ஸ்மித் சதம்; ஆஸ்திரேலியா 300-க்கு ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் 300 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
4 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவை (நடுவில்) பாராட்டும் சகவீரர்கள்.
4 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவை (நடுவில்) பாராட்டும் சகவீரர்கள்.

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் 300 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 173 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் குவித்தார்.
அறிமுகப் போட்டியில் விளையாடும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 23 ஓவர்களில் 68 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஹிமாசலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. 3-ஆவது டெஸ்ட் போட்டியின்போது தோள்பட்டையில் காயமடைந்த கேப்டன் கோலி இந்தப் போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டார். இந்திய அணி 5 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். டேவிட் வார்னரும், மட் ரென்ஷாவும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ûஸ தொடங்கினர். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீச, அதன் முதல் பந்திலேயே டேவிட் வார்னர் கொடுத்த கேட்ச்சை கோட்டைவிட்டார் கருண் நாயர். இதனால் அது பவுண்டரியானது. 2-ஆவது ஓவரை வீசிய உமேஷ் யாதவ், ரென்ஷாவை (1 ரன்) கிளீன் போல்டாக்கினார்.
குல்தீப் அபாரம்: இதையடுத்து கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் களம்புகுந்தார். ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய ஸ்மித் 67 பந்துகளில் அரை சதமடிக்க, 24.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா. மறுமுனையில் நிதானமாக ரன் சேர்த்த டேவிட் வார்னர் 72 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.
ஆஸ்திரேலியா 34.1 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த ஜோடியைப் பிரித்தார் அறிமுக வீரரான குல்தீப் யாதவ். 87 பந்துகளைச் சந்தித்த வார்னர் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்து ரஹானேவிடம் கேட்ச் ஆனார். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 134 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களம்புகுந்த ஷான் மார்ஷ் 4 ரன்களில் நடையைக் கட்ட, பின்னர் வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் (8), கிளென் மேக்ஸ்வெல் (8) ஆகியோர் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியா 178 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஸ்மித் சதம்: இதையடுத்து கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் வேகமாக ரன் சேர்த்த ஸ்மித், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி 150 பந்துகளில் சதமடித்தார். இந்தத் தொடரில் அவர் அடித்த 3-ஆவது சதம் இது. அதேநேரத்தில் டெஸ்ட் போட்டியில் அவர் எடுத்த 20-ஆவது சதம் இதுவாகும்.
ஆஸ்திரேலியா 208 ரன்களை எட்டியபோது அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஸ்மித். அவர் 173 பந்துகளில் 111 ரன்கள் குவித்தார். இதையடுத்து களம் கண்ட பட் கம்மின்ஸ், அஸ்வின் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி ரன் கணக்கைத் தொடங்கினார். சற்று வேகமாக ரன் சேர்த்த கம்மின்ஸ் 21 ரன்கள் சேர்த்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார்.
மேத்யூ வேட் அரை சதம்: இதையடுத்து களமிறங்கிய ஓ"கீஃப் 8 ரன்களில் ரன் அவுட்டாக, நாதன் லயன் களம்புகுந்தார். இதனிடையே 113 பந்துகளில் அரை சதம் கண்டார் மேத்யூ வேட். 125 பந்துகளைச் சந்தித்த மேத்யூ வேட் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் போல்டு ஆனார். இதையடுத்து ஹேஸில்வுட் களமிறங்க, நாதன் லயன் 13 ரன்களில் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் 88.3 ஓவர்களில் 300 ரன்களோடு முடிவுக்கு வந்தது. ஹேஸில்வுட் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தியா-0/0: பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு ஓவரில் ரன் ஏதும் எடுக்கவில்லை. கே.எல்.ராகுல், முரளி விஜய் ஆகியோர் களத்தில் உள்ளனர். ராகுல் 6 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. விஜய் ஒரு பந்தைக்கூட சந்திக்கவில்லை.

