ஆஸ்திரேலியா 300: குல்தீப் யாதவுக்கு 4 விக்கெட்டுகள்!

அறிமுக வீரர் குல்தீப் யாதவ் அற்புதமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்...
ஆஸ்திரேலியா 300: குல்தீப் யாதவுக்கு 4 விக்கெட்டுகள்!

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அறிமுக வீரர் குல்தீப் யாதவ் அற்புதமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று தொடங்கியது.

மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளுமே 1-1 என சம நிலையில் உள்ளன. ஒரு போட்டி டிரா ஆகியுள்ளது. எனவே, இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா களமிறங்கும் நிலையில், சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரை கைப்பற்றியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் இரு மாற்றங்கள். காயம் காரணமாக கோலி இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இஷாந்த் சர்மாவுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த டெஸ்ட் போட்டிக்கு ரஹானே இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

தர்மசாலாவின் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி இது. முதல் பந்திலேயே விக்கெட் விழுந்திருக்கவேண்டியது. ஆனால் புவனேஸ்வர் பந்துவீச்சில் வார்னர் கொடுத்த கேட்ச்சைத் தவறவிட்டார் கருண் நாயர். இதனால் தப்பிப் பிழைத்தார் வார்னர். இந்த டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடி வரும் ரென்ஷா 1 ரன்னில் உமேஷ் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த வார்னரும் ஸ்மித்தும் இந்திய அணியின் பந்துவீச்சை ஒரு கை பார்த்தார்கள். ஷாட் அடிக்க சாதகமான பிட்ச் என்பதால் கடகடவென ரன்கள் எடுத்து தகுந்த இடைவெளியில் பவுண்டரிகள் அடித்தார்கள். ஸ்மித் 67 பந்துகளிலும் வார்னர் 72 பந்துகளிலும் அரை சதம் எடுத்தார்கள். முதல் நாளின் முதல் பகுதியில் 31 ஓவர்களில் 18 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்தார்கள் இருவரும். உணவு இடைவேளையின்போது 31 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 101 பந்துகளில் 72 ரன்களும் வார்னர் 79 பந்துகளில் 54 ரன்களும் எடுத்தார்கள். 

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணியின் பந்துவீச்சு அசத்தலாக இருந்தது. கடகவென விக்கெட்டுகள் விழுந்தன. முதலில் குல்தீப் பந்துவீச்சில் 56 ரன்களில் வெளியேறினார் வார்னர். இதன்பிறகு உமேஷ் யாதவ் பந்துவீச்சில் 4 ரன்களில் வீழ்ந்தார் மார்ஷ். இதன்பின்னர் அறிமுக வீரர் குல்தீப் யாதவின் அசத்தல் வேலைகள் ஆரம்பமாயின. 3-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹேண்ட்ஸ்காம்ப் 8 ரன்களில் குல்தீப் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனார். இதன்பின்னர் மேக்ஸ்வெல்லும் குல்தீப்பின் அருமையான பந்தில் போல்ட் ஆனார். மறுமுனையில் வலுவாக ஆடிக்கொண்டிருந்த ஸ்மித் சதமடித்தார். பிறகு அவர் அஸ்வின் பந்தில் 111 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 முதல்நாள் தேநீர் இடைவேளையின்போது ஆஸி. அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. 

இதன்பிறகு கம்மின்ஸ் 21 ரன்களில் குல்தீப்பிடமே கேட்ச் கொடுத்து 21 ரன்களில் வெளியேறினார். சிறிது நேரம் களத்தில் இருந்த ஓ’கீஃப் 8 ரன்களில் ஷ்ரேயாஸ் ஐயரின் அற்புதமான ஃபீல்டிங்கினால் ரன் அவுட் ஆனார். மேத்யூ வேட் மற்ற வீரர்களை விடவும் பொறுப்புடன் விளையாடி 113 பந்துகளில் அரை சதம் எடுத்தார். ஆனால் அவர் ஜடேஜா பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆகி 57 ரன்களில் வெளியேற நேர்ந்தது. கடைசியாக லயன் 13 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள். அஸ்வின், ஜடேஜா, புவனேஸ்வர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தார்கள். 

இதன்பிறகு 1 ஓவர் மட்டும் விளையாடினார்கள் ராகுலும் விஜய்யும். ரன்னும் எடுக்கவில்லை. விக்கெட்டும் விழவில்லை. 

1 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் என்கிற நிலையில் இருந்து குல்தீப் யாதவின் அற்புதமான பந்துவீச்சினாலும் ரஹானேவின் சிறந்த தலைமைப் பண்பினாலும் ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 300 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதைப் பயன்படுத்தி இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்து முன்னிலை பெற திட்டமிடும். முக்கியமான இந்த டெஸ்டை அற்புதமாக ஆரம்பித்துள்ளது இந்திய அணி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com