டெஸ்ட்: கோப்பையை வெல்லும் அணி எது? பரபரப்பில் ரசிகர்கள்!

கோலியால் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டால் அது மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படும்.
டெஸ்ட்: கோப்பையை வெல்லும் அணி எது? பரபரப்பில் ரசிகர்கள்!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் நாளை தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்ட இந்திய அணி, 2-ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டதன் மூலம் நம்பிக்கை பெற்றாலும் ராஞ்சி டெஸ்ட் போட்டியை வெல்ல முடியாமல் டிரா முடிவே கிடைத்தது. இந்த நிலையில் தர்மசாலாவில் நடைபெறும் 4-வது போட்டியில் வென்று தொடரையும் வெல்வதில் இந்திய அணி தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியும் இந்தப் போட்டியில் வெல்லும் முனைப்பில் உள்ளது. கோலி - ஸ்மித் இடையே தொடர்ந்து கருத்துமோதல் ஏற்படுவதால், இந்தப் போட்டியிலும் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பேட்டிங்கில் கோலியின் நிலைதான் குழப்பத்தை ஏற்படுத்திவருகிறது. இந்திய கேப்டன் விராட் கோலி வலது தோள்பட்டை காயம் காரணமாக வியாழக்கிழமை வலைப் பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் அவர் நாளை தொடங்கவுள்ள கடைசி டெஸ்டில் பங்குபெறுவது தொடர்ந்து சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது. ராஞ்சியில் நடைபெற்ற 3-ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸின்போது பவுண்டரியைத் தடுக்க முயன்ற கோலிக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஞ்சி டெஸ்டிலேயே அவர் களம் இறங்கினார். எனினும், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில், 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் சனிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியினர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்காக சக அணியினருடன் மைதானத்துக்கு வந்த கோலி ஒரு சில உடற்பயிற்சிகளை மட்டும் மேற்கொண்டார். ஆனால், வலைப் பயிற்சியில் ஈடுபடவில்லை. மாற்று வீரர் ஷ்ரேயாஸ்: இதனிடையே, கோலி ஆட முடியாமல் போகும் சூழ்நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.  

காயம் குறித்து கோலி கூறியதாவது: நான் 100% உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன். இன்னொரு பரிசோதனைக்குப் பிறகு என்னுடைய நிலையைத் தெளிவுபடுத்துவேன். இன்றிரவு அல்லது நாளை காலை நான் ஆடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார். கோலியால் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டால் அது மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படும். ரஹானேவின் தலைமையில் இந்திய அணி எந்தளவுக்கு ஆக்ரோஷமாக விளையாடி வெற்றியைப் பெறும் என்கிற கேள்வி தற்போது ரசிகர்கள் மனத்தில் எழுந்துள்ளது. கோலி அணியில் இடம்பெறாவிட்டால் அதைச் சாதகமாக்கி தொடரை வெல்லக் காத்துக்கொண்டிருக்கிறது ஆஸி. அணி.

இந்தப் போட்டியில் ராகுலும், விஜயும் இணைந்து சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தித் தருவது முக்கியமானதாகும். மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் புஜாரா, ரஹானே என  இருவலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள். இந்தப் போட்டியில் இடம்பெறுகிற பட்சத்தில் கோலி ரன் குவித்தால் மட்டுமே இந்திய அணியால் பெரிய அளவிலான ஸ்கோரைக் குவிக்க முடியும். டிஆர்எஸ் மற்றும் பல விவகாரங்களில் ஸ்மித்துடனான மோதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தப் போட்டியில் கோலி சிறப்பாக ஆடி ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலி உடற்தகுதியை நிரூபிக்காவிட்டால் அவருக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படுவார். 6-ஆவது பேட்ஸ்மேன் இடத்தைப் பொறுத்தவரையில் கருண் நாயர் அல்லது ஜெயந்த் யாதவ் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்வரிசையில் விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

