இதற்கு மேல் என்ன சொல்வது?: விராட் கோலி வேதனை!

12 ஐபிஎல் ஆட்டங்களில் 9 தோல்விகள்!
இதற்கு மேல் என்ன சொல்வது?: விராட் கோலி வேதனை!

கோலி, கெய்ல், டிவில்லியர்ஸ் என ஜாம்பவான்கள் உள்ள ஓர் அணிக்கு இதைவிட வேதனை ஒன்று இருக்கமுடியுமா? 12 ஐபிஎல் ஆட்டங்களில் 9 தோல்விகள்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-ஆவது லீக் ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸைத் தோற்கடித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது பஞ்சாப்.

பின்னர் ஆடிய பெங்களூர் அணியில் கிறிஸ் கெயில் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே சந்தீப் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மன்தீப் சிங்குடன் இணைந்தார் கேப்டன் கோலி. இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அந்த அணி 23 ரன்களை எட்டியபோது கோலி 6 ரன்கள் சேர்த்த நிலையில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் போல்டு ஆனார். இதன்பிறகு வந்த டிவில்லியர்ஸையும் (10 ரன்கள்) சந்தீப் சர்மா வீழ்த்தினார். அப்போதே பெங்களூரின் தோல்வி உறுதியானது. இறுதியில் 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பெங்களூர். பஞ்சாப் தரப்பில் சந்தீப் சர்மா 4 ஓவர்களில் 22 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 5-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள பஞ்சாப் அணி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. அதேநேரத்தில் ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட பெங்களூர் அணி, இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 9-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.

இந்தத் தோல்வி குறித்து கோலி கூறியதாவது: மீண்டுமொருமுறை மிக மோசமாக பேட்டிங் செய்துள்ளோம். ஒரு ஐபிஎல் சீசனில் இந்தளவுக்குத் மோசமான பேட்டிங்கைத் தொடர்ச்சியாகக் கண்டதில்லை. இதுபோன்ற சமயங்களில் என்ன செய்யவேண்டும் என்பதே உங்களுக்குத் தெரியாமல் இருக்கும். வேதனையாக உள்ளது. இதற்கு மேல் என்ன சொல்வது? பேட்டிங்கில் என்ன முயற்சி செய்தாலும் அது எடுபடுவதில்லை. நேர்மறை எண்ணத்துடன் விளையாட வேண்டும் என்றுதான் அணியினர் நினைக்கிறார்கள். ஆனால் அடிக்கடி விக்கெட்டுகள் வீழ்கின்றன. இதனால்தான் இப்படி நடக்கிறது என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. கடந்த வருடம் போலவே இந்த வருடமும் பயிற்சி மேற்கொண்டோம். ஆனால் இந்த சீசன் எங்கள் விருப்பத்துக்கு எதிராக அமைந்துவிட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com