ஷ்ரேயஸ் ஐயர் 96; டெல்லிக்கு 5-ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50-ஆவது லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸைத் தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ்.
ஷ்ரேயஸ் ஐயர் 96; டெல்லிக்கு 5-ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50-ஆவது லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸைத் தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ்.
அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர் 57 பந்துகளில் 2 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் குவித்தார்.
இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணி 5-ஆவது வெற்றியைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 3-ஆவது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் குஜராத் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 9-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜாகீர்கான் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து பேட் செய்த குஜராத் அணியில் டுவைன் ஸ்மித் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாக, இஷன் கிஷானுடன் இணைந்தார் கேப்டன் சுரேஷ் ரெய்னா. இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ரெய்னா 6 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
இதன்பிறகு தினேஷ் கார்த்திக் களமிறங்க, அமித் மிஸ்ரா பந்துவீச்சில் பவுண்டரியை விளாசிய கையோடு, ஜாகீர்கானிடம் கேட்ச் ஆனார் இஷன் கிஷான். அவர் 25 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து தினேஷ் கார்த்திக்குடன் இணைந்தார் ஆரோன் ஃபிஞ்ச். அவர், வந்த வேகத்தில் மிஸ்ரா பந்துவீச்சில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்களை பறக்கவிட, 10 ஓவர்களில் 91 ரன்களை எட்டியது குஜராத். அந்த அணி 16.1 ஓவர்களில் 148 ரன்களை எட்டியபோது தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். கார்த்திக்-ஃபிஞ்ச் ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்க, பிரத்வெயிட் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி 32 பந்துகளில் அரை சதம் கண்டார் ஆரோன் ஃபிஞ்ச். தொடர்ந்து வேகம் காட்டிய அவர் 39 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் குவித்து சமி பந்துவீச்சில் போல்டு ஆனார். இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது குஜராத்.
ஜடேஜா 7 பந்துகளில் 13, ஜேம்ஸ் ஃபாக்னர் 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி தரப்பில் முகமது சமி, பட் கம்மின்ஸ், அமித் மிஸ்ரா, கார்லோஸ் பிரத்வெயிட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி: பின்னர் ஆடிய டெல்லி அணியில் சாம்சன் 10 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த ரிஷப் பந்த் பவுண்டரி அடித்த கையோடு, எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டானார்.
இதையடுத்து கருண் நாயருடன் இணைந்தார் ஷ்ரேயஸ் ஐயர். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. பாசில் தம்பி வீசிய 5-ஆவது ஓவரில் ஷ்ரேயஸ் ஐயர் இரு பவுண்டரிகளை விரட்ட, அதே ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசிய கருண் நாயர், ஸ்மித் வீசிய அடுத்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். இதனால் 7 ஓவர்களில் 71 ரன்களை எட்டியது டெல்லி.
ஃபாக்னர் வீசிய அடுத்த ஓவரில் கருண் நாயர் ஆட்டமிழந்தார். அவர் 15 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு வந்த சாமுவேல்ஸ் 1 ரன்னில் ரன் அவுட்டாக, 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி.
இதையடுத்து ஆண்டர்சன் களமிறங்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஷ்ரேயஸ் ஐயர், ஜடேஜா பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி 33 பந்துகளில் அரை சதம் கண்டார். இதன்பிறகு ஆண்டர்சன் 6, பிரத்வெயிட் 11 ரன்களில் வெளியேற, பேட் கம்மின்ஸ் களம்புகுந்தார்.
அப்போது டெல்லியின் வெற்றிக்கு 6 ஓவர்களில் 75 ரன்கள் தேவைப்பட்டன. சங்வான் வீசிய 15-ஆவது ஓவரில் ஷ்ரேயஸ் ஐயரும், கம்மின்ஸும் தலா இரு பவுண்டரிகளை விரட்டினர். குல்கர்னி வீசிய அடுத்த ஓவரில் ஷ்ரேயஸ் ஐயர் ஹாட்ரிக் பவுண்டரிகளை விரட்ட, கடைசி 4 ஓவர்களில் 44 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
ஃபாக்னர் வீசிய 17-ஆவது ஓவரில் கம்மின்ஸ் சிக்ஸரை விளாச, அதே ஓவரில் ஷ்ரேயஸ் ஐயர் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்டினார். இதனால் அந்த ஓவரில் 21 ரன்கள் கிடைக்க, டெல்லியின் வெற்றி எளிதானது. 19-ஆவது ஓவரில் கம்மின்ஸ் 24 ரன்களில் (13 பந்துகள்) ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
பாசில் தம்பி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த ஷ்ரேயஸ் ஐயர், அடுத்த பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். 57 பந்துகளில் 96 ரன்கள் குவித்த ஐயர், சதத்தை நழுவவிட்ட ஏமாற்றத்தோடு வெளியேறினார். இதையடுத்து வந்த அமித் மிஸ்ரா, தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை விரட்ட, 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்து வெற்றி கண்டது டெல்லி.
குஜராத் தரப்பில் ஜேம்ஸ் ஃபாக்னர் 2 விக்கெட் வீழ்த்தினார். ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com