ஸ்மித் அதிரடி; பஞ்சாபை வீழ்த்தியது குஜராத்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது குஜராத்.
ஸ்மித் அதிரடி; பஞ்சாபை வீழ்த்தியது குஜராத்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது குஜராத்.
அந்த அணியின் தொடக்க வீரர் டுவைன் ஸ்மித் 39 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் குவித்தார். அதேநேரத்தில் பஞ்சாப் வீரர் ஆம்லா 60 பந்துகளில் 5 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் குவித்தபோதும், அந்த அணி தோற்றது ஏமாற்றமாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் தோற்றதால் பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் சுற்று கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.
மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த பஞ்சாப் அணியில் மார்ட்டின் கப்டில் 2 ரன்களில் நடையைக் கட்ட, ஆம்லாவுடன் இணைந்தார் ஷான் மார்ஷ்.
இந்த ஜோடி அதிரடியாக ஆட, 10 ஓவர்களில் 81 ரன்களை எட்டியது பஞ்சாப். இதன்பிறகு ஆம்லா 35 பந்துகளிலும், ஷான் மார்ஷ் 37 பந்துகளிலும் அரை சதம் கண்டனர். பஞ்சாப் அணி 15.4 ஓவர்களில் 127 ரன்களை எட்டியபோது ஷான் மார்ஷ் ஆட்டமிழந்தார். அவர் 43 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து கேப்டன் மேக்ஸ்வெல் களமிறங்க, மறுமுனையில் ஆம்லா வெளுத்து வாங்கினார். பாசில் தம்பி பந்துவீச்சில் ஆம்லா ஒரு சிக்ஸரையும், இரு பவுண்டரிகளையும் பறக்கவிட, 17 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது பஞ்சாப்.
இதன்பிறகு சங்வான் வீசிய 19-ஆவது ஓவரில் மேக்ஸ்வெல் இரு சிக்ஸர்களை விளாசினார். பாசில் தம்பி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியை விளாசிய ஆம்லா, 4-ஆவது பந்தில் சிக்ஸரை விளாசி 59 பந்துகளில் சதம் கண்டார். இந்த சீசனில் அவர் அடித்த 2-ஆவது சதம் இது. எனினும் அடுத்த பந்தில் ஆம்லா ஆட்டமிழந்தார். அவர் 60 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. மேக்ஸ்வெல் 11 பந்துகளில் 20, அக்ஷர் படேல் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
குஜராத் தரப்பில் சங்வான், குல்கர்னி, பாசில் தம்பி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
குஜராத் வெற்றி: பின்னர் ஆடிய குஜராத் அணியில் டுவைன் ஸ்மித்-இஷன் கிஷான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.2 ஓவர்களில் 91 ரன்கள் குவித்தது. ஆரம்பம் முதலே வெளுத்து வாங்கிய ஸ்மித் 28 பந்துகளில் அரை சதமடிக்க, இஷன் கிஷான் 24 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் சுரேஷ் ரெய்னா களமிறங்க, டுவைன் ஸ்மித் 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ரெய்னாவுடன் இணைந்தார் தினேஷ் கார்த்திக். இந்த ஜோடியும் அதிரடி காட்ட, குஜராத்தின் வெற்றி எளிதானது. ரெய்னா 25 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த ஆரோன் ஃபிஞ்ச் 2 ரன்களில் நடையைக் கட்டினார். இறுதியில் 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்து வெற்றி கண்டது குஜராத். தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 35, ஜடேஜா 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினார். ஸ்மித் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com