டெஸ்ட்: ஸ்மித் அபார சதம்! வலுவான நிலையில் ஆஸி. அணி!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்மித் அபாரமாக விளையாடி
டெஸ்ட்: ஸ்மித் அபார சதம்! வலுவான நிலையில் ஆஸி. அணி!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்மித் அபாரமாக விளையாடி சதமெடுத்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று தொடங்கியது. 

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்ட இந்திய அணி, 2-ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டதன் மூலம் நம்பிக்கை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் ராஞ்சியில் நடைபெறும் 3-ஆவது போட்டியில் வெல்வதில் இந்திய அணி தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியும் இந்தப் போட்டியில் வெல்லும் முனைப்பில் உள்ளது. 2-ஆவது டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டதால், இந்தப் போட்டியில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்திய அணியில் முகுந்துக்குப் பதிலாக விஜய் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடக்க வீரர்களான வார்னரும் ரென்ஷாவும் கடகடவென ரன்கள் எடுக்க ஆரம்பித்தார்கள். 10-வது ஓவரில் 50 ரன்களை எடுத்தார்கள். ஆனால் அதே ஓவரில் பந்துவீசிய ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 19 ரன்களில் வெளியேறினார் வார்னர். இந்த் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ரென்ஷா 44 ரன்கள் எடுத்த நிலையில் அரை சதத்தைத் தவறவிட்டார். உமேஷ் யாதவ் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

இதன்பின்னர் ஷேன் மார்ஷ், புஜாராவின் அற்புதமாக கேட்சினால் இரண்டே ரன்களில் பெவிலியன் திரும்பினார். அஸ்வின் இந்த விக்கெட்டை வீழ்த்தினார்.

டாஸ் வென்றபிறகும் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை முதல் நாளின் முதல் பகுதியில் இழந்துள்ளது. உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஸ்மித் வழக்கம்போல சிறப்பாக விளையாடினார். 104 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிவந்த ஹேண்ட்ஸ்காம்ப் 19 ரன்களில் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 60 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 80, மேக்ஸ்வெல் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

சதத்தை நெருங்குவதால் நிதானமாக ரன்கள் எடுக்க ஆரம்பித்தார் ஸ்மித். ஆனால் மறுமுனையில் வேகமாக ரன்கள் எடுத்தார் மேக்ஸ்வெல். 95 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

90 ரன்களுக்குப் பிறகு மிகவும் நிதானமாக ஆடிய ஸ்மித் 227 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். 97 இன்னிங்ஸ்களில் இதைச் சாதித்துள்ளார். குறைந்த இன்னிங்ஸ்களில் 5000 ரன்கள் எடுத்த வீரர்களில் 7-வது இடத்திலும் வேகமாக 5000 ரன்கள் எடுத்த மூன்றாவது ஆஸி. வீரர் என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். டெஸ்டுகள் அடிப்படையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். 5000 ரன்களை பிராட்மேன் 36 டெஸ்டுகளிலும் கவாஸ்கர் 52 டெஸ்டுகளிலும் எடுத்துள்ளார். 3-வதாக ஸ்மித் 53 டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்கள் எடுத்துள்ளார்.

முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஸ்மித் 117 ரன்களுடனும் மேக்ஸ்வெல் 82 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com