பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது பஞ்சாப்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 49-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
ரன் அவுட் ஆன கிறிஸ் லின்.
ரன் அவுட் ஆன கிறிஸ் லின்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 49-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
இதன்மூலம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது.
கொல்கத்தா-பஞ்சாப் அணிகளுக்கு இடையே மொஹாலியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச தீர்மானித்தது.
பேட்டிங் செய்ய வந்த பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் மார்டின் கப்டில் 16 பந்துகளுக்கு ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்திருந்தபோது சுனீல் நரைன் பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.
உடன் வந்த மனன் வோரா 16 பந்துகளுக்கு 4 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்தார். அவர், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்தார்.
தொடர்ந்து வந்த ஷான் மார்ஷ் 10 பந்துகளுக்கு 2 பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் போல்டானார். கேப்டன் மேக்ஸ்வெல் சற்று அதிரடியாக ஆடி, தடுமாறி வந்த அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
மொத்தம் 25 பந்துகளுக்கு ஒரு பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 44 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் பந்துவீச்சில் தொடர்ந்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர், 3-ஆவது சிக்ஸருக்கு முயற்சித்தபோது கிறிஸ் வோக்ஸிடம் கேட்ச் ஆனார். பின்னர் வந்த ஸ்வப்னில் சிங் 2 பந்துகளுக்கு 2 ரன்களுடன் கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் போல்டானார்.
இவ்வாறாக 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது பஞ்சாப். அக்ஸர் படேல் 10 பந்துகளுக்கு 8 ரன், ராகுல் 8 பந்துகளுக்கு 3 பவுண்டரியுடன் 15 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கொல்கத்தா தரப்பில் குல்தீப் யாதவ், கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், சுனீல் நரைன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
கொல்கத்தா-153: இதையடுத்து 168 ரன்கள் இலக்குடன் களம் கண்ட கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் சுனீல் நரைன் 10 பந்துகளுக்கு 4 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து, மோகித் சர்மா பந்துவீச்சில் போல்டானார்.
உடன் வந்த கிறிஸ் லின் அதிரடியாக ஆடி, 52 பந்துகளுக்கு 8 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் விளாசிய நிலையில் ரன் அவுட் செய்யப்பட்டார். மணீஷ் பாண்டே 18 ரன்கள் எடுக்க, கேப்டன் கம்பீர் 8, யூசுஃப் பதான் 2 ரன்களில் வீழ்ந்தனர்.
ராபின் உத்தப்பா டக் அவுட் ஆனார். இவ்வாறாக 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து தோற்றது கொல்கத்தா. காலின் டி 11, கிறிஸ் வோக்ஸ் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பஞ்சாப் தரப்பில் ராகுல் தெவாடியா, மோகித் சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். மட் ஹென்றி ஒரு விக்கெட் வீழ்த்தினார். மோகித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இன்றைய ஆட்டம்
குஜராத்-டெல்லி
இடம்: கான்பூர்
நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com