ஸ்மித் சாதனைகள்...

2

இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் ஒன்றில் மூன்று சதங்களை விளாசிய 2-ஆவது வெளிநாட்டு கேப்டன் ஸ்மித். முதல் கேப்டன் அலாஸ்டர் குக் ஆவார். அவர் 2012-13 தொடரில் மூன்று சதங்களை விளாசியுள்ளார். அதேநேரத்தில் இந்திய மண்ணில் ஒரு தொடரில் 3 சதங்களை விளாசிய 6-ஆவது வெளிநாட்டு வீரர் ஆவார்.

99

ஸ்மித் தனது 99-ஆவது இன்னிங்ஸில் 20-ஆவது சதத்தை அடித்துள்ளார். இதன்மூலம் குறைந்த இன்னிங்ஸ்களில் 20 சதங்களை விளாசியவர்கள் வரிசையில் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். டான் பிராட்மேன் (55), சுநீல் கவாஸ்கர், மேத்யூ ஹேடன் (இருவரும் தலா 95 இன்னிங்ஸ்) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

7

டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 7-ஆவது சதத்தை விளாசியுள்ளார் ஸ்மித். ரிக்கி பாண்டிங், விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக தலா 8 சதங்களை விளாசியதே இன்றளவும் சாதனையாக உள்ளது.

1

இந்திய மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் மூன்று சதங்களை விளாசிய முதல் ஆஸ்திரேலியர் என்ற பெருமையை ஸ்டீவன் ஸ்மித் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் நீல் ஹர்வி, நார்ம் ஓ"நீல் (இருவரும் 1959-60), மேத்யூ ஹேடன் (2000-01), டேமியன் மார்ட்டின் (2004-05) ஆகியோர் தலா இரு சதங்களை விளாசியதே ஆஸ்திரேலியர்களின் சாதனையாக இருந்தது.


சைனாமேன் குல்தீப்!

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய இந்தியாவின் முதல் சைனாமேன் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் பொதுவாக லெக் ஸ்பின் வீசுவார்கள். ஆனால் மிக அரிதாக சில இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் மணிக்கட்டை சுழற்றி ஆப் ஸ்பின் வீசுவார்கள். அவர்கள் சைனாமேன் பந்துவீச்சாளர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் சிவ கெüஷிக் போன்ற சைனாமேன் பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், சர்வதேசப் போட்டியில் விளையாடிய இந்தியாவின் முதல் சைனாமேன் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்தான்.
சைனாமேன் பந்துவீச்சு என்ற பெயர் வருவதற்கு காரணமாக இருந்தவர் சீனாவைச் சேர்ந்த எல்லிஸ் எட்கர் அகாங். இவர், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 1930 முதல் 1935 வரையில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். 1933-இல் மேற்கிந்தியத் தீவுகள்-இங்கிலாந்து இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் வால்டர் ராபின்ஸ் பேட் செய்து கொண்டிருந்தார். அப்போது இடது கை சுழற்பந்து வீச்சாளரான எட்கர் பந்துவீச வந்தார். அவர், லெக் ஸ்பின் வீசுவார் என எதிர்பார்த்தார் வால்டர். ஆனால் அவர் ஆப் ஸ்பின் வீச, வால்டர் போல்டானார். அதனால் கோபமடைந்த அவர், சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட எட்கரைப் பார்த்து, பிளடி சைனாமேன் எனத் திட்டினார். அது முதல் அந்தப் பந்து வீச்சு முறையானது சைனாமேன் பந்துவீச்சு என அழைக்கப்படுகிறது.


