ஷிகர் தவன் அதிரடி; மும்பையை வீழ்த்தியது ஹைதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48-ஆவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.
ரோஹித் சர்மாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் சித்தார்த் கெளல்.
ரோஹித் சர்மாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் சித்தார்த் கெளல்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48-ஆவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.
இதன்மூலம் 7-ஆவது வெற்றியை பெற்ற ஹைதராபாத் அணி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. அந்த அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் 46 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் குவித்தார்.
ஹைதராபாதில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணியில் லென்டில் சிம்மன்ஸ் 1 ரன்னில் நடையைக் கட்ட, பின்னர் களம்புகுந்த நிதிஷ் ராணா 9 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து பார்த்திவ் படேலுடன் இணைந்தார் கேப்டன் ரோஹித் சர்மா. இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. படேல் 17 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 23 ரன்கள் சேர்த்த நிலையில் சித்தார்த் கெளல் பந்துவீச்சில் வார்னரிடம் கேட்ச் ஆனார். இதனால் 6.1 ஓவர்களில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை.
இதையடுத்து ரோஹித் சர்மாவுடன் இணைந்தார் ஹார்திக் பாண்டியா. இந்த ஜோடி சற்று நிதானம் காட்ட, 10 ஓவர்களில் 59 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை. ஹார்திக் பாண்டியா, வழக்கத்துக்கு மாறாக நிதானமாக ஆட, மறுமுனையில் ரோஹித் சர்மா அதிரடியில் இறங்க, மும்பையின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது.
மும்பை அணி 14.2 ஓவர்களில் 96 ரன்களை எட்டியபோது பாண்டியாவின் விக்கெட்டை இழந்தது. அவர் 24 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து கிரண் போலார்ட் களமிறங்க, மறுமுனையில் அசத்தலாக ஆடிய ரோஹித் சர்மா 34 பந்துகளில் அரை சதம் கண்டார். மும்பை அணி 18.1 ஓவர்களில் 126 ரன்களை எட்டியபோது ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இழந்தது. அவர் 45 பந்துகளில் 67 ரன்கள் குவித்து, சித்தார்த் கெளல் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
இதன்பிறகு போலார்ட், கரண் சர்மா ஆகியோர் தலா 5 ரன்களில் வெளியேற, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்து மும்பை. ஹைதராபாத் தரப்பில் சித்தார்த் கெளல் 4 ஓவர்களில் 24 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 29 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தவன் 62*: பின்னர் ஆடிய ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர் 6 ரன்களில் நடையைக் கட்ட, ஷிகர் தவனுடன் இணைந்தார் மோசஸ் ஹென்ரிக்ஸ். இந்த ஜோடி வெளுத்து வாங்க, 10 ஓவர்களில் 83 ரன்களை எட்டியது ஹைதராபாத். அந்த அணி 12.1 ஓவர்களில் 98 ரன்களை எட்டியபோது ஹென்ரிக்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 35 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து யுவராஜ் சிங் களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய தவன் 36 பந்துகளில் அரை சதம் கண்டார். இதன்பிறகு யுவராஜ் சிங் 9 ரன்களில் வெளியேற, சங்கர் களம்புகுந்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ஷிகர் தவன் 46 பந்துகளில் 62, சங்கர் 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பை தரப்பில் மெக்லீனாகான், மலிங்கா, ஜஸ்பிரித் பூம்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஷிகர் தவன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com