பஞ்சாப் இன்று தோற்றுவிட்டால் பிளேஆஃப்-புக்கு இனி போட்டியில்லை!

அடுத்த ஐந்து நாள்களுக்கு ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் உயிர்ப்புடன் இருக்க பஞ்சாப் இன்று வெற்றிபெற்றே ஆகவேண்டும்...
பஞ்சாப் இன்று தோற்றுவிட்டால் பிளேஆஃப்-புக்கு இனி போட்டியில்லை!

இன்று நடக்கப்போகிற ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் ஜெயிக்கவேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் வேண்டிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பஞ்சாப்பின் வெற்றி அந்தளவுக்கு முக்கியமாகிறது. 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48-ஆவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.

 இதன்மூலம் 7-ஆவது வெற்றியை பெற்ற ஹைதராபாத் அணி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. ஆனால், மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது குஜராத். இது பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. இதனால் அந்த அணி மீதமுள்ள மூன்று ஆட்டங்களையும் வெல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

இந்த இக்கட்டான சூழலில் இன்று பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையே மொஹலியில் போட்டி நடைபெறவுள்ளது. சமீபத்திய ஆட்டங்கள் மற்றும் புள்ளிகள் பட்டியலின் அடிப்படையில் பார்க்கும்போது இன்றைய ஆட்டத்தின் முக்கியத்துவம் இதர ஆட்டங்களிலும் பிரதிபலிக்கவுள்ளது. 

எப்படி என்று பார்க்கலாம்.

மும்பை, கொல்கத்தா, புணே ஆகிய அணிகள் 16 அல்லது 16 புள்ளிகளுக்கு மேலாக வைத்துள்ளன. எனவே இந்த மூன்று அணிகளும் பிளேஆஃப்-புக்குச் சென்றுவிட்டது என்று உறுதியாகச் சொல்லலாம். அதிலும் மும்பை 18 புள்ளிகளுடன் அதிகாரபூர்வமாகவே தகுதிபெற்றுவிட்டது.

ஹைதராபாத் 15 புள்ளிகள் வைத்திருக்கிறது. அந்த அணி தகுதி பெற போராடிக்கொண்டிருக்கிறது. மீதமுள்ள ஒரு போட்டியையும் வென்றுவிட்டால் 17 புள்ளிகளுடன் தகுதிபெற்றுவிடும். 

குஜராத், பெங்களூர் அணிகள் பிளேஆஃப்புக்குத் தகுதிபெறமுடியாது. எனவே அவர்கள் இந்த ஆட்டத்தில் இல்லை.  

டெல்லி மீதமுள்ள 3 ஆட்டங்களையும் வென்றால் 14 புள்ளிகளுடன் ஏதாவது வாய்ப்பிருக்கிறதா என்று பார்க்கலாம். அதற்கு மற்ற அணிகள் ஒத்துழைக்கவேண்டும்.  

இந்த கணக்குகளுக்கு இடையே இன்று பஞ்சாப் -  கொல்கத்தா போட்டி நடைபெறவுள்ளது. இதில் கொல்கத்தா ஜெயித்துவிட்டால் அவ்வளவுதான். வருகிற ஞாயிறு வரை நடக்கவுள்ள போட்டிகளுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். வேண்டுமானாலும் யார் முதலிரண்டு இடங்களைப் பிடிப்பது என்பதில் வேண்டுமானால் போட்டி வரலாம். 

அதாவது, இன்று கொல்கத்தா ஜெயித்துவிட்டால் அந்த அணிக்கு 18 புள்ளிகள் கிடைக்கும். பிளேஆஃப் உறுதி.

தோற்றுப்போன பஞ்சாப் மீதமுள்ள இரு போட்டிகளையும் வென்றாலும் மொத்தமாக 14 புள்ளிகள்தான் கிடைக்கும். டெல்லிக்கும் அதே நிலைமை. ஏற்கெனவே 15 புள்ளிகளுடன் ஹைதராபாத் 4-ம் இடத்தில் உள்ளது. எனவே இன்றைய போட்டியின் அடிப்படையில் அந்த அணி பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுவிடும். 

இன்றிரவு கொல்கத்தா ஜெயித்துவிட்டால், பிறகு 18 புள்ளிகள் வைத்துள்ள மும்பை, கொல்கத்தா அணிகளும், 16 புள்ளிகள் வைத்துள்ள புணே மற்றும் 15 புள்ளிகள் வைத்துள்ள ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுவிடும். 

இதன்பிறகு ஞாயிறுவரை நடக்கவுள்ள லீக் போட்டிகளுக்கு எந்தவொரு அர்த்தமில்லை. பதிலாக, யார் முதலிரண்டு இடங்களைப் பிடிப்பது என்பதில்தான் கடும்போட்டி ஏற்படும். 

எனவே அடுத்த ஐந்து நாள்களுக்கு ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் உயிர்ப்புடன் இருக்க பஞ்சாப் இன்று வெற்றிபெற்றே ஆகவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com