லோதா குழு பரிந்துரையை அமல்படுத்த புதிய கமிட்டி: பிசிசிஐ பொதுக்குழுவில் முடிவு

லோதா குழுவின் பரிந்துரையை சிறப்பாகவும், வேகமாகவும் அமல்படுத்துவது குறித்து ஆராய புதிய கமிட்டி அமைப்பது என மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

லோதா குழுவின் பரிந்துரையை சிறப்பாகவும், வேகமாகவும் அமல்படுத்துவது குறித்து ஆராய புதிய கமிட்டி அமைப்பது என மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிசிசிஐயின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் திங்கள்கிழமை 2 மணி, 45 நிமிடங்கள் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிசிசிஐ தலைவரான என்.சீனிவாசனும் கலந்துகொண்டார். எனினும் பிசிசிஐ நிர்வாகக் குழு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்தக் கூட்டத்தில் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளத்ரி கூறியதாவது: லோதா குழுவின் பரிந்துரைகளை சிறப்பாகவும், வேகமாகவும் அமல்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு 5 அல்லது 6 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும். இந்தக் கமிட்டி அடுத்த இரண்டு நாள்களில் பணியைத் தொடங்கும். இந்தக் கமிட்டி அறிக்கை அளிக்க 15 நாள் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.
பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தலின்போது ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்குரிமை மட்டுமே இருக்க வேண்டும், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் பதவியில் இருக்கக்கூடாது, பிசிசிஐ நிர்வாகிகள் ஒரு முறை பதவியில் இருந்துவிட்டால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக்கூடாது, இந்திய அணியின் தேர்வுக்குழுவில் 3 பேர் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பவை லோதா குழுவின் பரிந்துரைகளில் மிக முக்கியமானதாகும். ஆனால் இவை அனைத்துக்கும் பிசிசிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து புதிதாக அமைக்கப்படும் கமிட்டி தீவிரமாக பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுடனான இரு தரப்பு கிரிக்கெட் தொடர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமிதாப் செளத்ரி, "அரசு அனுமதியளித்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் இரு தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com