ஜடேஜா அரை சதம்! முதல் இன்னிங்ஸில் இந்தியா 32 ரன்கள் முன்னிலை!

ஜடேஜா அரை சதம் எடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் முன்னிலை பெற உதவியுள்ளார். 
ஜடேஜா அரை சதம்! முதல் இன்னிங்ஸில் இந்தியா 32 ரன்கள் முன்னிலை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜடேஜா அரை சதம் எடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் முன்னிலை பெற உதவியுள்ளார். 

ஹிமாசலப் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் 300 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 111, மேத்யூ வேட் 57, டேவிட் வார்னர் 56 ரன்கள் சேர்த்தனர். இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் .
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 91 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. சாஹா 10, ஜடேஜா 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

கடைசி 3 நாள்களும் ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவது மிகவும் கடினம் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றாலொழிய இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்வது மிகவும் கடினம் என்கிற சூழலில் இன்று காலை ஜடேஜாவும் சாஹாவும் அற்புதமாக ஆஸி.யின் பந்துவீச்சை எதிர்கொண்டார்கள். இன்றைய நாளின் முதல் பந்திலேயே அவுட் ஆனார் ஜடேஜா. ஆனால் டிஆர்எஸ் உதவியுடன் அம்பயரின் முடிவு திரும்பப்பெறப்பட்டது. இதை ஜடேஜா சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸ், பவுண்டரி என எடுத்து ஆஸி. அணிக்குச் சரியான பதிலடி கொடுத்தார். ஜடேஜா - சாஹா கூட்டணி இந்த ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி ஆஸி.யின் திட்டங்களை முறியடித்தார்கள். ஜடேஜா 83 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்தார். 

பிறகு எதிர்பாராதவிதமாக 63 ரன்களில் ஆட்டமிழந்தார் ஜடேஜா. அதன்பின்னர் கடகடவென மீதமுள்ள விக்கெட்டுகள் விழுந்தன. புவனேஸ்வர் குமார் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அரை சதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாஹா 31 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் வீழ்ந்தார். கடைசியாக குல்தீப் யாதவின் விக்கெட்டை (7 ரன்கள்) வீழ்த்தினார் லயன். இது அவருடைய 5-வது விக்கெட்டாகும்.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 118.1 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. லயன் 5 விக்கெட்டுகளும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com