டேவிஸ் கோப்பை: லியாண்டர் பயஸ் நீக்கம்!

இந்திய அணியின் புதிய ’நான் பிளேயிங்' கேப்டனான மகேஷ் இம்முடிவுகளை எடுத்துள்ளார்.
டேவிஸ் கோப்பை: லியாண்டர் பயஸ் நீக்கம்!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆசிய-ஓசியானியா குரூப்-1 இரண்டாவது சுற்றில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் மூத்த வீரரான லியாண்டர் பயஸ் நீக்கப்பட்டுள்ளார். போட்டியில் களமிறங்கும் நால்வரில் ஒருவராக அவர் இடம்பெறவில்லை. 

இந்திய அணியின் புதிய ’நான் பிளேயிங்' கேப்டனான மகேஷ் இம்முடிவுகளை எடுத்துள்ளார். ராம்குமார் ராமநாதன், யுகி பாம்ப்ரி, பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் அணியின் நால்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். லியாண்டர் பெயஸ், ரோஹன் போபண்ணா ஆகியோர் ரிசர்வ் வீரர்களாகத் தேர்வாகியுள்ளார்கள். ஏழாவதாக விஷ்ணு வர்தன் பயிற்சி வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்தியா-நியூஸிலாந்து இடையிலான ஆசிய-ஓசியானியா குரூப் 1 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி புணேவில் கடந்த மாதம் நடைபெற்றது. ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் லியாண்டர் பயஸ்-விஷ்ணுவர்தன் ஜோடி, நியூஸிலாந்தின் ஆர்டெம் சிடாக்-மைக்கேல் வீனஸ் ஜோடியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றிய பயஸ் ஜோடி, அடுத்த 3 செட்களை 3-6, 6-7 (6), 3-6 என்ற செட் கணக்கில் நியூஸிலாந்து ஜோடியிடம் இழந்து தோற்றது.

55-ஆவது டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாடிய பயஸ், இந்த ஆட்டத்தில் வென்றிருந்தால், டேவிஸ் கோப்பை வரலாற்றில் அதிக (43) வெற்றிகளை பெற்றவர் என்ற சாதனையை படைத்திருப்பார். ஆனால் தோற்றதால் அந்த சாதனையை தவறவிட்டார்.

இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையேயான போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது. முன்னதாக இந்தியா 4-1 என்ற கணக்கில் நியூஸிலாந்தையும், உஸ்பெகிஸ்தான் 3-1 என்ற கணக்கில் தென் கொரியாவையும் தோற்கடித்ததன. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெங்களூரில் விளையாடவுள்ளது இந்திய டென்னிஸ் அணி. இதற்கு முன்னர் இங்கு விளையாடியபோது உலக குரூப் பிளே ஆப் சுற்றில் இந்தியா 2-3 என்ற கணக்கில் செர்பியாவிடம் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவும், உஸ்பெகிஸ்தானும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்றுள்ளன. கடைசியாக இவ்விரு அணிகளும் 2012 ஏப்ரலில் மோதின. அதில் உஸ்பெகிஸ்தான் 3-2 என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது. விளையாடாத கேப்டனான (நான் பிளேயிங் கேப்டன்) மகேஷ் பூபதியின் தலைமையில் இந்திய அணி பங்கேற்கவுள்ள முதல் தொடர் இது. இதில் வெற்றி பெறும் அணி, செப்டம்பரில் நடைபெறவுள்ள உலக குரூப் பிளே ஆப் சுற்றில் விளையாட தகுதி பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com