நடாலின் "நம்பர்-10' கனவு நனவாகுமா? 

களிமண் ஆடுகளத்தின் முடிசூடா மன்னனான ஸ்பெயினின் ரஃபேல் நடால், களிமண் ஆடுகளமான ரோலன்ட் கேரஸில் இன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் களமிறங்க காத்திருக்கிறார்.
நடாலின் "நம்பர்-10' கனவு நனவாகுமா? 

களிமண் ஆடுகளத்தின் முடிசூடா மன்னனான ஸ்பெயினின் ரஃபேல் நடால், களிமண் ஆடுகளமான ரோலன்ட் கேரஸில் இன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் களமிறங்க காத்திருக்கிறார்.
பிரெஞ்சு ஓபனில் இதுவரை 9 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான நடால், இப்போது 10-ஆவது பட்டம் வெல்வதில் தீவிரமாக இருக்கிறார். 10-ஆவது பட்டத்தை வெல்ல வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் என்றுகூட சொல்லலாம். ஏனெனில் இந்த பட்டம்தான் அவருடைய டென்னிஸ் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கப் போகிறது.
2005 பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் முதல் கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றிய நடாலுக்கு, அதன்பிறகு ஏறுமுகம்தான். 2010-இல் அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றபோது, "ஓபன் எரா'வில் இளம் வயதில் (24 வயது) "கேரியர் கிராண்ட்ஸ்லாம்' (ஆஸி. ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகியவற்றில் பட்டம் வெல்வது) வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதுதவிர "ஓபன் எரா'வில் ஆன்ட்ரே அகஸ்ஸிக்குப் பிறகு "கோல்டன் கிராண்ட்ஸ்லாம்' (ஆஸி.ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன், ஒலிம்பிக் ஆகியவற்றில் சாம்பியன் ஆவது) வென்ற 2-ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். பிரெஞ்சு ஓபனில் 2014-இல் பட்டம் வென்றபோது அதில் அதிகமுறை (9 முறை) சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையும் அவர் வசமானது.
14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான நடாலுக்கு 2013-க்குப் பிறகு இறங்குமுகமாக அமைந்தது. கடந்த 3 ஆண்டுகளில் ஒரேயொரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் (2014 பிரெஞ்சு ஓபன்) மட்டுமே வென்றிருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளுமே அவருக்கு பெரும் சோதனையாக அமைந்தன. தோல்வி மேல் தோல்வியும், தொடர் காயங்களும் நடாலின் டென்னிஸ் வாழ்க்கையை புரட்டிப் போட்டன.
நடால் இனி சரிவிலிருந்து மீள்வாரா? இன்னொரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வாரா? மீண்டும் ஃபார்முக்கு திரும்புவாரா என பல கேள்விகள் எழுந்தன. அவரும் நம்பிக்கை இழந்தவராகவே காணப்பட்டார். அவருடைய ஆட்டத்திலும் ஆக்ரோஷம் இல்லை. சர்வதேச டென்னிஸில் நடாலின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டதோ என்ற சந்தேகமும் எழுந்தது.
அந்த தருணத்தில் ஒன்று பயிற்சியாளரை மாற்ற வேண்டும். இல்லையெனில் டென்னிஸிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் நடால். ஆனால் அந்த இரண்டில் எந்த முடிவை எடுத்தாலும், அது அவருக்கு மிகப்பெரிய இழப்பாகவே அமையும் என்பதால் மெளனம் காத்தார். ஓய்வு பெறுவது என்பது மிக முன்கூட்டியே எடுத்த முடிவாக இருக்கும். அதேநேரத்தில் பயிற்சியாளரான சித்தப்பாவால்தான் டென்னிஸில் சாதிக்க முடிந்தது என தீர்க்கமாக நம்பினார் நடால்.
ஃபார்மை இழந்து பின்னடைவை சந்திக்கும்போது உத்வேகம் பெறுவதற்காக பயிற்சியாளரை மாற்றுவது என்பது விளையாட்டின் ஒரு பகுதிதான். அது நடாலுக்கும் தெரியும். எனினும் அமைதிக் காத்த நடால், 2016 பிரெஞ்சு ஓபனில் காயம் காரணமாக 2-ஆவது சுற்றோடு வெளியேறினார்.
ஒரு கட்டத்தில் டென்னிஸ் வாழ்க்கை மட்டுமல்ல, சித்தப்பாவுடனான உறவும் பாதிக்கப்படக்கூடாது என நினைத்த நடால், கடந்த டிசம்பரில் தனது பயிற்சியாளர் குழுவில் கார்லஸ் மோயாவை இணைத்தார். இதன்பிறகு நடாலின் ஆட்டம் மேம்பட, கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிச் சுற்று வரை முன்னேறினார்.
கடந்த பிப்ரவரியில் வேறு வழியின்றி தனது சித்தப்பாவை பிரிந்த நடால், மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் 10-ஆவது பட்டம் வென்றதோடு, ஒரே போட்டியில் 10 பட்டங்களை வென்றவர், களிமண் தரையில் 50 பட்டங்கள் வென்ற முதல் நபர் என்ற சாதனைகளை படைத்தார்.
அதைத் தொடர்ந்து பார்சிலோனா ஓபனில் 10-ஆவது பட்டம் வென்ற நடால், சமீபத்தில் நடைபெற்ற மாட்ரிட் ஓபனிலும் சாம்பியன் ஆனார். அதன் மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டியில் அதிக பட்டம் வென்றவரான ஜோகோவிச்சின் சாதனையை (30 பட்டங்கள்) சமன் செய்தார்.
ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் காலிறுதியோடு வெளியேறிய நடால், "அடுத்த சில தினங்கள் மீன் பிடிப்பேன் அல்லது கோல்ஃப் விளையாடுவேன். அதன்பிறகு பிரெஞ்சு ஓபனில் களமிறங்கவுள்ளேன்' என கூறிச் சென்றிருக்கிறார். தோல்விகளால் துவண்டு போயிருந்த நடால், சமீபத்திய வெற்றிகளால் நம்பிக்கை பெற்றிருப்பதை அவருடைய பேச்சில் உணர முடிகிறது. அவருடைய ஆட்டத்தில் பழைய ஆக்ரோஷம் தென்படுவதைப் பார்க்க முடிகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் அவர் பெரிய அளவில் சாதிக்காவிட்டாலும், அவரை வீழ்த்திய பெரும்பாலானவர்கள் அடுத்த சுற்றில் தோற்றிருக்கிறார்கள் அல்லது காயம் காரணமாக வெளியேறியிருக்கிறார்கள். அதற்கு காரணம் நடாலை வீழ்த்த அவர்கள் போராடியதும், அபரிமிதமான ஆற்றலை செலவிட்டதும்தான். அதுதான் அவர்களை காயத்திலோ அல்லது களைப்பிலோ தள்ளியிருக்கிறது. இதிலிருந்தே நடால் எவ்வளவு வலுமிக்க வீரர் என்பதை உணரலாம்.
பிரெஞ்சு ஓபனில் நடாலை சந்திப்பது என்பது யானையை எறும்பு எதிர்கொள்வதைப் போன்றதாகும். இந்த முறை பிரெஞ்சு ஓபனில் அவர் நிச்சயம் பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பைத் தவறவிட்டால், இனி கிராண்ட்ஸ்லாம் பட்டமே வெல்ல முடியாமல் போகும், தனது டென்னிஸ் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் என்பதை நடாலும் உணர்ந்திருப்பார். அதனால் இந்த முறை பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்று, சர்வதேச டென்னிஸில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த நடால் முயற்சிப்பார் என நம்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com