னைப் பயிற்சியாளராகத் தேர்வு செய்ய இருந்தால்தான் விண்ணப்பிப்பேன் என்று நான் ஒருபோதும் கூறியதில்லை. அவையெல்லாம் தவறான செய்திகள் என்று கூறியுள்ளார்.

சாஸ்திரி, இந்திய அணியின் இயக்குநராக ஏப்ரல் 2014 முதல் ஏப்ரல் 2016 வரை இருந்தார். கடந்தவருடம் பயிற்சியாளருக்கான போட்டியில் ரவி சாஸ்திரியும் இருந்தார். ஆனால் பலத்த போட்டியின் முடிவில் தலைமைப் பயிற்சியாளராக கும்ப்ளே தேர்வானார். இந்நிலையில் கும்ப்ளேவின் விலகலையடுத்து சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com