ராஞ்சி டெஸ்ட் டிரா! இந்தியாவின் நெருக்கடியைச் சமாளித்த ஆஸி. அணி!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரப்பான முறையில் டிரா ஆனது.
ராஞ்சி டெஸ்ட் டிரா! இந்தியாவின் நெருக்கடியைச் சமாளித்த ஆஸி. அணி!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரப்பான முறையில் டிரா ஆனது. பொறுப்பான பேட்டிங்கால் ஆஸி. அணி தோல்வியிலிருந்து தப்பியது.

ராஞ்சியில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய தீர்மானித்து, 137.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 451 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 178 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில், ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் இந்தியா 152 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் சேதேஷ்வர் புஜாரா அற்புதமாக ஆடி இரட்டைச் சதம் அடித்தார். அவருடன் தகுந்த பார்ட்னர்ஷிப் அமைத்த ரித்திமான் சாஹா சதம் கடந்தார். இதையடுத்து, தனது 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸ்திரேலியா, 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 7.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்தது. வார்னர் 14, நாதன் லயன் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ரென்ஷா 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 8 விக்கெட்டுகளைக் கொண்டு 129 ரன்களை எடுக்க வேண்டிய நிலைமையில் ஆட்டத்தைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்துவீச்சைச் சந்திக்கமுடியாமல் தடுமாறியது. இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் ரென்ஷா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஜடேஜா ஸ்மித்தை 21 ரன்களில் வீழ்த்தினார்.

உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 36 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்தது. ஷான் மார்ஷ் 15, ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இன்னமும் 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 69 ரன்கள் பின்தங்கிய ஆஸி. அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மார்ஷும் ஹேன்ஸ்காம்பும் அபாரமாக ஆடி இந்திய அணியின் பல்வேறு முயற்சிகளை முறியடித்தார்கள். இதனால் தேநீர் இடைவேளையின்போது 69 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து தோல்வியைத் தவிர்ப்பதில் கிட்டத்தட்ட வெற்றி கண்டார்கள் மார்ஷும் ஹேண்ட்ஸ்காம்பும்.

இதன்பிறகு நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு 53 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார் மார்ஷ். இதன்பிறகு விக்கெட் இல்லாமல் தவித்திருந்த அஸ்வின், கடைசியாக மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது 95 ஓவர்களின் முடிவிலேயே ஆட்டம் நிச்சயம் டிரா தான் என்கிற நிலை இருந்தது.

பிறகு, 100-வது ஓவரின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிரா ஆனது. ஹேன்ஸ்காம்ப் 72 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆஸி. அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். இந்தியாவின் தரப்பில் ஜடேஜா அற்புதமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் மார்ச் 25-ம் தேதி தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com