வாழ்க்கை வரலாறு படம்: மோடியை சந்தித்தார் சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் வெளியாகவிருப்பதை முன்னிட்டு அவர், பிரதமர் நரேந்திர மோடியை
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய சச்சின் டெண்டுல்கர். உடன் அவருடைய மனைவி அஞ்சலி.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய சச்சின் டெண்டுல்கர். உடன் அவருடைய மனைவி அஞ்சலி.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் வெளியாகவிருப்பதை முன்னிட்டு அவர், பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
'சச்சின்: ஏ பில்லியன் டிரீம்ஸ்' என்ற பெயரில் சச்சினின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கியுள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த இயக்குநர் ஜேம்ஸ் எர்ஸ்கின். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் சச்சின் கதாபாத்திரத்தில் சச்சினே நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்த நிலையில் மோடியை சந்தித்த சச்சின் அது தொடர்பாக கூறியதாவது: தில்லியில் இருப்பதால் எனது வாழ்க்கை வரலாற்று படம் குறித்து மோடியிடம் விளக்கினால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவரிடம் எனது படம் பற்றி கூறியபோது, அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
அப்போது என்னிடம் பேசிய மோடி, 'உங்களுடைய இந்த படம், அடுத்த தலைமுறையினருக்கு உத்வேகம் கொடுப்பதோடு மட்டுமின்றி, நீங்கள் வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற, இறக்கங்கள், இந்த உலகில் உள்ள அனைவரும் சவால்களை சந்தித்தே ஆக வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமையும். நீங்கள் சவால்களைத் தாண்டி சாதித்திருக்கிறீர்கள். இது அனைவருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும்' என தெரிவித்தார் என்றார்.
இது தொடர்பாக டுவிட்டரில் மோடி கூறியிருப்பதாவது: சச்சினுடனான சந்திப்பு இனிதாக அமைந்தது. அவருடைய வாழ்க்கைப் பயணமும், சாதனையும் 125 கோடி இந்திய மக்களையும் பெருமையடையச் செய்துள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.
நடிக்க மறுப்பு: பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சச்சின், தனது படம் குறித்து மேலும் கூறியதாவது: இந்த படத்தின் தயாரிப்பாளரான ரவி பக்சந்த்கா 2012-இல் என்னை சந்தித்தார். அப்போது எல்லா விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையையும் படமாக்க விரும்புகிறேன். உங்களின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக்க வேண்டும் என கேட்டார். அப்போது நான் நடிக்கமாட்டேன் என ஆரம்பத்தில் மறுத்தேன். சில காலங்களுக்குப் பிறகே நடிக்க ஒப்புக்கொண்டேன்.
ஏனெனில் எனது விஷயத்தில் புனைவு கதைகளை இணைப்பது சரிப்பட்டு வராது என நம்பினேன். எனது வாழ்வில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். நான் 55 ரன்கள் அடித்திருந்தால், அதையும் ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். எனவே அதை 155 ரன்களாக மாற்ற முடியாது என்றேன். அதைக் கேட்ட ரவி, உங்கள் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்கள் மட்டுமே படமாக்கப்படும் என உத்தரவாதம் கொடுத்தார்.
என்னைப் பற்றி நானே பேசுவதற்கு கடினமாக இருந்தது. அதனால் என்னைப் பற்றி மற்றவர்களை பேச வைத்தோம். நான் எப்போதுமே இந்தியாவுக்காக மட்டுமே விளையாட விரும்பினேன். மற்ற விஷயங்கள் எல்லாம் தானாகவே நடந்தது. உலகக் கோப்பை போட்டியில் விளையாடியபோது மட்டும் இந்தியாவுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வேட்கையோடு ஆடினேன். இந்தப் படம் இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான தருணங்களை நினைவுபடுத்துவதாக அமையும் என்றார்.
சூதாட்டம்: 2000-இல் நடைபெற்ற இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் தொடரின்போது நடந்த சூதாட்டம் கிரிக்கெட் உலகையே உலக்கியது. அது குறித்து சச்சின் தனது படத்தின் இறுதியில் பேசுவதாக 'டிரெயிலர்கள்' காட்டப்படுகின்றன.
அது குறித்து சச்சின் கூறுகையில், 'எனது வாழ்க்கை ஏற்ற, இறக்கங்களைக் கொண்டது. அது எல்லா விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையிலும் ஒரு பகுதிதான். ஆனால் சூதாட்ட விவகாரத்தால் எனக்கு ஏற்பட்ட அனுபவம், எல்லோருக்கும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அது தொடர்பாக எனக்குத் தெரிந்த விஷயங்களை சொல்லியிருக்கிறேன். அதை நீங்கள் அனைவரும் திரைப்படத்தில் பார்ப்பீர்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் நான் ரன் குவித்த நேரத்திலும், ஏற்ற, இறக்கங்களை சந்தித்தபோதும் எனது மனநிலை எப்படியிருந்தது என்பது யாருக்கும் தெரியாது. அதைப் பற்றி இந்தப் படத்தில் பேசியிருக்கிறேன். எனது அம்மா, மனைவி, சகோதரர், சகோதரி ஆகியோரும் என்னை பற்றி இந்தப் படத்தில் பேசியிருக்கிறார்கள்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com