செஸ் உலகுக்கு கிராண்ட் மாஸ்டர்களை அள்ளித் தரும் தமிழகம்!

இந்தியாவில் 46 செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் உள்ளார்கள். அவர்களில் 17 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்...
செஸ் உலகுக்கு கிராண்ட் மாஸ்டர்களை அள்ளித் தரும் தமிழகம்!

விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன பிறகு இந்தியாவில் ஒரு மாபெரும் செஸ் அலை உருவானது அனைவரும் அறிந்தது. ஆனால் அந்த அலை தமிழ்நாட்டில் மட்டும் ஆழிப்பேரலையாக மாறி செஸ் உலகுக்கு ஏராளமான கிராண்ட் மாஸ்டர்களை அள்ளித் தந்துள்ளது. தமிழகத்தின் சமீபத்திய கொடை, ஸ்ரீநாத் நாராயணன். 

தற்போது, தமிழக செஸ் வீரர் ஸ்ரீநாத் நாராயணன் இந்தியாவின் 46-வது கிராண்ட்மாஸ்டர் ஆவது உறுதியாகியுள்ளது. ஷார்ஜா மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் பங்கேற்றுள்ள ஸ்ரீநாத், அதில் ஸ்பெயினின் கிராண்ட்மாஸ்டரான டேவிட் ஆன்டனை வீழ்த்தியதன் மூலம் கிராண்ட்மாஸ்டர் ஆவதை உறுதி செய்துள்ளார். 2002-இல் இந்தியாவின் இளம் ஃபிடே ரேட்டிங் வீரராக உருவெடுத்த ஸ்ரீநாத், 2005-இல் பிரான்ஸில் நடைபெற்ற 12 வயதுக்குள்பட்டோருக்கான உலக செஸ் போட்டியில் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றார் .

ஸ்ரீநாத்துக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், 'கிராண்ட்மாஸ்டர்கள் பட்டியலுக்கு உங்களை வரவேற்கிறேன் ஸ்ரீநாத். பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் என்னை சந்தித்தது ஞாபகம் இருக்கிறது' எனக் குறிப்பிட்டுள்ளார். 14 வயதில் இன்டர்நேஷனல் மாஸ்டராக உருவெடுத்த ஸ்ரீநாத் ஏற்கெனவே 5 கிராண்ட்மாஸ்டர் 'நார்ம்ஸ்'களை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநாத்துடன் இந்தியாவில் 46 செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் உள்ளார்கள். அவர்களில் 17 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். (தமிழ்நாட்டு கிராண்ட் மாஸ்டர்களின் பட்டியல்இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர்களின் பட்டியல்

1988-ம் வருடம், இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் ஆனார் விஸ்வநாதன் ஆனந்த்.  இந்தியாவின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். 2001-ல் விஜயலட்சுமி இந்தத் தகுதியை அடைந்து தமிழகத்துக்கு மேலும் பெருமை சேர்த்தார். கடைசியாக கிராண்ட் மாஸ்டர் ஆகியிருக்கும் ஸ்ரீநாத் நாராயணனும் ஒரு தமிழர்.

தமிழ்நாட்டு செஸ் ரசிகர்கள் பெருமிதமாக உணரும் தருணம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com