இறுதிச் சுற்றில் மும்பை: ஜஸ்பிரித் பூம்ரா, கரண் சர்மா அபாரம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது தகுதிச் சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி 4-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இண்டியன்ஸ்.
நாகர்கோவிலில் பிரமாண்ட திரையில் ஐபிஎல் இறுதி ஆட்டம்
நாகர்கோவிலில் பிரமாண்ட திரையில் ஐபிஎல் இறுதி ஆட்டம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது தகுதிச் சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி 4-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இண்டியன்ஸ்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் மும்பையும், புணேவும் மோதுகின்றன.
மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா 3 ஓவர்களில் ஒரு மெய்டனை வீசியதோடு, 7 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும், கரண் சர்மா 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணியில் கிறிஸ் லின் 4 ரன்களில் நடையைக் கட்ட, சரிவு ஆரம்பமானது.
இதன்பிறகு கேப்டன் கெளதம் கம்பீர் களமிறங்க, சுநீல் நரேன் 10 பந்துகளில் 10 ரன்கள் சேர்த்த நிலையில் கரண் சர்மா பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆனார். இதையடுத்து களம்புகுந்த உத்தப்பாவை 1 ரன்னில் வெளியேற்றினார் பூம்ரா
இதன்பிறகு இஷாங்க் ஜக்கி களமிறங்க, மறுமுனையில் நிதானம் காட்டிய கெளதம் கம்பீர், கரண் சர்மா பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு, ஹார்திக் பாண்டியாவிடம் கேட்ச் ஆனார். அவர் 15 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து வந்த டி கிராண்ட்ஹோம் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அப்போது 7 ஓவர்களில் 31 ரன்ளுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா. இதையடுத்து ஜக்கியுடன் இணைந்தார் சூர்யகுமார் யாதவ். இந்த ஜோடி மெதுவாக ரன் சேர்க்க, கொல்கத்தா அணி மிக மோசமான நிலையில் இருந்து மீண்டது. அந்த அணி 14.5 ஓவர்களில் 87 ரன்களை எட்டியபோது ஜக்கியின் விக்கெட்டை இழந்தது. அவர் 31 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது.
இதன்பிறகு வந்த பியூஷ் சாவ்லா 2 ரன்களிலும், நாதன் கோல்ட்டர் நைல் 6 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சற்று வேகமாக ரன் சேர்த்த சூர்யகுமார் யாதவ், பூம்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார். கடைசி விக்கெட்டாக அங்கித் ராஜ்புட் 4 ரன்களில் நடையைக் கட்ட, 18.5 ஓவர்கலில் 107 ரன்களுக்கு சுருண்டது கொல்கத்தா.
மும்பை தரப்பில் கரண் சர்மா 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பூம்ரா 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஜான்சன் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
மும்பை வெற்றி: பின்னர் ஆடிய மும்பை அணியில் சிம்மன்ஸ் 3, அம்பட்டி ராயுடு 6, பார்த்திவ் படேல் 14 ரன்களில் வெளியேற, 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆனால் 4-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ரோஹித் சர்மா-கிருனால் பாண்டியா ஜோடி 54 ரன்கள் சேர்க்க, மும்பையின் வெற்றி எளிதானது. ரோஹித் சர்மா 24 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து கிரண் போலார்ட் களமிறங்க, உமேஷ் யாதவ் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி, ஆட்டத்தை முடித்தார் கிருனால் பாண்டியா. இதனால் மும்பை அணி 14.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது மும்பை. கிருனால் பாண்டியா 30 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 45, கிரண் போலார்ட் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா தரப்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட் வீழ்த்தினார்.
கரண் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.


நாகர்கோவிலில் பிரமாண்ட திரையில் ஐபிஎல் இறுதி ஆட்டம்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தை நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பிரமாண்ட திரையில் ஒளிபரப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், செயலர் சரவண சுப்பிரமணியன் ஆகியோர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தையொட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பி.சி.சி.ஐ. சார்பில் 'ஐபிஎல் ஃபேன் பார்க்' நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு நாகர்கோவிலில் நடைபெறுகிறது. அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பத்தாவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் 32 அடி அகலம், 18 அடி உயரம் கொண்ட எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பப்படுகிறது. நாட்டின் தெற்கே நாகர்கோவில், வடக்கே வாராணசி, கிழக்கே ராஞ்சி, மேற்கே நாசிக் என 4 இடங்களில் இந்த நிகழ்ச்சிக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. குமரி மாவட்டத்தில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பிரமாண்ட திரை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 8 ஆயிரம் பேர் ஆட்டத்தைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இலவசம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com