சாம்பியன்ஸ் டிராபிக்கு ஷிகர் தவனைத் தேர்வு செய்யவைத்த இரு காரணங்கள்!

ஆனால் எங்கு அடிக்கவேண்டுமோ அங்குச் சரியாக அடித்துவிட்டார்... 
சாம்பியன்ஸ் டிராபிக்கு ஷிகர் தவனைத் தேர்வு செய்யவைத்த இரு காரணங்கள்!

31 வயது ஷிகர் தவன் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இது எதிர்பார்த்த செய்திதான்.

ஆனால் இந்தத் தேர்வு விமரிசனங்களையும் வரவழைத்துள்ளது. ரெய்னா, கம்பீர், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு அணியில் இடமில்லை; ஷிகர் தவன் மீது மட்டும் ஏன் கரிசனம் என்று அணி அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்து விமரிசனங்கள் எழ ஆரம்பித்துவிட்டன. 

தவனைத் தவிர வேறு நல்ல வீரர்கள் இந்தியாவில் இல்லையா? தவனைத் தேர்வு செய்யாவிட்டால் அது பாதகமாகிவிடுமா? எதனை முன்வைத்து தேர்வுக்குழு அவரைத் தேர்வு செய்தது?

பார்க்கலாம்.

கடந்த 8 ஒருநாள் ஆட்டங்களில் 1 சதம் இரு அரை சதங்கள் எடுத்துள்ளார் தவன். அதில் ஒன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சதம்.  ஆனால் கடைசியாக விளையாடிய இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 1, 11 என மோசமாகவே விளையாடியிருந்தார். இதனால் கடைசி ஒருநாள் போட்டியில் அவரை நீக்கியது இந்திய அணி. பிறகு உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தினார். ஆனால் டி20 போட்டியான சையத் முஸ்டாக் அலி போட்டியில் 4 ஆட்டங்களில் 110 ரன்கள்; ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே போட்டியில் 5 ஆட்டங்களில் 99 ரன்கள் என நாளுக்கு நாள் அவருடைய ரன்கள் குறைந்துகொண்டே போயின.

ஆனால் எங்கு அடிக்கவேண்டுமோ அங்குச் சரியாக அடித்துவிட்டார். அவருக்குப் பெரிய அளவில் கைகொடுத்தன, தியோதர் டிராபி போட்டியும் ஐபிஎல்-லும்.

50 ஓவர் தியோதர் போட்டியில் 223 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் பிடித்தார் (முதலிடத்தில் - தினேஷ் கார்த்திக்). இந்தியா ஏ அணிக்கு எதிராக சதமும் தமிழ்நாடு அணிக்கு எதிராக அரை சதமும் எடுத்து மீண்டும் ஃபார்முக்குத் திரும்பினார். உண்மையில் இந்தப் போட்டியில் நிறைய ரன்கள் எடுத்து திறமையை நிரூபித்ததுதான் அவருக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. தவனைத் தேர்வு செய்யலாம் போல என்கிற நம்பிக்கையை தேர்வுக்குழுவுக்கு ஏற்படுத்தியது. 

இதையெல்லாம் விட இன்னொரு முக்கிய காரணம் - கேஎல் ராகுலுக்கு ஏற்பட்ட காயம். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இந்திய தொடக்க வீரர் ராகுலுக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதற்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவிருப்பதால் அவர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார். 24 வயதான ராகுலுக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டபோதும், ஆஸ்திரேலியத் தொடரில் வலியோடே விளையாடி முடித்தார். அந்தத் தொடரில் ராகுல் 393 ரன்கள் குவித்தார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 57-ஆவது இடத்தில் இருந்தார். அந்தத் தொடரில் முறையே 64, 10, 90, 51, 67, 60, 51* ரன்களைக் குவித்ததன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் 11-ஆவது இடத்துக்கு முன்னேறினார். ஆனால் காயம் காரணமாக ஐபிஎல்-போட்டியிலிருந்து முதலில் விலகினார். பிறகு, சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிருந்தும் விலகுவதாகச் சமீபத்தில் அறிவித்தார் ராகுல்.

இதனால் தொடக்க வீரருக்கான இடம் ஒன்று காலியானது. இதில் ஷிகர் தவனைத் தேர்வு செய்வதுதான் பாதுகாப்பான ஒன்றாக இருந்தது. மேலும் ஐபிஎல்-லிலும் தவன் நன்றாகவே விளையாடிவருகிறார். அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார். 11 ஆட்டங்களில் 388 ரன்கள். சாம்பியன்ஸ் டிராபிக்கு தவனை டிக் செய்ய இந்த இரு காரணங்கள் போதுமானதாக இருந்தன.

தற்போது இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவண், ரஹானே என மூன்று தொடக்க வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஃபீல்டிங் உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து ரஹானே அணிக்கு முக்கியம் என்று இந்திய அணி கருதுகிறபட்சத்தில் தவண் தேர்வு செய்யப்படாமல் போகவும் வாய்ப்புண்டு.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி இவ்வாறு அமையலாம்.

ரோஹித் சர்மா, ரஹானே/தவண், கோலி, யுவ்ராஜ் சிங், கெதர் ஜாதவ், தோனி, ஜடேஜா, அஸ்வின், ஷமி, பூம்ரா, புவனேஸ்வர் குமார்/பாண்டியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com