வேகப்பந்து வீச்சில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா கூட்டணியையும் நம்பியுள்ளது இந்தியா. தர்மசாலா ஆடுகளம், வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் புவனேஸ்வர் குமார் அணியில் இடம்பெறவும் வாய்ப்புண்டு. கடந்தப் போட்டியில் அசத்தலாக பந்துவீசிய ஜடேஜா, இந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின் தனது பழைய மேஜிக்கை தர்மசாலாவிலும் நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் டேவிட் வார்னர், மட் ரென்ஷா, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மேக்ஸ்வெல், மேத்யூ வேட் போன்ற பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். வார்னர் தடுமாறி வந்தபோதிலும், ஸ்மித்தும், ரென்ஷாவும் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கின்றனர். இதேபோல் ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோரும் ஓரளவு நன்றாக ஆடி வருகின்றனர். காயம் காரணமாக விலகிவிட்ட மிட்செல் மார்ஷின் இடத்தைப் பிடித்த கிளென் மேக்ஸ்வெல் இதிலும் சிறப்பாக விளையாடுவார் என்கிற நம்பிக்கை கொண்டுள்ளது ஆஸி. அணி.

வேகப்பந்து வீச்சில் ஜோஷ் ஹேஸில்வுட், பட் கம்மின்ஸ் ஆகியோரை நம்பியுள்ளது ஆஸ்திரேலியா. முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக விலகியது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தாலும் இருவரும் அந்தக் குறையைப் போக்கியுள்ளார்கள். சுழற்பந்து வீச்சில் நாதன் லயன், ஸ்டீவ் ஓ’கீஃப் கூட்டணி அபாரமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் போட்டியிலும் அந்தக் கூட்டணி சிறப்பாக பந்துவீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தர்மசாலா ஆடுகளம், பவுன்சர் பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருக்கும் என்பதால் போட்டியின் முடிவை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து, தர்மசாலா மைதான பொறுப்பாளர் சுனில் செளஹான் கூறியதாவது: ஆடுகளம் குறித்து அணி நிர்வாகத் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அறிவுறுத்தலும் வரவில்லை. ஆடுகளத்தின் இயல்பான தன்மையுடனேயே அதனை மேம்படுத்தி வருகிறேன். தர்மசாலா ஆடுகளம் பவுன்சருக்கு சாதகமானதாக இருக்கும். இறங்கி அடிக்கும், கட் ஷாட் அடிக்கும் பேட்ஸ்மேன்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்குவதாக இருக்கும். இந்தக் களத்தில் போட்டி 5 நாள்களுக்கு நீடிக்கும். விக்கெட்டுக்கு சாதகமான மைதானமாகவே இது மேம்படுத்தப்பட்டுள்ளது. எப்போதும் போல், வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக விக்கெட் எடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம். ஆடுகளத்தின் தன்மையை அப்படியே தொடரச் செய்யும் வகையில், அதன் மேல்பரப்பு மண்ணை சீசன் தோறும் மாற்றி வருகிறோம். லூதியானாவில் எடுக்கப்படும் குறிப்பிட்ட வகையிலான மண்ணை சமீபகாலமாக அதற்கு பயன்படுத்தி வருகிறோம் என்று சுனில் செளஹான் கூறினார்.

இந்தியா (உத்தேச லெவன்): கே.எல்.ராகுல், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, கோலி/ஷ்ரேயாஸ் ஐயர், அஜிங்க்ய ரஹானே, கருண் நாயர்/ஜெயந்த் யாதவ், ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா/புவனேஸ்வர் குமார்.
ஆஸ்திரேலியா (உத்தேச லெவன்): டேவிட் வார்னர், மட் ரென்ஷா, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஓ’கீஃப், பட் கம்மின்ஸ், நாதன் லயன், ஜோஷ் ஹேஸில்வுட்.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

Feb 23-27, முதல் டெஸ்ட், புணே – 333 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Mar 4-8, இரண்டாவது டெஸ்ட், பெங்களூரு – 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Mar 16-20, மூன்றாவது டெஸ்ட், ராஞ்சி – டிரா

Mar 25-29, நான்காம் டெஸ்ட், தர்மசாலா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com