சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி அறிவிப்பு: ரோஹித், சமி, அஸ்வின் இடம்பிடித்தனர்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி அறிவிப்பு: ரோஹித், சமி, அஸ்வின் இடம்பிடித்தனர்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி, தொடக்க வீரர் ரோஹித் சர்மா, முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
2015 உலகக் கோப்பை போட்டியின்போது கலக்கிய முகமது சமி, அதன்பிறகு காயம் காரணமாக ஒரு நாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில் இப்போது மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரோஹித் சர்மா, 5 மாத ஓய்வுக்குப் பிறகு கடந்த மார்ச்சில் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பினார். ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.
அடிவயிற்றுப் பகுதியில் சவ்வு கிழிந்ததன் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய அஸ்வின் மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கிறார். மணீஷ் பாண்டே, யுவராஜ் சிங், கேதார் ஜாதவ் ஆகியோர் தங்களின் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டனர். விராட் கோலி தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் ஒரேயொரு விக்கெட் கீப்பராக தோனி மட்டுமே இடம்பெற்றுள்ளார்.
ரோஹித் சர்மா, ஷிகர் தவன் ஆகியோருக்கான மாற்று தொடக்க வீரராக அஜிங்க்ய ரஹானே இடம்பெற்றிருப்பதால், ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ரன் சேர்த்து வரும் மூத்த வீரரான கெளதம் கம்பீருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜஸ்பிரித் பூம்ரா உள்ளிட்ட 5 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாற்று வீரர்கள்: குல்தீப் யாதவ், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஷர்துல் தாக்குர், சுரேஷ் ரெய்னா ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 5 பேரும் பெங்களூரில் உள்ள கிரிக்கெட் அகாதெமியில் பயிற்சியில் இருப்பார்கள். தேவைப்படும்பட்சத்தில் இங்கிலாந்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள்.
எம்.எஸ்.கே.பிரசாத்: அணி தேர்வு குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறுகையில், 'குல்தீப் யாதவின் பெயரை தீவிரமாக பரிசீலித்தோம். ஆனால் கூடுதல் சுழற்பந்து வீச்சாளருடன் விளையாட வேண்டுமா என்ற கேள்வியெழுந்தது. ஏற்கெனவே அணியில் இடம்பெற்றிருக்கும் யுவராஜ் சிங், கேதார் ஜாதவ் ஆகியோர் பகுதி சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவர். அதனால் குல்தீப் யாதவை 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கவில்லை. அவருக்குப் பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனாக மணீஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டியை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான அணியை, ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களின் செயல்பாட்டை அடிப்படையாக வைத்து தேர்வு செய்யவில்லை. இங்கிலாந்து சூழல், கடந்த ஓர் ஆண்டாக வீரர்களின் செயல்பாடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டே இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது' என்றார்
அஸ்வினின் காயம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த எம்.எஸ்.கே.பிரசாத், 'அவருடைய காயம் தீவிரமானதல்ல. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு போதுமான ஓய்வளிக்குமாறு புணே அணி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டோம். இப்போது அவர் முழு உடற்தகுதியோடு இருக்கிறார்' என்றார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வரும் ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

அணி விவரம்
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, யுவராஜ் சிங், தோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், மணீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பூம்ரா, உமேஷ் யாதவ், முகமது சமி, புவனேஸ்வர் குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com