ஷேன் வார்னிடம் கற்ற வித்தையால் வார்னரை வீழ்த்தினேன்

முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த குல்தீப் யாதவ், "நான் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தியதை கவனித்தீர்களா? அது சைனாமேன் பந்துவீச்சு அல்ல. அது பிளிப்பர் வகை (பெரு விரல், ஆள்காட்டி விரல், நடு விரல் ஆகியவற்றைப் பயன்படுத்தி வேகமாக சுழல விடுவது) பந்துவீச்சு. அதுபோன்ற பந்துவீச்சு முறையை ஷேன் வார்னிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். வார்னிடம் கற்ற வித்தையை வைத்து அவருடைய நாட்டு வீரரையே வீழ்த்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது முன்மாதிரி ஷேன் வார்ன்தான். இளம் வயதிலிருந்தே அவரை பின்பற்றி வருகிறேன். அவருடைய விடியோக்களை பார்க்கிறேன். அவரை சந்திக்க வேண்டும் என்பதே எனது கனவு' என்றார்.

ஸ்டெயின் சாதனையை தகர்த்தார் அஸ்வின்

இந்தப் போட்டியில் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின் இந்த சீசனில் தனது 79-ஆவது விக்கெட்டை பதிவு செய்தார். இதன்மூலம் ஒரு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார். முன்னதாக 2007-08 சீசனில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் 78 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை இப்போது அஸ்வின் முறியடித்துள்ளார்.

33-ஆவது கேப்டன் ரஹானே

இந்தப் போட்டியில் கேப்டன் கோலி காயம் காரணமாக விளையாடவில்லை. அதனால் அஜிங்க்ய ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. இதன்மூலம் இந்திய டெஸ்ட் அணியின் 33-ஆவது கேப்டன் என்ற பெருமை ரஹானேவுக்கு கிடைத்தது.
2011 நவம்பரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கோலி தொடர்ச்சியாக 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த நிலையில், இப்போது முதல்முறையாக காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை.

ஸ்கோர் போர்டு

ஆஸ்திரேலியா

டேவிட் வார்னர் (சி) ரஹானே (பி) குல்தீப் 56 (87)
மட் ரென்ஷா (பி) உமேஷ் 1 (6)
ஸ்டீவன் ஸ்மித் (சி) ரஹானே (பி) அஸ்வின் 111 (173)
ஷான் மார்ஷ் (சி) சாஹா (பி) உமேஷ் 4 (14)
ஹேண்ட்ஸ்காம்ப் (பி) குல்தீப் 8 (23)
மேக்ஸ்வெல் (பி) குல்தீப் 8 (17)
மேத்யூ வேட் (பி) ஜடேஜா 57 (125)
பட் கம்மின்ஸ் (சி) & (பி) குல்தீப் 21 (40)
ஸ்டீவ் ஓ"கீஃப் ரன் அவுட் (சாஹா/சப்ஸ்டியூட்-ஐயர்) 8 (16)
நாதன் லயன் (சி) புஜாரா (பி) குமார் 13 (28)
ஜோஷ் ஹேஸில்வுட் நாட் அவுட் 2 (2)
உதிரிகள் 11

விக்கெட் வீழ்ச்சி: 1-10 (ரென்ஷா), 2-144 (வார்னர்),
3-153 (மார்ஷ்), 4-168 (ஹேண்ட்ஸ்காம்ப்), 5-178 (மேக்ஸ்வெல்), 6-208 (ஸ்மித்), 7-245 (கம்மின்ஸ்), 8-269 (ஓ"கீஃப்),
9-298 (வேட்), 10-300 (லயன்).

பந்துவீச்சு: புவனேஸ்வர் குமார் 12.3-2-41-1,
உமேஷ் யாதவ் 15-1-69-2, அஸ்வின் 23-5-54-1,
ரவீந்திர ஜடேஜா 15-1-57-1, குல்தீப் யாதவ் 23-3-68-4.

இந்தியா

கே.எல்.ராகுல் நாட் அவுட் 0 (6)
முரளி விஜய் நாட் அவுட் 0 (0)
உதிரிகள் 0

மொத்தம் (ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி) 0

பந்துவீச்சு: ஜோஷ் ஹேஸில்வுட் 1-1-0-0.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com