பிசிசிஐ சிறப்புக் கமிட்டி: கங்குலி உள்ளிட்ட 7 பேர் உறுப்பினர்களாக நியமனம்

பிசிசிஐ மறுசீரமைப்புக்காக லோதா குழு வழங்கிய பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக ஆராய புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்புக் குழுவில் இந்திய அணி முன்னாள் கேப்டன் செளவ்ரவ் கங்குலி உள்ளிட்ட
பிசிசிஐ சிறப்புக் கமிட்டி: கங்குலி உள்ளிட்ட 7 பேர் உறுப்பினர்களாக நியமனம்

பிசிசிஐ மறுசீரமைப்புக்காக லோதா குழு வழங்கிய பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக ஆராய புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்புக் குழுவில் இந்திய அணி முன்னாள் கேப்டன் செளவ்ரவ் கங்குலி உள்ளிட்ட 7 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிசிசிஐ மூத்த அதிகாரியான ராஜீவ் சுக்லா தலைமையிலான இந்தக் குழுவில், டி.சி.மேத்தியூ (கேரள கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர்), நாபா பட்டாசார்ஜி (மேகாலய கிரிக்கெட் சங்கச் செயலர்), ஜெய் ஷா (குஜராத் கிரிக்கெட் சங்கத் தலைவர் மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன்), பிசிசிஐ பொருளாளர் அனிருத் செளதரி, பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளதரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களில் பலர், கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்கெனவே பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர். இதில் கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினராக உள்ளார். பிசிசிஐ மூத்த அதிகாரியான ராஜீவ் சுக்லா ஐபிஎல் போட்டிக்கான தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தலின்போது ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்குரிமை மட்டுமே; 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் பொறுப்பில் இருக்கக் கூடாது; பிசிசிஐ நிர்வாகிகள் ஒருமுறை பதவி வகித்தபின் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது; இந்திய அணியின் தேர்வுக் குழுவில் 3 பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது போன்ற லோதா குழு பரிந்துரைகளை பிசிசிஐ தரப்பு ஏற்க மறுத்து வருகிறது. அதுகுறித்து ஆராய்ந்து, உச்ச நீதிமன்ற விசாரணையின்போது பதிலளிப்பதற்காகவே இந்த சிறப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளதரி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிசிசிஐ தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு அடுத்த மாதம் 14}ஆம் தேதி வரவுள்ளது. அதற்குள்ளாக இந்தக் குழு தனக்கான பணியை தொடங்கியதை உறுதி செய்யும் வகையில் விரைவில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், அந்தக் குழுவின் எழுத்துப்பூர்வமான அறிக்கை ஜூலை 10}ஆம் தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கப்படும். பின்னர் பிசிசிஐ அதை ஆராய்ந்து, உச்ச நீதிமன்ற விசாரணைக்காக அந்த அறிக்கையை இறுதி செய்யும். இந்த சிறப்புக் குழுவானது, பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னாவிடம் தகுந்த இடைவெளிகளில் தகவல்களைத் தெரிவித்து வரும். பின்னர், இறுதி அறிக்கையானது அவரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com