பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தேன்: ரோஹித் சர்மா

கடைசிக் கட்ட ஓவர்களில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது என்று மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தேன்: ரோஹித் சர்மா

கடைசிக் கட்ட ஓவர்களில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது என்று மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் புணேவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த ஓவரை வீசிய மிட்செல் ஜான்சன், மனோஜ் திவாரி, ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரை வீழ்த்தியதோடு, 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது.
நம்பிக்கை: ஆட்டம் முடிந்த பிறகு வெற்றி குறித்து ரோஹித் சர்மா கூறியதாவது:
ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. எங்கள் பந்துவீச்சாளர்கள் அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். கடைசி 3 ஓவர்களில் புணேவின் வெற்றிக்கு 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. அந்தத் தருணத்திலும் எங்கள் பந்துவீச்சாளர்கள் வெற்றி தேடித்தருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. இதற்கு முன்னர் விளையாடிய ஆட்டங்களில் இக்கட்டான தருணங்களில் அவர்கள் சிறப்பாக பந்துவீசி வெற்றி தேடித் தந்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டேன். நீங்கள் நினைப்பதை செயல்படுத்துங்கள். அதற்கேற்றவாறு பீல்டிங்கை அமைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டேன். இந்த இறுதி ஆட்டம், மிகச்சிறந்த ஆட்டமாகும். இது ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக அமைந்திருக்கும். 129 ரன்கள் என்ற எளிதான இலக்கை எட்டவிடாமல் புணேவை சுருட்டியிருப்பது மிக அற்புதமான முயற்சியாகும். இதற்குமேல் பந்துவீச்சாளர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது.
இதுபோன்ற குறைவான ரன்களை சேர்த்துவிட்டு, அதில் வெற்றி பெற வேண்டுமானால், அதற்கு முதலில் நம்பிக்கை தேவை. நாங்கள் பீல்டிங் செய்ய களமிறங்கும்போது, கொல்கத்தாவையே 105 ரன்களுக்கு சுருட்டியிருக்கிறோம். அதனால் புணேவையும் சுருட்ட முடியும் என கூறினேன் என்றார்.
வெற்றியின் ரகசியம்: மேலும் சில கேள்விகளுக்குப் பதிலளித்த ரோஹித் சர்மா கூறியதாவது: தனிப்பட்ட ஒருவரின் சிறப்பான ஆட்டத்தால் ஒரு சில ஆட்டங்களில் வெற்றி தேடித்தர முடியும். ஆனால் கோப்பையை வெல்ல வேண்டுமானால், அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும். இதுதான் எங்களுடைய வெற்றியின் ரகசியம்.
மூன்று முறை எங்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த மூன்றுமே சிறப்புமிக்கதுதான். ஒரு போட்டியின் தொடக்கத்தில் நாம் எப்படி தயாராகிறோம். சரியான வீரர்கள் கூட்டணியை எப்படி தேர்வு செய்கிறோம் என்பது முக்கியமானது.
கடைசி ஓவரில் ஸ்மித்தை வீழ்த்த எந்தவொரு சிறப்பு திட்டமும் வகுக்கவில்லை. அதேநேரத்தில் ரன் எடுக்கவிடாமல் அவருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அவர், வேகப்பந்து வீச்சில்தான் ரன் எடுக்க முயற்சித்தார். அதுகுறித்து ஜான்சனிடம் ஆலோசித்தேன். காற்றுக்கு எதிராக ஜான்சன் பந்துவீசினார். காற்றுக்கு எதிராக அடிக்கும்போது அது ஸ்மித்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் என நினைத்தோம். அதே போன்று நடந்தது என்றார்.

ஐபிஎல் நாயகர்கள்!

டேவிட் வார்னர் 641
இந்த சீசனில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் 641 ரன்களுடன் முதலிடத்தைப்பிடித்தார்.

புவனேஸ்வர் குமார் 26
இந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை ஹைதராபாத் வீரர் புவனேஸ்வர் குமார் தட்டிச் சென்றார். 14 ஆட்டங்களில் விளையாடிய அவர் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த சீசனிலும் புவனேஸ்வர் குமார்தான் அதிக விக்கெட் (23) வீழ்த்தினார்.

26 சிக்ஸர்
இந்த சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசியவருக்கான விருது பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெலுக்கு கிடைத்தது. அவரும், வார்னரும் தலா 26 சிக்ஸர்களை விளாசியிருந்தனர். எனினும் அதிக தூரம் சிக்ஸர் அடித்ததன் அடிப்படையில் மேக்ஸ்வெலுக்கு விருது கிடைத்தது.

அதிவேக அரை சதம்
இந்த சீசனில் அதிவேக அரை சதமடித்தவருக்கான விருது கொல்கத்தா நைட் ரைடர்ஸின் சுநீல் நரேனுக்கு கிடைத்தது. சுழற்பந்து வீச்சாளரான நரேன், இந்த சீசனில் தொடக்க வீரராக களமிறங்கி அசத்தினார். பெங்களூருக்கு எதிராக அவர் 15 பந்துகளில் அரை சதம் கண்டார்.

வளர்ந்து வரும் வீரர்
இந்த சீசனில் சிறந்த வளர்ந்து வரும் வீரர் விருது குஜராத்தின் பாசில் தம்பிக்கு வழங்கப்பட்டது. அவர் இந்த சீசனில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மதிப்புமிக்க வீரர்
இந்த சீசனின் மதிப்புமிக்க வீரர் விருது புணே ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸýக்கு வழங்கப்பட்டது. அவர் 12 ஆட்டங்களில் விளையாடி ஒரு சதத்துடன் 316 ரன்களும், 12 விக்கெட்டுகளும் எடுத்தார்.

யுவராஜ், கம்பீருக்கு விருது
பார்வையாளர்களை பரவசப்படுத்தும் வகையில் கவர்ச்சிகரமான ஷாட்டை ஆடியதற்கான விருது யுவராஜ் சிங்கிற்கும், சிறந்த "ஸ்டைலிஷ்' பேட்ஸ்மேன் விருது கெளதம் கம்பீருக்கும், சிறந்த கேட்சுக்கான விருது சுரேஷ் ரெய்னாவுக்கும், ஃபேர் பிளே விருது குஜராத் அணிக்கும், சிறந்த ஆடுகள அமைப்புக்கான விருது பஞ்சாப் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்கங்களுக்கும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com