மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதியை வழங்குங்கள்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3 போட்டிகளை நடத்திய சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு, அதற்குரிய நிதியை வழங்குமாறு பிசிசிஐ-யை நிர்வகிக்க
மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதியை வழங்குங்கள்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3 போட்டிகளை நடத்திய சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு, அதற்குரிய நிதியை வழங்குமாறு பிசிசிஐ-யை நிர்வகிக்க தன்னால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், தர்மசாலாவில் அந்த இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான ரூ.2.5 கோடி நிதியையும் ஹிமாசல பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு அளிக்குமாறும் அந்த உத்தரவில் குறிப்பிட்டது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகளை நடத்திய மகாராஷ்டிரம், கர்நாடகம், ஜார்க்கண்ட் ஆகிய மாநில கிரிக்கெட் சங்கங்கள், போட்டியை நடத்தியதற்குரிய நிதியை தங்களுக்கு வழங்க பிசிசிஐக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
அந்த மனு மீதான விசாரணை மேற்கொண்ட நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது. இந்த அமர்வில், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
இதனிடையே, ஐபிஎல் போட்டிக்கும் தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை என்ற விவகாரத்தை சில மாநில கிரிக்கெட் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்திடம் எழுப்பின.
அதுகுறித்து, நீதிபதிகள் அமர்வு கூறியதாவது:
ஐபிஎல் போட்டி தொடர்பான சில முத்தரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும், சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. நிலுவையில் இருக்கும் அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு, அதில் குறிப்பிட்டுள்ள வகையில் பிசிசிஐ நடந்துகொள்ள வேண்டும்.
அதாவது, உரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் பட்சத்தில், நிதி வழங்கும் விவகாரங்களும் அதற்குள்ளாகவே வரும். அந்த வகையில், சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு பிசிசிஐ நிதி வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.
இதனிடையே, பிசிசிஐ நிர்வாகிகளின் பதவிக் காலம் தொடர்பான தெளிவுபடுத்துதலையும் நீதிபதிகள் அமர்வு வழங்கியது. அதன்படி, மாநில கிரிக்கெட் சங்கங்களில் 9 ஆண்டுகளாக நிர்வாகிகளாக இருக்கும் நபர், பிசிசிஐ நிர்வாகி பதவியை வகிக்க இயலாது.
எனினும், பிசிசிஐயில் 9 ஆண்டுகளாக பொறுப்பு வகித்த ஒரு நபர், மாநில கிரிக்கெட் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு, அதிகாரியாக பொறுப்பேற்கலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com