வாழ்வா, சாவா ஆட்டத்தில் மும்பையை இன்று சந்திக்கிறது பஞ்சாப்

மும்பையில் வியாழக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸும், கிங்ஸ் லெவன் பஞ்சாபும் மோதுகின்றன.
வாழ்வா, சாவா ஆட்டத்தில் மும்பையை இன்று சந்திக்கிறது பஞ்சாப்

மும்பையில் வியாழக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸும், கிங்ஸ் லெவன் பஞ்சாபும் மோதுகின்றன.
இந்த ஆட்டம் பஞ்சாப் அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமாகும். இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 5-ஆவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி, இந்த ஆட்டத்தில் வென்றாலொழிய அடுத்த சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைக்க முடியாது. எனவே இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு அந்த அணி கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை.
அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் முன்னணி தொடக்க வீரரான ஹஷிம் ஆம்லா, அவருடைய தாய் நாட்டு அணிக்காக விளையாட சென்றுவிட்டார். இது அந்த அணிக்கு பின்னடைவாகும். எனினும் மனன் வோரா, மார்ட்டின் கப்டில், ஷான் மார்ஷ், கேப்டன் மேக்ஸ்வெல், ரித்திமான் சாஹா போன்ற பேட்ஸ்மேன்கள் அந்த அணிக்கு பலம் சேர்க்கின்றனர். வேகப்பந்து வீச்சில் சந்தீப் சர்மா, மோஹித் சர்மா, மட் ஹென்றி கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் அக்ஷர் படேலையும் நம்பியுள்ளது பஞ்சாப்.
மும்பை அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டாலும், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்போடு பஞ்சாபை எதிர்கொள்கிறது. மேலும் இந்த சீசனில் மும்பை அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் கடைசி லீக் ஆட்டம் இது. எனவே மும்பை அணி, பஞ்சாபை வீழ்த்த கடுமையாகப் போராடும். அந்த அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே வலுவாக உள்ளது.
பேட்டிங்கைப் பொறுத்தவரையில் பார்த்திவ் படேல், சிம்மன்ஸ், நிதிஷ் ராணா, கேப்டன் ரோஹித் சர்மா, கிரண் போலார்ட், ஹார்திக் பாண்டியா என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் மெக்லீனாகான்-ஜஸ்பிரித் பூம்ரா கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன் சிங்கும் மும்பை அணிக்கு சேர்க்கிறார்கள்.
சொந்த மண்ணில் இந்த சீசனில் ஓர் ஆட்டத்தில் மட்டுமே தோற்றுள்ள மும்பை அணி, பஞ்சாபின் பிளே ஆஃப் முயற்சியை முறியடிக்குமா? அல்லது பஞ்சாப் அணி, மும்பையின் நம்பர்-1 (புள்ளிகள் பட்டியலில்) கனவை கலைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதுவரை...: மும்பையும், பஞ்சாபும் இதுவரை 19 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை 10 வெற்றிகளையும், பஞ்சாப் 9 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

போட்டி நேரம்: இரவு 8, நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com