தொடர் நாயகன் & ஆட்ட நாயகன்: ஜடேஜா என்கிற தன்னிகரற்ற நட்சத்திரம்! 

அஸ்வின் போன்ற ஒரு வலுவான போட்டியாளருக்கு நிகராக இந்த ஹோம் சீஸனில் சாதித்து...
தொடர் நாயகன் & ஆட்ட நாயகன்: ஜடேஜா என்கிற தன்னிகரற்ற நட்சத்திரம்! 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-1 என்கிற கணக்கில் வென்றுள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கான தொடர் நாயகன் விருது மட்டுமில்லாமல் தர்மசாலா டெஸ்டின் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றுள்ளார் ஜடேஜா. 25 விக்கெட்டுகளும் 125 ரன்களும் எடுத்து இந்தப் பட்டத்தை வென்றுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த காலங்களில் ஒரு நாள் போட்டியில் சிறப்பாக ஆடி வந்திருக்கிறேன். இப்போது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக ஆடி வருவது மனநிறைவு அளிக்கிறது. தற்போதைய நிலையில் நான் ஒரு நாள் போட்டிக்கு மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிக்கும் பொருத்தமான வீரர் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஜடேஜா.

இந்த ஹோம் சீஸனில் விளையாடிய 13 டெஸ்டுகளில் 10-1 என்கிற கணக்கில் வென்றுள்ளது இந்திய அணி. இரண்டு போட்டிகள் டிரா ஆயின. இந்த சீஸனில் 6 அரை சதங்களை விளாசியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. அவர் மொத்தமே டெஸ்ட் போட்டியில் 7 அரை சதங்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் 6 அரை சதங்கள் இந்த சீஸனில் கிடைத்துள்ளது. 

சர்வதேச அளவில் ஒரு சீஸனில் 50 விக்கெட் மற்றும் 500 ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜடேஜா. கபில்தேவ் (1979-80), மிட்செல் ஜான்சன் (2008-09) ஆகியோர் மற்ற இருவர். இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 556 ரன்களையும், 71 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

இந்த சீஸனில் அஸ்வின் 6-வதாக ஆட ஆரம்பித்தபிறகு 8-வது வீரராகவே களமிறங்குகிறார் ஜடேஜா. அதாவது பெரும்பாலும் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிகிற வேளையில்தான் பேட்டிங் செய்ய வருவார். இந்த வாய்ப்பில் பேட்டிங்கில் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும்?

ஆனால் கிடைத்த வாய்ப்புகளில் தன் திறமையை நிரூபித்து இந்த சீஸனின் மகத்தான வீரராக ஆகியுள்ளார் ஜடேஜா.

இந்த சீஸனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 68 விக்கெட்டுகள் எடுத்து 2-வது இடம் பிடித்துள்ளார். 82 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின் முதலிடத்தில் உள்ளார்.

ஆனால் அஸ்வினை விடவும் அதிக ரன்கள் எடுத்துள்ளார் ஜடேஜா. அவர் இந்த ஹோம் சீஸனில் 556 ரன்களும் அஸ்வின் 464 ரன்களும் எடுத்துள்ளார்கள். 

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அஸ்வினும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கோலியும் தொடர் நாயகன் விருதைப் பெற்றார்கள். இந்தமுறை ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தொடர் நாயகன் விருது ஜடேஜாவுக்குக் கிடைத்துள்ளது. தர்மசாலா டெஸ்டின் ஆட்ட நாயகனும் விருதும் அவருக்கே வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இந்த ஹோம் சீஸனில் இந்தியா விளையாடிய மூன்று முக்கிய தொடர்களிலும் தலா ஒரு ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார் ஜடேஜா. 

அஸ்வின் போன்ற ஒரு வலுவான போட்டியாளருக்கு நிகராக இந்த ஹோம் சீஸனில் சாதித்து இந்திய கிரிக்கெட்டின் தன்னிகரற்ற நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் ஜடேஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com