இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து கருண் நாயர் நீக்கம்: பிசிசிஐ சூசகம்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கருண் நாயர் இடம்பெறமாட்டார் என்பதை பிசிசிஐ சூசகமாக உணர்த்தியுள்ளது...
இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து கருண் நாயர் நீக்கம்: பிசிசிஐ சூசகம்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கருண் நாயர் இடம்பெறமாட்டார் என்பதை பிசிசிஐ சூசகமாக உணர்த்தியுள்ளது. 

தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய 'ஏ' அணிகளின் விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்திய ஏ அணியின் கேப்டன்களாக கருண் நாயர், மணீஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்களுக்கான அணியின் கேப்டனாக கருண் நாயரும், ஒருநாள் ஆட்டங்களுக்கான அணியின் கேப்டனாக மணீஷ் பாண்டேவும் பொறுப்பு வகிக்க உள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய 'ஏ' அணி, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க 'ஏ' அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க 'ஏ' அணியுடன் 2 டெஸ்ட் ஆட்டங்களில் களம் காண்கிறது. இதில் முத்தரப்பு ஒருநாள் தொடர், ஜூலை 26-ஆம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் மோதும் ஆட்டத்துடன் தொடங்குகிறது. நாயர் தலைமையேற்றுள்ள இந்திய அணி விளையாடும் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் ஆகஸ்ட் 12 அன்று தொடங்குகிறது.  

இதன் அடிப்படையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கருண் நாயர் தேர்வு செய்யப்படமாட்டார் என பிசிசிஐ உணர்த்தியுள்ளது. சென்னை டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் எடுத்த கருண் நாயர் அதன்பிறகு மிகச் சுமாராகவே விளையாடிவருகிறார். முச்சதத்துக்குப் பிறகு 26, 0, 23, 5 என்றே ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணியில் 6 அல்லது 7-வது வீரராக அஸ்வின் களமிறங்குவதால் கருண் நாயர் அல்லது ரோஹித் சர்மா ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் இடம் கிடைக்கும். சிலசமயம் இருவருக்கும் இடம் கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு. இந்த நிலையில் கருண் நாயர் இந்திய அணியிலிருந்து நீக்கப்படுவதற்கான அடையாளமாக இந்திய ஏ அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் இடம்பெறமுடியாமல் போனாலும் இந்தியா ஏ சுற்றுப்பயணத்தில் அவர் விளையாடி ஃபார்மை மீட்டுக்கொண்டுவரவேண்டும் என பிசிசிஐ எண்ணுவதாகவே இதைக் கருதமுடியும். எனவே, இது கருண் நாயருக்கு வழங்கப்படும் மற்றொரு வாய்ப்பு என்று கூறலாம். 

கருண் நாயருக்குப் பதிலாக அணியில் ரோஹித் சர்மா இடம்பிடிக்கவுள்ளார். கடைசியாக நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய ரோஹித் சர்மா மூன்று டெஸ்டுகளிலும் தலா அரை சதம் எடுத்துள்ளார். இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிச்சயம் இடம்பிடிப்பார் எனத் தெரிகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஒரேயொரு டி20 ஆட்டத்தில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. ரோஹித் சர்மா காயத்திலிருந்து மீண்ட பிறகு ஐபிஎல் போட்டி, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் தொடர்ச்சியாக விளையாடிவிட்டார். அவருக்கு மீண்டும் காயம் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையிலேயே மேற்கிந்தியத் தீவுகள் தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளார். இதை விராட் கோலியும் பேட்டியில் உறுதிபடுத்தியுள்ளார். இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா நல்லபடியாகப் பங்கேற்கவேண்டும் என்பதற்காக அவரைப் பாதுகாக்கப்படும் நோக்கில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில் இலங்கை டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பிடிப்பதும் கருண் நாயர் நீக்கப்படுவதும் உறுதியாகின்றன.  

சரி, இந்த விஷயம் கருண் நாயருக்குத் தெரியாமல் போகுமா? இலங்கை டெஸ்ட் தொடரில் இடம்பெறாமல் போகக்கூடிய நிலை குறித்து கருண் நாயர் என்ன சொல்கிறார்?

நான் இலங்கைத் தொடருக்குத் தேர்வாகமாட்டேன் என்று இப்போதே கூறிவிடமுடியாது. அதேபோல அணியில் தேர்வு செய்யப்படுவது குறித்து அதிகம் யோசிக்கமாட்டேன். ஆடுகளத்தில் நான் அடிக்கும் ரன்கள்தான் பேசவேண்டும் என்று எண்ணுபவன் என்று கூறியுள்ளார்.

மே.இ. தொடர் ஜுலை 9-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி 3 டெஸ்டுகள் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் கண்டியில் ஜுலை 26 அன்று தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com