பஞ்சாப் "த்ரில்' வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-ஆவது லீக் ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ûஸ தோற்கடித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
பஞ்சாப் "த்ரில்' வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-ஆவது லீக் ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ûஸ தோற்கடித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
இதன்மூலம் பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது பஞ்சாப். ஹைதராபாத் அணி தனது கடைசி ஆட்டத்தில் குஜராத்திடம் தோற்று, பஞ்சாப் தனது கடைசி ஆட்டத்தில் புணேவை வீழ்த்தும்பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம்.
அதிரடி தொடக்கம்: மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த பஞ்சாபின் இன்னிங்ûஸ மார்ட்டின் கப்டிலும், ரித்திமான் சாஹாவும் தொடங்கினர்.
ஹார்திக் பாண்டியா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் கப்டில் இரு பவுண்டரிகளை விரட்டினார். அதே ஓவரில் பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்கிய சாஹா, மெக்லீனாகான் வீசிய அடுத்த ஓவரில் 3 பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதனால் 2 ஓவர்களில் 29 ரன்களை எட்டியது பஞ்சாப்.
ஆனால் 3-ஆவது ஓவரை வீசிய பூம்ரா 3 ரன்கள் மட்டுமே கொடுக்க, மலிங்கா வீசிய அடுத்த ஓவரில் கப்டில் ஒரு சிக்ஸரையும், சாஹா இரு பவுண்டரிகளையும் விரட்ட, 4 ஓவர்களில் 51 ரன்களை எட்டியது பஞ்சாப். அந்த அணி 5.3 ஓவர்களில் 68 ரன்களை எட்டியபோது கப்டில் ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தார்.
மேக்ஸ்வெல் சரவெடி: இதையடுத்து களம்புகுந்த கேப்டன் மேக்ஸ்வெல், மும்பை பெளலர்களை பதம்பார்த்தார். கரண் சர்மா வீசிய 8-ஆவது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசிய மேக்ஸ்வெல், ஹர்பஜன் சிங் வீசிய அடுத்த ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார். தொடர்ந்து வேகம் காட்டிய மேக்ஸ்வெல், பூம்ரா பந்துவீச்சில் பவுண்டரியை விரட்டிய கையோடு, ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 21 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் குவித்தார்.
சாஹா அரை சதம்: இதையடுத்து ஷான் மார்ஷ் களமிறங்க, ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி, 31 பந்துகளில் அரை சதம் கண்டார் சாஹா. இந்த ஜோடி தொடர்ந்து அதிரடியாக ஆட, 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எட்டியது பஞ்சாப். மெக்லீனாகான் வீசிய 16-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசிய மார்ஷ், அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் எடுத்தார். இதையடுத்து சாஹாவுடன் இணைந்தார் அக்ஷர் படேல், இந்த ஜோடியும் அதிரடியாக ஆட, 18-ஆவது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது பஞ்சாப். பாண்டியா வீசிய கடைசி ஓவரில் அக்ஷர் படேலும், சாஹாவும் தலா ஒரு சிக்ஸரை விளாச, பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஓர் அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். சாஹா 55 பந்துகளில் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 93, அக்ஷர் படேல் 13 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பைத் தரப்பில் ஜஸ்பிரித் பூம்ரா மட்டுமே சிறப்பாக பந்துவீசினார். அவர் 4 ஓவர்களில் 24 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அதேநேரத்தில் மெக்லீனாகான் 4 ஓவர்களில் 54 ரன்களையும், மலிங்கா 4 ஓவர்களில் 45 ரன்களையும், ஹர்பஜன் சிங் 3 ஓவர்களில் 45 ரன்களையும் வாரி வழங்கினர்.
சிம்மன்ஸ் அதிரடி: பின்னர் ஆடிய மும்பை அணியில் சிம்மன்ஸ் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாச, பார்த்திவ் படேலும் அதிரடியாக ரன் சேர்த்தார். அக்ஷர் படேல் வீசிய 7-ஆவது ஓவரில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்களை பறக்கவிட்ட சிம்மன்ஸ், 27 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதனால் 7 ஓவர்களில் 82 ரன்களை எட்டியது மும்பை.
மோஹித் சர்மா வீசிய 9-ஆவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விரட்டிய படேல், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.4 ஓவர்களில் 99 ரன்கள் குவித்தது.
இதையடுத்து நிதிஷ் ராணா களமிறங்க, மேக்ஸ்வெல் பந்துவீச்சில் சிக்ஸரை விளாச முயன்றார் சிம்மன்ஸ். அது சிக்ஸர் என அனைவரும் எதிர்பார்க்க, பவுண்டரி எல்லையில் நின்ற கப்டில் பாய்ந்து சென்று கேட்ச் பிடித்தார். சிம்மன்ஸ் 32 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
போலார்ட் விளாசல்: இதன்பிறகு ரோஹித் சர்மா 5, நிதிஷ் ராணா 12 ரன்களில் வெளியேற, கிரண் போலார்டுடன் இணைந்தார் ஹார்திக் பாண்டியா. அப்போது மும்பை வெற்றி பெற 7 ஓவர்களில் 108 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. பாண்டியாவும், போலார்டும் சிக்ஸரை பறக்கவிட, 5 ஓவர்களில் 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
மட் ஹென்றி வீசிய 16-ஆவது ஓவரில் போலார்ட், பாண்டியா இருவரும் தலா 2 சிக்ஸர்களை பறக்கவிட, அந்த ஓவரில் 27 ரன்கள் கிடைத்தன. இதன்பிறகு சந்தீப் சர்மா வீசிய அடுத்த ஓவரில் பாண்டியா ஆட்டமிழந்தார். அவர் 13 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் எடுத்தார்.
அதே ஓவரில் போலார்ட் ஒரு பவுண்டரியையும், ஒரு சிக்ஸரையும் விரட்ட, 3 ஓவர்களில் 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. மோஹித் சர்மா வீசிய 18-ஆவது ஓவரில் கரண் சர்மா தொடர்ச்சியாக ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை விளாசிய கையோடு ஆட்டமிழந்தார். அவர் 6 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து ஹர்பஜன் சிங் களமிறங்க, கடைசி 2 ஓவர்களில் மும்பையின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டன. இதனால் மும்பை வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சந்தீப் சர்மா வீசிய 19-ஆவது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை. இதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட, அந்த ஓவரின் 2-ஆவது பந்தில் சிக்ஸரை விரட்டிய போலார்ட், அடுத்த 3 பந்துகளை வீணடிக்க, மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. ஐபிஎல் வரலாற்றில் 2-ஆவது பேட்டிங்கின்போது அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை ராஜஸ்தானுடன் பகிர்ந்து கொண்டது மும்பை. போலார்ட் 24 பந்துகளில் 5 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 50, ஹர்பஜன் சிங் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் மோஹித் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினார்.

இன்றைய ஆட்டம்

டெல்லி-புணே
இடம்: டெல்லி, நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு:
சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

புள்ளிகள் பட்டியல்

அணிகள் போட்டி வெற்றி தோல்வி முடிவு இல்லை புள்ளி
மும்பை 13 9 4 } 18
கொல்கத்தா 13 8 5 } 16
புணே 12 8 4 } 16
ஹைதராபாத் 13 7 5 1 15
பஞ்சாப் 13 7 6 } 14
டெல்லி 12 5 7 } 10
குஜராத் 13 4 9 } 8
பெங்களூர் 13 2 10 1 5

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com