விம்பிள்டனில் களமிறங்குகிறார் ஜீவன் நெடுஞ்செழியன்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் களமிறங்குகிறார்.
விம்பிள்டனில் களமிறங்குகிறார் ஜீவன் நெடுஞ்செழியன்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் களமிறங்குகிறார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஜீவன் களமிறங்குவது இதுவே முதல்முறையாகும். அவர், அமெரிக்காவின் ஜேர்டு டொனால்ட்சன்னுடன் இணைந்து விளையாடவுள்ளார்.
முன்னதாக விம்பிள்டனில் தென் கொரியாவின் ஹியோன் சுங்குடன் இணைந்து களமிறங்கவிருந்தார் ஜீவன் நெடுஞ்செழியன். ஆனால் ஹியோன் சுங்கிற்கு காயம் ஏற்பட, அவர் போட்டியிலிருந்து விலகினார். இதனால் ஜீவன் விம்பிள்டனில் விளையாடுவது கேள்விக்குறியானது.
இந்த நிலையில் ஜீவனுடன் இணைந்து விளையாட ஜேர்டு டொனால்ட்சன் ஒப்புக்கொண்டார். இரட்டையர் பிரிவில் நேரடித் தகுதி பெறுவதற்கான ரேங்கிங் கட்ஆஃப் 160 ஆகும். சர்வதேச தரவரிசையில் ஜீவன் 95-ஆவது இடத்திலும், ஜேர்டு 65-ஆவது இடத்திலும் உள்ளனர். இவர்களுடைய தரவரிசையைக் கூட்டினால் ரேங்கிங் கட்ஆஃப் சரியாக 160 ஆகும். அதன் அடிப்படையில் விம்பிள்டனில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது குறித்து ஜீவன் நெடுஞ்செழியன் கூறுகையில், "எங்கள் இருவருடைய தரவரிசையையும் கூட்டுகிறபோது கட்ஆஃப் மிகச்சரியாக 160 வருகிறது. இது ஆச்சர்யமாக உள்ளது. ஹியோங் சுங் தன்னால் விம்பிள்டனில் விளையாட முடியாது என கூறியபோது, அதை கேட்பதற்கு மனதளவில் மிகக் கடினமாக இருந்தது. எனினும் இரட்டையர் பிரிவில் விளையாடும் வீரர்கள் பட்டியலை இறுதி செய்வதற்கு முன்னதாக அவர் தன்னால் விளையாட முடியாது என சொன்னது மகிழ்ச்சியளிக்கிறது. அதனால்தான் இப்போது ஜேர்டுடன் விளையாடும் வாய்ப்பை பெற முடிந்தது.
எனக்கு நம்பிக்கையளித்த மூத்த வீரரான ரோஹன் போபண்ணாவுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விம்பிள்டனில் என்னுடன் இணைந்து ஜேர்டு விளையாட விரும்புவதாக எனக்கு தகவல் கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். அதன்பிறகு நானும், ஜேர்டும் ஆலோசனை நடத்தினோம். அதைத் தொடர்ந்து தனது பயிற்சியாளருடன் ஆலோசனை நடத்திய ஜேர்டு, பின்னர் இருவரும் இணைந்து விளையாடலாம் என தெரிவித்தார்.
டென்னிஸ் விளையாட்டைப் பொறுத்தவரையில் விம்பிள்டன் மிகப்பெரிய போட்டியாகும். அதில் இந்த ஆண்டு பங்கேற்கவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஹியோன் சுங், இப்போது விலகியிருந்தாலும், அவர் விரைவில் காயத்திலிருந்து மீள்வார். எதிர்காலத்தில் நாங்கள் இருவரும் இணைந்து விளையாடுவோம் என நம்புகிறேன் என்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சார்பில் போபண்ணா, லியாண்டர் பயஸ், திவிஜ் சரண், பூரவ் ராஜா, ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். யாருடன் யார் மோதுவது என்பதை முடிவு செய்யும் "டிரா' வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com