இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ்: 5-ஆவது முறையாக பட்டம் வென்றார் ஃபெடரர்

இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் பட்டம் வென்றார்.
இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ்: 5-ஆவது முறையாக பட்டம் வென்றார் ஃபெடரர்

இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் பட்டம் வென்றார். இது, இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் அவர் பெறும் 5-ஆவது பட்டமாகும்.
அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில், சகநாட்டவரான ஸ்டான் வாவ்ரிங்காவுடன் மோதினார் ஃபெடரர். இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில், 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஃபெடரர் வெற்றி பெற்றார்.
காயம் காரணமாக கடந்த ஆண்டு இண்டியன்வெல்ஸ் போட்டியில் பங்கேற்காக ஃபெடரர், தனது இந்த வெற்றிக்குப் பிறகு கோப்பையை பெறும் நிகழ்ச்சியில் கூறியதாவது:
இது மிகவும் அற்புதமான வாரமாக மாறியுள்ளது. ஆஸ்திரேலிய ஓபனில் வென்றபோது ஆச்சர்யமடையவில்லை. ஆனால், இண்டின்வெல்ஸ் வெற்றி, இங்கு ஆடிய விதம் எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
என்னால் மிகவும் சந்தோஷமாக உணர முடியவில்லை. ஏனெனில், இது இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய தொடக்கம். கடந்த ஆண்டு பிரிஸ்பேன் போட்டியைத் தவிர எந்தவொரு போட்டியின் இறுதிச்சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. அந்த வகையில், இப்போதைய இந்த வெற்றியை அருமையானதாக உணர்கிறேன் என்று ஃபெடரர் கூறினார்.
மாஸ்டர்ஸ் போட்டியில் 4-ஆவது முறையாக இறுதிச்சுற்று வரை முன்னேறிய வாவ்ரிங்கா, கோப்பை வழங்கும் நிகழ்ச்சியின்போது கூறியதாவது:
உங்களைப் போன்ற (ஃபெடரர்) கடினமான ஒரு வீரருக்கு எதிராகவே தோற்றுள்ளேன். ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றில் நீங்கள் விளையாடியபோது, உங்களின் மிகப்பெரிய ரசிகனானேன். அந்த வெற்றிக்காகவும், இந்த வெற்றிக்காகவும் உங்களுக்கு வாழ்த்துகள்.
எனக்கு இது மிகவும் கடினமான தோல்வி தான். இறுதிச்சுற்று வரை வந்தது மகிழ்ச்சியே. எனினும், இன்னும் நன்றாக விளையாட வேண்டியுள்ளது. ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பிறகு முழங்கால் காயத்துடன் கடுமையாக போராடி வந்தேன். ஆனால், இத்தகைய அளவு அதிலிருந்து மீண்டு வந்தும், இறுதிச்சுற்றில் தோல்வியடைந்துவிட்டேன் என்று வாவ்ரிங்கா கூறினார்.

வெஸ்னினா சாம்பியன்

இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், ரஷிய வீராங்கனை எலினா வெஸ்னினா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
முன்னதாக நடைபெற்ற இறுதிச்சுற்றில், சக நாட்டவரான ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவை எதிர்கொண்ட வெஸ்னினா, 6-7(8), 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஃபெடரர் சாதனை

*இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை கைப்பற்றும் வயதான வீரர் (35 வயது) என்ற பெருமையை ஃபெடரர் பெற்றுள்ளார். முன்னதாக இந்தப் பெருமை, அமெரிக்க வீரரான ஆன்ட்ரே அகாஸியிடம் இருந்தது. அவர், 2004-ஆம் ஆண்டு இண்டியன்வெல்ஸ் பட்டத்தை தனது 34-ஆவது வயதில் பெற்றிருந்தார்.
*இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை 5 முறை வென்ற வீரர்கள் வரிசையில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் இணைந்துள்ளார் ஃபெடரர். இதற்கு முன்பாக ஃபெடரர், கடந்த 2004, 2005, 2006, 2012 ஆகிய ஆண்டுகளில் இப்பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com