ஆரம்பக் கட்ட ஓவர்களில் அதிக ரன்களை வழங்கியதே தோல்விக்கு காரணம்

ஆரம்பக் கட்ட ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்கியதாலேயே டெல்லி அணியிடம் தோற்க நேர்ந்தது என ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் தெரிவித்தார்.
ஆரம்பக் கட்ட ஓவர்களில் அதிக ரன்களை வழங்கியதே தோல்விக்கு காரணம்

ஆரம்பக் கட்ட ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்கியதாலேயே டெல்லி அணியிடம் தோற்க நேர்ந்தது என ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் தெரிவித்தார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 40-ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸிடம் தோல்வி கண்டது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத். அந்த அணி தரப்பில் 41 பந்துகளில் 70 ரன்கள் குவித்த யுவராஜ் சிங், தோல்வி குறித்து கூறியதாவது:
முதல் 6 ஓவர்களில் நாங்கள் அதிக ரன்களை வாரி வழங்கிவிட்டதாக நினைக்கிறேன். இதேபோல் கருண் நாயரின் கேட்ச்சை கோட்டைவிட்டது பின்னடைவாக அமைந்துவிட்டது. ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தால் டெல்லி அணிக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசவில்லை. அதனால் எங்களால் டெல்லியின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. அதேநேரத்தில் டெல்லி பேட்ஸ்மேன்கள் தலா 30, 40 ரன்கள் சேர்த்து அந்த அணிக்கு வெற்றி தேடித்தந்துவிட்டனர்.
இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் ஆசிஷ் நெஹ்ரா இல்லாததால், புவனேஸ்வர் குமார், ரஷித் கான் ஆகியோரை மட்டுமே நம்பியிருந்தோம். நெஹ்ரா இருந்திருந்தால் எங்கள் அணியின் பந்துவீச்சு வலுவானதாக இருந்திருக்கும். எங்கள் பந்துவீச்சாளர்களில் முகமது சிராஜ் இளம் வீரர். அதேநேரத்தில் சித்தார் கெளலுக்கு இந்த ஆட்டம் மிகப்பெரிய அனுபவமாக அமைந்திருக்கும். அவர்கள் இருவருமே சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள்.
இந்த ஆட்டத்தில் நான் குவித்த 70 ரன்கள் எனக்கு மிக முக்கியமானதாகும். இதற்கு முந்தைய ஆட்டங்களில் பெரிய அளவில் பேட் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் இங்கு பேட் செய்வது கடினமாக இருந்தது. அதனால் ஆட்டமிழக்காமல் இருந்துவிட்டால், 16-ஆவது ஓவர் முதல் அதிரடியாக ஆடி ரன் சேர்த்துவிடலாம் என நினைத்தேன். டெல்லி அணி எனது கேட்ச்சை கோட்டைவிட்டது என்னுடைய அதிர்ஷ்டமாகும். ஆரம்பத்தில் நிதானம் காட்டினாலும், அதற்குப் பதிலடியாக கடைசிக் கட்ட ஓவர்களில் அதிரடியாக ரன் குவித்துவிட்டேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com